Search This Blog n

05 September 2014

நடிகர் ரொனால்டு கொலையில் நடிகை ஸ்ருதி சிக்கினார்

மதுரவாயலில் கடந்த மே மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சினிமா துணை நடிகர் ரொனால்டு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பெங்களூர்  நடிகை ஸ்ருதி சந்திரலேகா 8 மாதங்களுக்கு பின்னர் போலீசில் சிக்கியுள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே உள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸ் (36).
மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளையும் படித்துள்ளார். தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த ரொனால்டு பின்னர் அதனை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு ஆன்–லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக சென்னை வந்தார்.
மதுரவாயலில் தங்கி இருந்து தொழில் செய்து வந்த இவர், சினிமா படங்களுக்கு நிதி உதவியும் செய்து வந்தார். காதிதபுரம், கொக்கிரகுளம், நெல்லை மாவட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சினிமா துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் ரொனால்டுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் எப்போதும் கை நிறைய பணம், நகை ஆகியவை இருக்கும். சொகுசு கார் ஒன்றையும் வைத்திருந்தார்.
இவைகளை அபகரிப்பதற்காக ரொனால்டை கொலை செய்ய ஸ்ருதியும் ரொனால்டின் தொழில் கூட்டாளியான உமாசந்திரன் என்பவரும் திட்டம் போட்டனர்.
இதன்படி, கடந்த ஜனவரி மாதம் மதுரவாயலில் இருந்து ரொனால்டை காரில் கடத்தி கொலை செய்தனர். பின்னர் பாளையங்கோட்டையில் அவரது உடலை புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல இருந்து விட்டனர்.
கொலையையும் செய்து விட்டு நடிகை ஸ்ருதி மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அதில் எனது கணவர் ரொனால்டை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதன் மூலம் 2 பேரும் கணவன்–மனைவியாக வாழ்ந்ததும் உறுதியானது.
தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இப்படி நாடகமாடிய ஸ்ருதி பின்னர் தப்பி ஓடி தலைமறைவானார்.
இந்நிலையில்தான் ரொனால்டு கொலை செய்யப்பட்டது வெளியில் தெரிய வந்தது.
இக்கொலை தொடர்பாக பாளையங்கோட்டை செட்டி குளத்தை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ், சாந்தி நகரை சேர்ந்த காந்திமதி, ரபீக் ஆகிய 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஸ்ருதி பெங்களூருக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு விசாரணையை கோயம்பேட்டில் புதிதாக பொறுப்பேற்ற உதவி கமிஷனர் மோகன்ராஜ் முடுக்கி விட்டார். மதுரவாயல் சப்–இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் கடந்த 10 நாட்களாக பெங்களூரில் முகாமிட்டு ஸ்ருதியை தேடினர். இதன் விளைவாக ஸ்ருதி போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ருதி சிறையில் அடைக்கப்படுகிறார்.
இக்கொலைக்கான பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:–
ரொனால்டும், நெல்லை டவுனை சேர்ந்த உமா சந்திரன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆன்லைனில் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பிரின்ஸிடம், உமா சந்திரன் கேட்டார். ஆனால் அவர் தரமுடியாது என்று மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. பிரின்ஸ், உமா சந்திரனின் தொடர்பை துண்டித்தார். அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு பிரின்ஸ் சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வந்தார்.
இந்நிலையில் நடிகை சுருதி சந்திரலேகாவை சந்தித்தார். அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
அப்போது, பிரின்ஸ் வேறு பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சுருதி சந்திரலேகா, பிரின்சை வெறுக்க தொடங்கினார். வேறு வழியில்லாமலேயே அவருடன் வாழ்ந்து வந்தார்.
இதை அறிந்த உமா சந்திரன், சுருதியை தொடர்பு கொண்டார். அவர், ரொனால்டு என்னையும் ஏமாற்றி விட்டார். உன்னையும் ஏமாற்றி விட்டார். அவரை விட்டு வைக்கக் கூடாது என்று கூறினார். பின்னர் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18–ந் தேதி பிரின்ஸ் வீட்டிற்கு வந்தார். அப்போது, சுருதி பழரசத்தில் விஷம் கலந்து பிரின்ஸிடம் கொடுத்தார். பழரசம் குடித்த சிறிது நேரத்தில் பிரின்ஸ் மயங்கி கீழே விழுந்து இறந்து விட்டார்.
அங்கு மறைந்து இருந்த உமா சந்திரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் வந்தனர். அவர்கள் பிரின்ஸ் வைத்து இருந்த ரொக்கப்பணம் ரூ.75 லட்சம், கழுத்தில் அணிந்து இருந்த 14 பவுன் தங்க சங்கிலி, கையில் அணிந்து இருந்த வைர மோதிரம் ஆகியவற்றை எடுத்து கொண்டனர்.
பின்னர், பிரின்ஸின் உடலை காரில் ஏற்றி பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். காரில் உமா சந்திரன் கூட்டாளிகள் 2 பேர் வந்தனர். அவர்கள் ஏற்கனவே பாளையங்கோட்டையில் தன்னுடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்து ஆசீர்வாத நகரில் குழி தோண்டி தயாராக வைத்திருந்தனர். அந்த குழியில் பிரின்ஸ் உடலை போட்டு புதைத்தனர்.
இது நடந்து சில நாட்கள் கழித்து ரொனால்டின் சகோதரர் ஜஸ்டீன் நெல்லையில் இருந்து சென்னைக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தார். மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே சென்ற போது பிரின்சின் கார் நின்று கொண்டு இருந்தது.
அந்த காரில் நாகர்கோவிலைச் சேர்ந்த சுனில்குமார் என்பவர் இருந்தார். அவரிடம் இந்த கார் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று கேட்டார். அதற்கு அவர், உமா சந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பேசி ரூ.1 லட்சம் முன் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன் என்று கூறினார்.
ஏற்கனவே பிரின்சுக்கும், உமா சந்திரனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததை அறிந்த ஜஸ்டின் சந்தேகம் அடைந்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன் பிறகே இந்த வழக்கில் துப்பு துலங்கியது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரொனால்டிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.75 லட்சம் பணம், 14 பவுன் நகை ஆகியவை பற்றி நடிகை ஸ்ருதியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த பதில் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
போலீசிடம் ஸ்ருதி கூறியிருப்பதாவது:–
ரொனால்டிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது தந்தை ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். எங்களது குடும்பம் மிகவும் கஷ்டமான குடும்பம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உமாசந்திரன் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். அவர்தான் இந்த பணத்தை எங்காவது பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஸ்ருதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உமாசந்திரனை கடைசியாக எங்கு வைத்து சந்தித்தீர்கள், அப்போது என்ன பேசிக் கொண்டீர்கள் என்பது பற்றியெல்லாம் ஸ்ருதியிடம் விசாரித்து ஏராளமான தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.
இதை வைத்து உமாசந்திரனை பிடிக்கவும், ரூ.75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment