Search This Blog n

17 January 2013

விலைப்பட்டியல். கட்டாயமாக்குகிறது மத்திய அரசு.

டாக்டர் ஃபீஸ் - ரூ.100, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரூ.4,500, ஈ.சி.ஜி. - ரூ.150, ஐ.சி.யு. கேர் (ஒரு நாளுக்கு) - ரூ.2,000 - நீங்கள் நுழையும் ஒரு மருத்துவமனையில் இப்படி ஒரு விலைப் பட்டியல் இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு செலவாகும் என்பதை மனதுக்குள் ஒரு கணக்குப் போட்டுக்கொண்டு நிம்மதியாக டாக்டரை சந்திக்கலாம். இப்படி ஒரு விதியைக் கட்டாயமாக்கப் போகிறது மத்திய அரசு. மருத்துவமனைகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2011-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி இருக்கிறார்கள். மருத்துவமனைகள் ஒழுங்குமுறைச் சட்டம் என்ன சொல்கிறது? ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கும் வசதிகள், கொடுக்கப்படும் சிகிச்சைகள், ஆகும் செலவுகள் பற்றி நோயாளிகளுக்குத் தெரியும்படி போர்டு வைக்க வேண்டும். ஒவ்வொரு சிகிச்சைக்கும் என்ன கட்டணம் என்பதை​யும் பட்டியலாக வெளியிட வேண்டும். உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில் இந்த விலைப் பட்டியல் இருப்பது அவசியம். கிராமப்புற, நகராட்சி, மாநகராட்சி மருத்துவமனைகள் என்ற அடிப்படையில் சிகிச்சைக்​கான கட்டணங்கள் மூன்று வகையாகத் தரம் பிரிக்கப்படும். நகராட்சிகளில் உள்ள மருத்துவமனை என்றால், தேனியில் ஒரு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் எடுத்தால் எவ்வளவு சார்ஜ் செய்கிறார்களோ, அதே சார்ஜ்தான் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையிலும் இருக்க வேண்டும். தாம்பரத்தில் நீங்கள் காய்ச்சலுக்காக ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்றால் அதற்கு எவ்வளவு கன்சல்டிங் ஃபீஸ் வாங்குகிறாரோ, அதே சார்ஜ்தான் விழுப்புரத்திலும் இருக்கும். மருத்து​வமனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை எலெக்ட்ரானிக் டிவைஸ் ரெக்கார்டு மூலமாகப் பதிவுசெய்ய வேண்டும். நேஷனல் கவுன்சில் என்ற அமைப்பு தொடங்கப்​பட்டு, ஒட்டுமொத்த மருத்துவத் துறையையும் கண்​காணிக்கும். அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்தும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும். இந்த அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும். மாவட்ட கலெக்டர் அல்லது எஸ்.பி., மருத்துவத் துறையோடு சம்பந்தப்பட்ட என்.ஜி.ஓ. அமைப்பில் இருந்து ஒருவர், மருத்துவத் துறை சார்ந்த ஒருவர் என மூவர் அடங்கிய குழு மாவட்டம்தோறும் அமைக்கப்படும். அந்தக் குழு மருத்துவமனைகளைக் கண்காணிக்கும். மருத்துவப் படிப்பு முடித்த அத்தனை பேரும் மெடிக்கல் கவுன்சிலில் நிச்சயம் பதிவுசெய்ய வேண்டு மருத்துவர்கள் சிலரோ இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவரான டாக்டர் பிரகாசத்திடம் இது தொடர்பாகப் பேசினோம். ''மருத்துவம் படித்த அத்தனை பேரும் மெடிக்கல் கவுன்சிலில் பதிவுசெய்து இருக்க வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் போலி மருத்துவர்​களை ஒழிக்க முடியும். சிகிச்சைக்கு ஆகும் செலவுகளைப்பற்றி போர்டுவைக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது. இது என்ன ஹோட்டலா? இட்லி இவ்வளவு, மசால் தோசை இவ்வளவு என்று போர்டுவைப்பதற்கு? நோய் ஒன்றுதான். ஆனால், நோயின் தன்மை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். எனவே இந்த நோய்க்கு இவ்வளவு கட்டணம் என்று எப்படி வரையறுக்க முடியும் அதேபோல பிசியோதெரபி படித்தவர்கள் தனியாக கிளினிக் வைத்துக்​கொள்ள அந்தச் சட்டம் அனுமதிக்கிறது. பிசியோதெர​பிஸ்ட்கள் தனியாகச் சிகிச்சை அளிக்கவே முடியாது. ஒரு மருத்துவரின் மேற்பார்வை​யில்தான் அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மத்திய அரசின் மருத்துவமனைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. அதைச் சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்து இருக்கிறோம்'' என்றார். பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கமோ, ''உலகச் சுகாதார நிறுவனமும் மத்திய அரசும், பிசியோதெரபி மருத்துவர்கள் தனியாகச் சிகிச்சை அளிக்கலாம் என அங்கீகரித்து இருக்கிறது. தமிழகத்தில் இதை எதிர்ப்பது வேதனையாக இருக்கிறது'' என்கிறார்கள். மத்திய அரசின் இந்தச் சட்டம் பற்றி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், ''இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசு ஒரு கமிட்டி அமைத்து இருக்கிறது. சுகாதாரத் துறைச் செயலாளர் தலைமையில் இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷன் அமைப்பைச் சேர்ந்த​வர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்திவருகிறது. அந்தக் குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவமனைகள் ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்'' என்கிறார்.

0 கருத்துகள்:

Post a Comment