Search This Blog n

09 January 2013

மொத்த சொத்து மதிப்பிற்கு இணையாக ஒரே ஒரு நிறுவனம் அமைக்கும் ராமலிங்கம்


ர்ம நாவல் போல் திருப்பங்களுடன் செல்கிறது ராமலிங்கம் விவகாரம்
27,500 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலரை வைத்திருந்ததாக சிக்கி இருக்கும் ராமலிங்கத்​தைக் கருவி யாகப் பயன்படுத்தி தொழில் அதிபர்களோ அரசியல் வி.ஐ.பி-களோ பின்னணியில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை சி.பி.ஐ-யும், தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. பிரிவும் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். இந்தக் கேள்விக்கு மட்டும் ராமலிங்கமும் சரிவரப் பதில் சொல்லாமல் சமாளித்து வருகிறார்.

இந்த நிலையில், ராமலிங்கத்திடம் அடுத்தக் கட்ட விசாரணை நடத்துவதற்காக சென்னைக்கு வரும்படி சம்மன் அனுப்பி இருந்தனர் வருமான வரித் துறையினர். அதைத் தொடர்ந்து, ஜனவரி 4-ம் தேதியன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வந்தார் ராமலிங்கம். அங்கே, உயர் அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் ராமலிங்கத்திடம் துருவித் துருவி விசாரித்தனர். 'ராமலிங்கத்திடம் நடந்த விசாரணை தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியே சொல்லக் கூடாது’ என்று அங்குள்ள அதிகாரிகளுக்குத் தடை விதித்து இருக்கிறார் உயர் அதிகாரி ஒருவர். இதைத் தான் அந்த அலுவலக கீழ்மட்ட அலுவலகர்கள் சஸ் பென்ஸாகப் பேசிக்கொண்டனர். 'எவ்வளவோ பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் இங்கே விசாரணைக்கு வந்தது உண்டு. அப்போது காட்டாத கெடுபிடியை, ராமலிங்கம் விஷயத்தில் எங்களிடம் காட்டுகிறார்கள். அதுதான் எங்களுக்குப் புரிய வில்லை'' என்கிறார்கள்.

இதேபோல், தாராபுரத்தில் உள்ள வங்கிகள் சிலவற்றின் உயர் அதிகாரிகளுக்கும் மேலிடத்தில் இருந்து ரகசியம் காக்கும்படி உத்தரவு வந்து இருக்​கிறதாம். வங்கி அதிகாரிகளிடம் யாராவது போய் ராம​லிங்கம் என்று ஆரம்பித்​தாலே, அவர்கள் நழுவுகிறார்கள். சென்னையில் நடந்த விசாரணையை சி.பி.ஐ-யின் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்தனர். வருமான வரித் துறை அதிகாரிகளோ, 'கடந்த நான்கு வருடங்​களாக ராமலிங்கம் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யவில்லை. முதல்கட்ட விசாரணையில் அவரது பதில் திருப்திகரமாக இல்லை. அவரிடம் உள்ள பத்திரங்களின் உறுதித்தன்மை குறித்து சில விவரங்களை அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்டு இருக்கிறோம். மற்றபடி, சி.பி.ஐ-யிடம் விசாரணையை மாற்றும் எண்ணம் இல்லை. நாங்களே விசாரிப்போம்'' என்கிறார்கள். ஆனாலும், டெல்லி மேலிட உத்தரவின்படி, இந்த விவகாரத்தின் ஆரம்பம் முதல் சி.பி.ஐ. ரகசியமாகப் பின்தொடர்கிறது.


பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர், ''ராமலிங்​கத்தை வருமான வரித் துறையினர் வளைத்ததே வித்தியாசமானது. பிரபல வங்கி ஒன்றை பிரேசில் நாட்டு பாண்டு இருப்பதாக சொல்லி அணுகி இருக்கிறார் ராமலிங்கம். சந்தேகப்பட்ட அவர்கள் வருமான வரித் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, பவர் ஏஜென்ட் என்ற போர் வையில் வருமான வரித் துறையினர் அனுப்பிய நபர்கள் ராமலிங்கத்தைச் சந்தித்தனர். 'உங்களிடம் இருப்பதாகச் சொல்லும் பாண்டுகளைக் காட்டுங்கள். பணக்காரர்களிடம் கேன்வாஸ் செய்து வங்கிகளைவிட அதிகமாக நீங்கள் எதிர்பார்க்கும் விஷயத்தைச் செய்து தருகிறோம்' என்று சொல்லி இருக்கிறார்கள். அதை நம்பி தன்னிடம் உள்ள பாண்டுகளை ராமலிங்கம் காட்டி இருக்கிறார். அவற்றை வாங்கிப் பார்த்த பிறகுதான், வருமான வரித் துறையினர் ரெய்டுக்குப் போனார்கள்'' என்றார்.

