Search This Blog n

26 April 2013

மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு 20 ஆயிரம் ரூபாய் ,,,,

 
முதல்வர் ஜெயலலிதா, வீட்டு கூரைகளில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டு மானியம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சட்டசபையில் 110வது விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் தமிழகத்தில் 7,140 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதில் தமிழகத்தை முன்னிலையில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுளளன. மூன்றாண்டுகளில் 3,000 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூரிய மின் உற்பத்தியை மக்கள் இயக்கமாக மாற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது. வீட்டு கூரைகள் மீது சூரிய மின் உற்பத்தி சாதனைங்களைப் பொருத்தவும் ஊக்குவிக்கப்படுகிறது.
இதற்கு புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சகம் 30 சதவீத மானியம் வழங்குகிறது. இதோடு சேர்த்து யூனிட்டிற்கு முதல் இரு ஆண்டுகளுக்கு 2 ரூபாயும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு 1 ரூபாயும் மேலும் இரு ஆண்டுகளுக்கு 50 பைசாவும், தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகையாக அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் சூரிய மின் உற்பத்திக்கு முதலீட்டு மானியம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை ஏற்று வீட்டு கூரைகள் மீது சூரிய மின் உற்பத்தி செய்வோருக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டு மானியம் அளிக்கப்படும். இதன்மூலம் முதல் கட்டமாக, 10 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர் பயன் பெறுவர்.
காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தியால் கிடைக்கும் மின்சாரத்தை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் மின் உற்பத்தி அதிகரிக்கும் போது உபரி மின்சாரத்தை செலுத்தும் வகையில் மின் தொடரமைப்பு இல்லை. இதனால் கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை என்றார்.
இந்த குறையைப் போக்க மாநிலத்தின் தென் பகுதியில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த நெல்லை மாவட்டம் கயத்தாறிலிருந்து சென்னைக்கு மின்சாரத்தை கொண்டு வர 1,488 கி.மீ. நீளத்துக்கு 400 கிலோ வாட் மின் பாதை 2,300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இதைப் போல் கோவை,உடுமலைப்பேட்டை, தேனி பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை கொண்டு வர மின்பாதை அமைக்கப்படும். இதற்காக தேனி தப்பகுண்டு கோவை ஆனைக்கடவு, ராசிபாளையம் ஆகிய இடங்களில் 400 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
இதை கடத்திச் செல்ல 788 கி.மீ. நீளமுள்ள, 400 கிலோ வாட் மின் பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்படும். இத்திட்டத்திற்கு 1,230 கோடி ரூபாய் செலவிடப்படும். இவற்றோடு, நெல்லை கானார்பட்டியில் 150 கோடி ரூபாய் செலவில் 400 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
மின் பற்றாக்குறையைப் போக்க புதிய மின் உற்பத்தி நிலையங்களை துவக்குவதுடன் பற்றாக்குறையை 85 சதவீதம் வரை ஈடு செய்ய நீண்ட கால அடிப்படையில் மின் கொள்முதல் செய்ய ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும். முதல்கட்டமாக ஒக்டோபர் மாதம் முதல் மாதத்துக்கு 1,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். மாதந்தோறும் செய்யப்படும் கொள்முதல் அடுத்த 15 ஆண்டுகள் நீடிக்கும் என்று ஜெயலலிதா கூறினார்
 

0 கருத்துகள்:

Post a Comment