Pages

31 March 2013

சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் உண்ணாவிரதம்?



இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர்.
சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது.
தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும். உலகெங்கும் பரவிக் கிடக்கும் உறவுகள் சுதந்திர ஈழத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர்.
இவ்விரு நடிகர்களின் சென்னை மாவட்ட ரசிகர்கள் இணைந்து நாளை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் எதிரே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
10 கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1. தனித் தமிழீழம் அமைய ஈழத் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு
2. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப் படுகொலை என்பதற்கு அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கை அரசு மீது நடவடிக்கை
3. சர்வதேச அமைப்புகள் மூலம் நியாயமான போர்க்குற்ற விசாரணை
4. இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச மற்றும் இலங்கை இராணுவக் கட்டமைப்பை தண்டிக்க வகை செய்தல்
5. தமிழர் பகுதியிலிருந்து இராணுவத்தை முற்றிலுமாக வெளியேற்றுதல்
6. தமிழரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திருப்பித் தருதல் மற்றும் தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களை அப்புறப்படுத்துதல்
7. எந்தவித காரணமும் இல்லாமல் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் தமிழ் இளைஞர்களை விடுவித்தல்
8. யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துதல்
9. தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள கடற்படை மீது கடும் நடவடிக்கை
10. உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தனித் தமிழ் ஈழம் உள்ளிட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்றுதல்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.


பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை /



மத்தியப் பிரதேசத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணை இன்று தொடங்க உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுவிட்சர்லாந்து நாட்டு தம்பதிகள், ஒரு கிராமம் வழியாக வந்த போது, ஒரு கும்பல் அப்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது.
மார்ச் 15ம் திகதி கடந்த இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று சிறப்பு கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன் விசாரணைக்கு வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

புகார்: மாஜி அமைச்சர் கைது ???


வரதட்சணைப் புகாரில் சிக்கியதால், தலைமறைவாக இருந்த ஒடிசா மாநில முன்னாள் சட்ட அமைச்சர் ரகுநாத் மொஹந்தி, இன்று கைது செய்யப்பட்டார்.
அவருடன் இருந்த மனைவி ப்ரீத்தி லதாவை, ஒடிசா காவல்துறையின் மனித உரிமை பாதுகாப்பு குழு கைது செய்தது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரகுநாத் மொஹந்தியின், மருமகள் பர்சா ஸ்வோனி, தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து மொஹந்தியின் மகன் ராஜாஸ்ரீ, கட்டாக் நகரில் கைது செய்யப்பட்டார்.
புகாரில் சிக்கியதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரகுநாத் மொஹந்தி, பின்னர் தலைமறைவானார்.
இதே விவகாரம் தொடர்பாக ரகுநாத் மொஹந்தியின் மகள் ரூபா ஸ்ரீ மற்றும் மருமகன் ஆகியோர் பெயரும் புகாரில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், ரகுநாத் மொஹந்தி இன்று மேற்குவங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஷாலிமாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

28 March 2013

என் தலைமயின் கீழ் பாகிஸ்தான் செழிப்பாக இருந்தது:


இந்தியாவின் எல்லைக்குள் கடந்த 1999ம் ஆண்டு நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க முயன்றபொழுது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த தாக்குதல் நடைபெற்றபோது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷரப் பதவி வகித்தார். சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய முஷரப்பிடம் இச்சம்பவம் தொடர்பாக நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில், பாகிஸ்தானைப் பற்றியும் பாகிஸ்தானியர்களைப் பற்றியும் சிந்திப்பவர்களில் நானும் ஒருவன்.
கார்கில் ஆக்கிரமிப்புக் நடவடிக்கைக்காக நான் பெருமைப்படுகிறேன். எனது தலைமையின் பாகிஸ்தான் செழிப்பாக இருந்தது. அப்போது சமூக விரோத சக்திகள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக நான் தைரியமாக குரல் எழுப்பினேன். பாகிஸ்தானின் நலனை முன்னிட்டு தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரை ஆதரித்தேன்.
இந்த முடிவை நான் எடுத்திராவிட்டால் பாகிஸ்தானின் எதிர்காலம் வேறுமாதிரி ஆகியிருக்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில் முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் செல்வாக்கு நிறைந்த கராச்சியில் போட்டியிடுவேன் என்று கூறினார்
 

27 March 2013

ஜெயலலிதாவுக்கு சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை


முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று விடுத்த கோரிக்கையால், அவரது ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவாகும் என என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,
ஜெயலலிதாவின் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான இந்தக் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி நீக்கச் செய்யலாம் என்று எச்சரித்துள்ளார்.
 