இது ஒருபுறம் இருக்க... தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீ​ஸாரும் ராமலிங்கத்தின் முழு ஜாதகத்தை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். பொள்ளாச்சி முதல் தாராபுரம் வரை ராமலிங்கத்தின் பூர்வீகத்தை ஸ்கேன் செய்து விட்டனர்.

விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரி​களிடம் பேசியபோது, ''தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் மத்திய நிதித் துறை அமைச்சராக இருக்கிறார். அவரது நிர்வாகத்தின் கீழ்தான் வருமான வரித் துறை வருகிறது. ராமலிங்கமும் காங்கிரஸ் அனுதாபி என்கிறார். எனவே, இந்த விவகாரத்தில் ஏதாவது அரசியல் தலையீடு இருக்கிறதா என்று நாங்கள் விசாரிக்கிறோம். இதே ராமலிங்கம் தாராபுரத்தில் ஓரிரு முறை பண விவகார சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளார் என்றும் கேள்விப்படுகிறோம். இதெல்லாம் நிஜமா, இதுமாதிரி சந்தர்ப்பங்களில், ராம லிங்கத்துக்கு ஆதரவாகத் தலையிட்ட பிரபலங்கள் யார் யார் என்று விவரத்தைச் சேகரித்து வருகிறோம். கரூரில் உள்ள பிர பலத் தொழில் அதிபர் அடிக்கடி தாராபுரம் வந்து போயிருக்கிறார். அவருக்கும் ராமலிங்கத்துக்கும் தொடர்பு உண்டா என்றும் பார்க்கிறோம். திருப்பூரில் கொடிகட்டிப் பறக்கும் பண முதலாளி ஒருவர், பல கோடி ரூபாய் அளவுக்கு பாண்டு இருப்பதாகச் சொல்லி, சக பணக்காரர்களிடம் கேன்வாஸ் செய் கிறார். இதற்கு அவர் சொன்ன கதை பிரேசில், அமெரிக்கா... என்றெல்லாம் நீண்டதாம். எதை வைத்து அப்படிச் சொன்னார் என்பது பற்றி விசாரிக்கிறோம். தங்களை ஏஜென்ட் என்று சொல்லிக்கொண்ட பலர் வெளிநாட்டு பாண்டு கைவசம் இருப்பதாகச் சொல்லி, அதை ஈடாக வைத்துக்கொண்டு பணம் தர முடியுமா என்று தொழில் அதிபர்களை நாடி இருக்கிறார்கள். இவர்களை யார் இயக்கியது என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது'' என்கிறார்கள்.

கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வக்கீல் சுபி. தளபதி, ''இரண்டு வருடங்களுக்கு முன், ராமலிங்கம் விவகாரத்தைப்போலவே பவானியில் வேறு ஒரு விவகாரம் கிளம்பியது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிரேசில் நாட்டு பாண்டுகளை இரண்டு எழுத்து பிரமுகரிடம் இருந்து வருமான வரித் துறையினர் கைப்பற்றி விசாரித்தனர். பெரிய பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. ஒரு கட்டத்தில், 'அவை செல்லாத பாண்டுகள் என்று அந்த நாட்டு அரசாங்கமே அறிவித்து ஏழு வருடம் ஆச்சு' என்று சொல்லி வருமான வரித் துறையினர் அந்த ஃபைலை மூடி விட்டனர். அதே போலவே, இப்போது தாராபுரத்திலும் பிரேசில் நாட்டு பாண்டு என்று ராமலிங்கம் சொல்கிறார். முன்னதன் தொடர்ச்சியாகக்கூட இது இருக்கலாம். இதுவும் ஒரு வேளை வருமான வரித் துறையினரால் ஏதாவது காரணம் சொல்லி மூடப்படலாம். எனவே, சி.பி.ஐ. தலையிட்டு இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும்'' என்கிறார்.


''காதல் கடிதங்களையும் அள்ளிட்டு போயிட்டாங்க!''

