Search This Blog n

24 January 2013

மருத்துவமனைகள் மீது சி.பி.ஐ மீது அதிரடி ரெய்டு

பல்மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்பு துவங்க லஞ்சம் பெற்றது தொடர்பாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 8 பல் மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு பல்மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கு அனுமதி கேட்டு டில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதன் பேரில், இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு கமிட்டி, கடந்த ஆண்டு, அக்டோபர் 5ம் திகதி ஆய்வு செய்தது. அப்போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதை நிவர்த்தி செய்யும்படி, கல்லூரி நிர்வாகத்துக்கு ஆய்வு கமிட்டி உத்தரவிட்டது.
இதற்கிடையே, முதுநிலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கு அனுமதி பெறுவதற்காக, இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினரான, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முருகேசனுக்கு, ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாகம், 1 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப் போவதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இம்மாதம், 7ம் திகதி, டாக்டர் முருகேசன் வீட்டை, சி.பி.ஐ., அதிகாரிகள், மாறுவேடத்தில் கண்காணித்தனர்.
அப்போது, ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாகிகள் ராமபத்திரன், கருணாநிதி, முன்னாள், எம்.எல்.ஏ., பழனி ஆகியோர், 25 லட்ச ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்த போது, அனைவரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆதிபராசக்தி கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடங்குவதற்கு, பல் மருத்துவ கவுன்சிலில் பொறுப்பு வகிப்பவர்கள் அனைவருக்கும், லஞ்சம் கொடுக்க முடிவு செய்ததாகவும், டாக்டர் முருகேசனுக்கு முதல் தவணையாக, 25 லட்சம் கொடுத்ததும் தெரிய வந்தது.
இந்த விவகாரத்தில், தமிழ்நாடு பல்மருத்துவ கவுன்சில் தலைவரும், இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான, டாக்டர் குணசீலன் உட்பட, பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக, டாக்டர் குணசீலனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விசாரணையில், லஞ்ச விவகாரத்தில், குணசீலனுக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இருந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் 3 பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 8 இடங்களில் உள்ள பல் மருத்துவக்கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, ஐதராபாத், மங்களூரு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.

0 கருத்துகள்:

Post a Comment