நடக்கும் ஐ.பி.எல்லில் இலங்கை வீரர்களுக்கு தடை,,,



சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடினால் பிரச்சினை மேலும் அதிகமாகும் சூழ்நிலை உருவாகும்.
எனவே, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
அதில், இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.
இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்த தமிழக அரசு அனுமதியளிக்கும் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ஐ.பி.எல் தலைவரும் மத்திய இணை மந்திரியுமான சுக்லா கூறுகையில், "உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை புறக்கணிக்க முடியாது. ஆனால், திட்டமிட்டபடி சென்னை மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடக்கும், வேறு இடத்திற்கு மாற்ற முடியாது" என்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு உள்ள எதிர்ப்பு தொடர்பாகவும், முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை தொடர்பாகவும் இன்று ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, பாதுகாப்பு பிரச்சினை உள்ளதால் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில், சென்னை மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெறுகின்றன.
ஐ.பி.எல். அணிகளில் 13 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அகில தனஞ்செயா, நுவான் குலசேகரா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

26 March 2013

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இரயில் முன் விழுந்து


பீகார் ரோடாஸ் மாவட்டத்தை சேர்ந்த கர்பிகாயா ரெயில்நிலையம் சராகத்தில் இரு சிறுமிகள் உள்பட 4 பேர் சரக்கு ரெயிலின் வீல்களில் நசுக்கப்பட்டு கிடந்தனர்.
தேவன்பூர் ஆளில்லா ரெயில் கேட் அருகே கிடந்த இந்த 4 பேரின் சடலங்களை ரெயில்வே பாதுகாப்பு பொலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
 

மாவட்ட நீதிபதிக்கு தர்மஅடி கொடுத்த மனைவி மீது,,


சத்தீஸ்கரில் மாவட்ட நீதிபதியொருவர், அவர் மனைவி மற்றும் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மாவட்ட கோர்ட் நீதிபதியாக இருக்கும் அவினாஷ் திரிபாதி(வயது 33) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஆறு மாத குழந்தை உள்ளது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவினாஷ் மற்றும் பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
நேற்று முன்தினம், தன் தாய் மற்றும் சகோதரியுடன் அவினாஷ் வீட்டிற்கு சென்ற பிரியங்கா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அவினாஷை, பிரியங்காவும் மற்றவர்களும் அடித்து உதைத்ததோடு உருட்டுக்கட்டையாலும் தாக்கினர்.
பின்பு பிரியங்காவின் சகோதரரும் தந்தையும் அவரை தாக்கினர்.இவர்கள் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவினாஷை, அவர் நண்பரான மற்றொரு நீதிபதி மொபைல் போனில் அழைத்தார். அந்த மொபைல் போன் அழைப்பை பிரியங்கா துண்டித்ததும் சந்தேகமடைந்த, அவினாஷின் நண்பர் பொலிசுடன் அங்கு சென்றார்.
அப்போது பலத்த காயங்களுடன் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்த அவினாஷ், மீட்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவினாஷ் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி ஒருவர், அவர் மனைவி மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

25 March 2013

அல்லாவை தவிர நான் வேறு யாருக்கும் பயப்படமாட்டேன்:,,,


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (69). ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த இவர் கடந்த 1999 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார்.
2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து அவர் லண்டன் மற்றும் துபாய்க்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் வருகிற மே 11-ந் திகதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, அவர் இன்று மீண்டும் பாகிஸ்தான் திரும்ப திட்டமிட்டார். அவருக்கு தலிபான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர் பாகிஸ்தான் திரும்பினால் தற்கொலை படையினரால் கொல்லப்படுவார் என எச்சரித்தனர்.
அதை பொருட்படுத்தாத முஷரப் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் துபாயில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்டார். துபாயில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் தனது 94 வயது தாயாரை முத்தமிட்டு ஆசிபெற்றார்.
பின்னர் துபாய் விமான நிலையம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் ”நான் எனது நாட்டுக்கு திரும்பி செல்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என தெரிவித்தார். விமானம் மூலம் இன்று கராச்சி வந்த முஷரப்பை அவரது ஆதரவாளர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.
ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய முஷரப் கூறியதாவது:-
நான் இன்று மீண்டும் என் தாய் நாட்டிற்கு வந்திருக்கிறேன். நான்காண்டுகளுக்கு பிறகு மீண்டும் என் சொந்த மண்ணிற்கு வந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நான் வரவே மாட்டேன் என்று கூறியவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
அல்லாவை தவிர நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறப்பட்ட போதிலும் உயிருக்கு அஞ்சாமல் பாகிஸ்தானை காப்பாற்ற நான் மீண்டும் வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

