Search This Blog n

16 January 2013

குடிநீருக்காக பரிதவிக்கும் பொதுமக்கள் தண்ணீர் பஞ்சம்!

ஆத்தூர் பகுதியில், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, சேகோ ஆலையில், மரவள்ளி கிழங்கு அரவைக்கு தேக்கி வைத்துள்ள, "பாசான்' படிந்த நீரை, பொதுமக்கள் குடிநீருக்கு பிடித்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில், 33 வார்டுகளும், நரசிங்கபுரம் நகராட்சியில், 18 வார்டுகளும் உள்ளன. இங்கு வசிக்கும், 1.20 லட்சம் மக்களுக்கு, மேட்டூர் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், பொது கிணறு, ஆழ்துளை கிணறு மற்றும் முட்டல் நீரேற்றும் நிலையம் மூலம், உப்பு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பருவ மழை பொய்த்துபோனதால், வசிஷ்ட நதி உள்ளிட்ட நீர் நிலைகள் கடும் வறட்சி ஏற்பட்டதோடு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. அதனால், ஆழ்துளை கிணறு, பொது கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், வார்டுகளுக்கு உப்பு தண்ணீர் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி வார்டுகளில், 40 நாட்களுக்கு மேலாகியும், காவிரி குடிநீர் சப்ளை வழங்காததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையில், குடிநீர் இல்லாததோடு, நகராட்சி நிர்வாகமும் குடிநீர் சப்ளைக்கு மாற்று ஏற்பாடு செய்யாததால், ஆத்தூர் நகர பகுதி மக்கள், கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தண்ணீருக்காக, கண்ணீருடன் பரிதவித்து வருகிறன்றனர். ஆத்தூர் நகராட்சி, 33வது வார்டு, வி.வி., காலனி, பைத்தூர் ரோடு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, உப்பு தண்ணீர் மற்றும் காவிரி குடிநீர் சப்ளை செய்ய, பைப் லைன் இல்லாததால், லாரி மூலம் வழங்கி வந்தனர். தற்போது, குடிநீர், உப்பு தண்ணீர் சப்ளை வழங்காததால், அப்பகுதியில் உள்ள சேகோ ஃபேக்டரியில், மரவள்ளி கிழங்கை அரவை செய்வதற்காக, தொட்டிகளில் தேக்கி வைத்துள்ள, "பாசான்' படிந்த உப்பு தண்ணீரை குடம் உள்ளிட்ட பாத்திரங்களில் பிடித்து சென்றனர். பல நாட்களாக, தொட்டியில் தேக்கி வைத்துள்ள தண்ணீரை பயன்படுத்தினால், காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் ஏற்படும். தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, அவற்றை பொருட்படுத்தாமல், "குட்டை' தண்ணீரை பிடித்து செல்லும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது. நேற்று, மதியம், 12.30 மணியளவில், ஆத்தூர் வழியாக கூலமேடு கிராமத்துக்கு சென்ற, சேலம், டி.ஆர்.ஓ., பிரசன்னவெங்கடேசனிடம், ஆத்தூர் நகராட்சி, சேர்மன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், குடிநீர் சப்ளை வழங்கும்படி தெரிவித்தனர். ""குடிநீர் சப்ளை பாதிப்பு குறித்து, நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, டி.ஆர்.ஓ., உறுதியளித்தார். இதுகுறித்து, சேலம் டி.ஆர்.ஓ., பிரசன்னவெங்கடேசன் கூறியதாவது: ஆத்தூர் நகராட்சிக்கு, காவிரி குடிநீர் சப்ளை பாதிப்பு ஏற்பட்டதால், 40 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்க முடியவில்லை. சேலம் அம்மாபேட்டையில், ஆத்தூருக்கு வரும் தண்ணீரை, சேலம் மாநகராட்சிக்கு எடுத்துக் கொள்வதாகவும், குடிநீர் சப்ளை முறைப்படுத்தி வழங்க வேண்டும் என, சேர்மன் உள்ளிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். அம்மாபேட்டை, "பம்பிங்' பகுதியில், சேலம் மாநகராட்சி மற்றும் ஆத்தூர் பகுதிக்கு ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப குடிநீர் சப்ளை வழங்கப்படுகிறதா என, குடிநீர் வடிகால்வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு, ஆத்தூருக்கு செல்லும் குடிநீர் எடுப்பது தெரியவந்தால், மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுநாள் வரை, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள குடிநீர் பிரச்னை குறித்து, நகராட்சி நிர்வாகம், தெரியப்படுத்தவில்லை. குடிநீர் சப்ளை குறித்த விபரங்கள் தெரிவிக்கும்படி, நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆத்தூர் பகுதிக்கு ஒதுக்கீடு அளவுக்கு ஏற்ப குடிநீர் சப்ளை வழங்கப்படும்.

0 கருத்துகள்:

Post a Comment