சென்னையில் வருமான வரித் துறையினரின் விசாரணையை எதிர்கொண்ட பிறகு, தாராபுரம் திரும்பிய ராமலிங்கத்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம்.

''27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் பத்திரங்கள் வாங்கும் அளவுக்கான பணம் உங்களுக்கு எங்கு இருந்து கிடைத்தது?''

''பிரேசில் நாட்டைச் சேர்ந்த டேனியல் என்பவரிடம் இருந்து அந்தப் பத்திரங்களை விலைக்கு வாங்கினேன். அது இன்னும் காலாவதி ஆகாத பத்திரங்கள் என்பது உண்மை. 27 ஆயிரம் கோடி ரூபாய் பத்திரம் வாங்க, எனக்கு எங்கு இருந்து நிதி ஆதாரம் கிடைத்தது என்பதை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் சொல்லி விட்டேன். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்பது ஜனவரி 11-ம் தேதி அன்று நடக்கப்போகும் விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும். இருந்தாலும் விசாரணை முடிந்து ஊர் திரும்பியதும், பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்களுக்கும் சேர்த்து அந்த ரகசியத்தை உரக்கச் சொல்வேன்.''

''முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 1.25 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் ஆரம்பிக்கப்போகும் 'பரணிதர்ஷ்’ பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதலீடே அதைத் தாண்டுகிறதே? இது எப்படிச் சாத்தியம்?''

''அறிவைப் பயன்படுத்தினால் எத்தனை கோடிப் பணம் வேண்டும் என்றாலும் நம்மைத் தேடி வரும். நம் நாட்டில் புதிதாக யோசித்து வெற்றிகரமான தொழிலுக்கான புது ஐடியா கொடுத்தால். ஒரு கப் டீ கூட கிடைக்காது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் நாம் கொடுக்கும் ஐடியாக்கள் பிடித்துப்போனால், நம்மை நம்பி டாலர்களில் கொட்டுவார்கள். அதுபோல, அறிவைப் பயன்படுத்தி பணம் ஈட்டினேன். அதே முறையில் நான் அறிவைப் பயன்படுத்தி உருவாக்கிய புராஜெக்ட் மற்றும் திட்ட அறிக்கைக்கு வெளிநாட்டு முதலீட் டாளர்களைத் தேடப்போகிறேன்.

என் வீட்டில் ரகசிய அறைகள் உண்டு. அதனுள் வருமான வரித் துறை அதிகாரிகள் சென்று பார்த்தனர். ஆனால், அதனுள் ஒன்றும் இல்லை. மேலும் என் வீட்டில் இருந்த டீசல், மளிகைக் கடை முதற்கொண்டு காகிதம் என்று இருந்ததை எல்லாம் வருமான வரித் துறை அதிகாரிகள் வழித்து சென்று விட்டனர். நான் எழுதி வைத்திருந்த பழைய காதல் கடிதங்கள்கூட அதற்குத் தப்பவில்லை. வீட்டின் ஹாலில் உள்ள ஒரு அலமாரியை மட்டும் பூட்டி சீல் வைத்துப் போய் இருக்கிறார்கள் அதனுள் என்ன இருக்கிறது என்பது எனக்கே தெரியவில்லை.''

''உங்களை மத்திய அமைச்சர் ஒருவரின் பினாமி என்று சொல்கிறார்களே?''

''இந்தக் கேள்விக்கு மௌனமாக இருந்தேன் என்று எழுதிக்கொள்ளுங்கள்!'' என்றவர் சட்டென்று ஜாலி மூடுக்கு மாறி, ''மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 3,000 ஏக்கர் நிலம் வாங்குவேன். மூன்று ஆண்டுகளில் கட்டுமானப் பணி களை செய்து முடிப்பேன். இதன்மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன். இலவசக் கல்வி, குடியிருப்பு வசதிகளை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவேன். எனது நிறுவனக் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட, தினமும் தாராபுரத்தில் இருந்து தொண்டிக்குச் சென்றுவர 400 கி.மீ. பயணிக்க வேண்டும். 7 மணி நேரம் வேலை பார்க்க 8 மணி நேரம் பயணம் செய்ய முடியுமா? அதை மனதில் வைத்துதான், ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க உள்ளேன். தாராபுரத்தில் அதற்கான ஹெலிபேடும் அமைக்கப்போகிறேன்'' என்று கிறுகிறுக்க வைத்தார் ராமலிங்கம்

0 கருத்துகள்:

Post a Comment