24 March 2013

பூர்வகுடிகளின் நடைப்பயணம் வெற்றி


கனடாவில் ஐரோப்பியரின் வருகைக்கு முன் வாழ்ந்து வந்த பூர்வகுடிகள் ஏழு பேர், தங்களின் மொழி மற்றும் பண்பாட்டை வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய 1600 கிலோ மீற்றர் நடைபயணம் வரும் திங்களன்று நிறைவு பெறவுள்ளது.
ஜேம்ஸ் வளைகுடா பகுதியிலுள்ள கியுபெக் மாநிலத்தில் வாப்மாகூஸ்ட்யூ(Whapmagoostui) என்ற இடமே கிரீ மொழி பேசும் கனடாப் பழங்குடியினரின் தாயகமாகும்.
கிரீ மொழியினரின் தாயகமான வாப்மாகூஸ்ட்யூ என்ற இடத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி அன்று ஒரு வழிகாட்டியுடன் கூடிய ஆறு இளைஞர்கள் கொண்ட குழு தனது பண்பாட்டுப் பாதயாத்திரையை மக்கள் பயணம் என்ற பெயரில் தொடங்கியது.
தெரசா ஸ்பென்ஸி(Theresa Spence) என்பவர் “இனி சோம்பித் திரியோம்” என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கம் ஃவாஸ்ட் நேசன்(First nations ) எனப்படும் பழங்குடிகளையும் க்ரீ மொழி பேசும் மக்களையும் ஒன்று சேர்த்தது.
இதே போல் மற்ற பழங்குடிகள் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை உணரும் வகையில் இந்த நடைப்பயணத்தை கிரீ மொழியினர் நடத்தியுள்ளனர். ஆங்காங்கே பலர் இந்தப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தற்பொழுது கனடாவின் தலைநகரான ஒட்டாவாவிற்கு நடந்து வரும் மக்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இவர்கள் ஒட்டாவா சென்று சேர்ந்ததும் பாராளுமன்றம் இருக்கும் இடத்திற்கு சென்று ஊடகத்தினர் சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.
 

23 March 2013

சசிகலாவின் சகோதரர் கைது,?,?,?


முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரிஷியூர் கிராமத்தில் கஸ்தூரி என்பவரது வீடு இடிக்கப்பட்டது.
இது சம்பந்தமான வழக்கு கடந்த ஆண்டு நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, சசிகலா சகோதரர் திவாகரன் உள்பட சிலரை பொலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். அந்த வழக்கு தற்போது நீடாமங்கலம் ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களான ரிஷியூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமேனன், அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் ரிஷியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சோம.தமிழார்வனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சோம.தமிழார்வன் நீடாமங்கலம் பொலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து மன்னார்குடி பொலீஸ் துணை சூப்பிரண்டு அன்பழகன், மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் பொலீஸார் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் திவாகரனை நேற்று இரவு 7 மணிக்கு அவரது வீட்டில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திவாகரன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் அவரை நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக பொலீஸார் அழைத்துச் சென்றனர்.

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு .


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசிரியரை ஊர் மக்கள் ஒன்று கூடி தர்மஅடி கொடுத்தனர்.
பதினாறுபுதூரில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஜெயசந்திரன் என்ற அந்த ஆசிரியர் பாலியல் தொல்லை தருவதாக 5ம் வகுப்பு மாணவி ஒருவர் புகார் அளித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த மாணவியின் பெற்றோரும், மற்ற மாணவிகளின் பெற்றோரும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். ஊர்மக்களும் இவர்களுடன் சேர்ந்து ஆசிரியர் ஜெயச்சந்திரனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.


தகவல் அறிந்து அங்கு வந்த சந்திரப்பட்டி காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து ஆசிரியரை விடுவித்தனர். சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவதூறாக தகவல் வெளியிட்டவர் மீது ?


மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி அவதூறாக முகநூலில்(பேஸ்புக்) காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தகவல் வெளியிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி தோழன்பட்டியைச் சேர்ந்த பாலையா என்பவரின் மகன் மனோஜ்(வயது 27), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரகாகரன், அரை நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்ணை பிடிப்பது போல சித்தரித்த படத்தையும் அதை விளக்கி சில வாசகங்களையும் பேஸ்புக்கில் மார்ச் 22ம் திகதி இரவு வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு வெளியிட்டிருப்பது தமிழினத்தையும், தமிழர்களையும் அவமதிப்பதாகும். இத்தகைய செயலில் ஈடுபட்ட மனோஜ் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம்தமிழர் கட்சியின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் துரைப்பாண்டியன், நிர்வாகிகள் தரணிரமேஷ், சட்டத்தரனி போத்தியப்பன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் வடகாடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
 

இந்தியரான யோகா குரு மீது மாணவி சில்மிஷ ,.,


அமெரிக்கா வாழ் இந்தியரான பிரபல யோகா குரு பிக்ராம் சவுத்ரி மீது முன்னாள் மாணவி செக்ஸ் புகார் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள "பிவேர்லி ஹில்ஸ்" பகுதியில் யோகா மையம் நடத்தி வரும் பிக்ராம் சவுத்ரியிடம் முன்னாள் ஜனாதிபதிகளான ரொனால்டு ரீகன், பில் கிளின்டன் மற்றும் பொப் பாடகி மடோனா, நடிகர் ஜார்ஜ் க்ளூனி உள்ளிட்டோர் யோகா கற்றுள்ளனர்.
இந்நிலையில் பிக்ராம் சவுத்ரி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அவரது முன்னாள் மாணவி சாரா பான், லாஸ் ஏஞ்சல்ஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து சாரா பான் கூறுகையில், விக்ரம் நடத்தும் யோகா மையத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே அவர் மற்ற மாணவிகளிடம் நடந்து கொண்ட விதம் வழக்கத்துக்கு மாறாக இருந்ததை கவனித்தேன்.
மனைவியால் மனரீதியாக பாதிக்கப்பட்டிப்பதாகவும் இதிலிருந்து நிவாரணம் பெற, தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறும் என்னை பலமுறை வற்புறுத்தினார்.முற்பிறவியில் என்னுடன் நெருங்கிய உறவில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் ஒரு முறை என்னை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அதற்கு நான் உடன்படாததால் எனக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்தி விட்டார்.இதனால் என் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்
 

விமானத்தின் இரண்டு டயர்கள் பஞ்சர்:உயிர் ???


அசாம் மாநிலம் திப்ருகர் விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த விமானத்தின் இரண்டு டயர்கள் பஞ்சர் ஆன சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் இருந்து இன்று ஏர் இந்தியா பயணிகள் விமானம், 90 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒன்று, அசாம் மாநிலம் திப்ருகர் விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த விமானம் திப்ருகர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இரண்டு டயர்கள் பஞ்சர் ஆகிவிட்டன. ஆனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திப்ருகர் விமான நிலையத்தில் டயர்களை ரிப்பேர் பார்க்கும் வசதி இல்லை. இதனால் கொல்கத்தாவில் இருந்து பொறியாளர்கள் மற்றொரு விமானத்தில் வந்து சரி செய்தனர்.
எனவே, விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக திப்ருகரில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
 

இத்தாலிய மாலுமிகள் இந்தியா திரும்பினர்



மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரும் இந்தியாவில் நடக்கும் விசாரணைக்காக இந்தியா சென்றுள்ளனர்.
இத்தாலி தூதர், இந்தியாவில் இருந்து வெளியேறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும் இத்தாலியின் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து கடந்த 11 நாள்களாக இந்தியா- இத்தாலி இடையே நிலவி வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
அந்த இருவரும் இந்தியா திரும்ப உச்ச நீதிமன்றம் நேற்று வரை கால அவகாசம் அளித்திருந்தது.
இதையடுத்து கடற்படை வீரர்கள் சல்வடோர் கிரோனே, மாசிமிலானோ லடோர் இருவரும் இத்தாலி நாட்டு ராணுவ விமானத்தில் டெல்லி சென்றுள்ளனர்.
அவர்களுடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஸ்டீபன் டி மிஸ்டுராவும் வந்துள்ளார்.
 

பீடாதிபதியாக ஜயேந்திரர் பதவியேற்ற வைர ?


காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியாக ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதவியேற்ற 60வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியாக இருந்து வருபவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
இவர் கடந்த 1954ம் ஆண்டு மார்ச் 22ம் திகதி காஞ்சிபுரத்தில் உள்ள சர்வதீர்த்த குளத்தின் அருகே துறவறம் பூண்டார்.
அப்போது பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், இவருக்கு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டி காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியாக அறிவித்தார்.
இந்நிலையில் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடாதிபதியாக பதவியேற்று 60வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு சங்கர மடத்தில் நேற்று பீடாரோஹன வஜ்ர மஹோத்ஸவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை காமாட்சியம்மன் கோயிலிலும், கோயில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் ஆலயத்திலும் நடந்த சிறப்புப் பூஜையில் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கு பெற்றனர்
 

ரத்தத்தை உணவில் கலந்து சாப்பிடும் விநோத ?


அமெரிக்காவில் கலிபோர்னியா நகரைச் சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் மிஷெல்(வயது 29) என்பவர் வாரத்திற்கு 36 லிட்டர் பன்றி ரத்தம் குடிப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து மிஷெல் கூறுகையில், பன்றி ரத்தம் மட்டுமின்றி வாரத்திற்கு ஒரு முறை மனித ரத்தத்தையும் குடிப்பதாகவும், ரத்தத்தை உணவோடு கலந்தும் சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிலருக்கு சிகரெட் பிடிப்பது போல் எனக்கு ரத்தம் பிடித்திருக்கிறது என்றும் மனித ரத்தம் பன்றியின் ரத்தத்தை விட சுவையானதாகவும், ஆணின் ரத்தம் பெண்ணின் ரத்தத்தைவிட கெட்டியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ரத்தம் குடிப்பதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், இள வயதில் மன அழுத்தத்தால் என்னை காயப்படுத்திக் கொள்ளும்பொழுது ரத்தத்தை உரியும்போது ஏற்பட்ட பழக்கம் தான் என்றும் ரத்தம் எனக்கு பிடிக்கும் என்பதற்காக நான் காட்டேரி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இதுவரை எதுவும் அறியாமல் இருந்த அவருடைய தாயார், மிஷெல் ரத்தம் குடித்திருக்கிறார் என்பதை கேட்டு மனம் உடைந்துப் போகியுள்ளார். மேலும் மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெறுமாறு அவரை நண்பர்களும், உறவினர்களும் கேட்டு கொண்டுள்ளனர்.
 

20 March 2013

போர்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்: மாணவர்களின்

போர்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்: மாணவர்களின்
இலங்கை விவகாரத்தை முன்வைத்து நாளுக்கு நாள் தமிழகத்தில் வலுத்து வரும் மாணவர்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மாணவர்களுடன் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதேபோல தருமபுரி அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் இன்று 6வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
கோவையில் அரசு கலை மற்றும் சட்டகல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 10வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 9வது நாளை எட்டியுள்ளது. புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இன்று 3வது நாளாக தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
நெல்லையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மாணவர்களின் போராட்டம் 9வது நாளை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து தொடர் முழக்கப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மாணவர்கள் உண்ணாவிரதம் மட்டுமின்றி, பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மாணவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தனியார் பொறியில் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோயில் மாவட்டத்தில் பொறியியல் மாணவர்கள், தொழிற் பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இலங்கைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் பொதுமக்கள், சட்டத்தரனிகள், வணிகர்கள் என சகல தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சட்டத்தரனிகள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். இதேபோல தமிழ் அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டமும் இன்று நடைபெறுகிறது

18 March 2013

கூகுள் இணையதள நிறுவனத்தின் "ஆண்ட்ராய்டு" பிரிவின்

கூகுள் இணையதள நிறுவனத்தின் "ஆண்ட்ராய்டு" பிரிவின்
பிரபல கூகுள் இணையதள நிறுவனத்தின் "ஆண்ட்ராய்டு" பிரிவின் தலைவராக இந்தியர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை மடிக்கணனிகளை பயன்படுத்த உதவும் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, 2008ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தற்போது உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மூன்றில் ஒரு பங்கு போன்கள் ஆண்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன.
இலவச மென்பொருளான ஆண்ட்ராய்டு, முன்னணி மொபைல் போன் நிறுவனங்களான சாம்சங், ஹெச்.டி.சி., உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இதன் தலைவராக இருந்த ஆண்டி ரூபினுக்கு பதிலாக சுந்தர் பிச்சை(வயது 41) என்ற இந்தியர் நியமிக்கப்படுவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லாரி பேஜ் அறிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக்., படித்தவர்.
அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர், வார்ட்டன் பிசினஸ் கல்லூரியில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த இவர், கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசர் பிரிவின் தலைவராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 

17 March 2013

ஊழலை ஒழித்து நல்லாட்சியை வழங்க வேண்டும்:


இந்தியாவின் பிரதமராகும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த நரேந்திர மோடி கூறியதாவது:
இன்னாரைப் போல் உருவாக வேண்டும் என்று என் வாழ்க்கையில் இதுவரை எண்ணியதே கிடையாது. ஏதாவது செய்ய வேண்டும் என எப்போதுமே முயற்சித்துள்ளேன்.  பெரும்பாலும், யாரைப்போலாவது, ஆளாகி இறப்பதையே மக்கள் வுரும்புவார்கள்.
இதை நான் பின்பற்றியதே கிடையாது. குஜராத்தின முதல் மந்திரியாக பதவி ஏற்கும் வரை இதைப்பற்றி நான் கனவிலும் எண்ணியது இல்லை. நான் முதல் மந்திரி ஆவேனா என எந்த ஜோசியரையும் சந்தித்து ஆரூடம் கேட்டதில்லை.
ஒருவரைப் போல் ஆவதற்கு நாம் கனவு காணக் கூடாது. செய்வதைப் பற்றி சிந்திக்க வேண்டும். குஜராத்தின் ஆட்சி நல்ல முன்மாதிரி என்றால், இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த தகுந்தது தான். இதற்காக நான் அங்கு போக வேண்டும் என்பதில்லை. ஊழலை ஒழித்து நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதே என் குறிகோள். தொழில்நுட்ப புரட்சியின் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்.
 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ///


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க  கூட்டம் நேற்று இரவு  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.,ஏ. சுந்தரம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது: தற்போதைய பட்ஜெட் இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் என்ற முகங்களை நினைவில் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. உலக பொருளாதார அறிஞர்கள் இந்த பட்ஜெட் மூலம் இந்தியா பொருளாதார வளர்ச்சியினை அடையும். அதன் நாணயத்தின் மதிப்பு உயரும். இந்தியாவில் பொருளாதார தரமும் உயரும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து அறிந்தேன். மாணவர்களின் போராட்டத்தை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில்  அனைவருக்கும் அந்த உரிமை உண்டு. இலங்கை பிரச்சினை பற்றி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எந்த சூழலில் எந்தெந்த கருத்துக்களை தெரிவித்தன என்பது குறித்து அனைவரும் அறிவர்.
தமிழக முதல்-அமைச்சர்  சட்டசபையிலும், அதற்கு வெளியிலும் என்ன கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறித்து பதிவுகள் உண்டு.  தி.மு.க. தலைவர் கருணாநிதி  இந்த பிரச்சினை குறித்து சட்டசபையிலும், வெளியிலும் என்னென்ன கருத்துக்களை கூறி உள்ளார் என்ற பதிவுகளும் உண்டு. 
விடுதலைப்புலிகள் பற்றி ஒவ்வொரு  அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு விதமான கருத்துக்கள் உண்டு. தற்போது நம்முன் இருப்பது இலங்கை வாழ் தமிழர்களுக்கு சமவாழ்வையும் சம உரிமையையும் பெற்றுத்தருவது ஒன்றே. இதற்காக காங்கிரஸ் கட்சி  தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
ஐ.நா. சபை தீர்மானம் பற்றி கூறினார்கள். ஜ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானம் இன்னும் முழுமையாக  முடிவடையவில்லை. அதற்கு முன்கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. உலக நாடுகளுக்கு மத்தியில் கொண்டு வரக்கூடிய ஒரு தீர்மானம் மிக கவனத்தோடு தயாரிக்கப்பட வேண்டிய ஒன்று. வருகிற 22-ந்தேதி வரவுள்ள தீர்மானத்தின் மீது கடந்த ஆண்டு ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததுபோல, இந்த முறையும் ஆதரிக்கும் என நம்புகிறேன்.
சுதந்திரமான, நம்பகத்தன்மை மிகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்கிறோம். தமிழகத்திற்காக இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் என நான் நம்புகிறேன். நான் நம்புவதை நீங்களும் நம்புங்கள். நமது நம்பிக்கையை மாணவர்களுக்கும் ஊட்டுங்கள், தமிழகத்திற்கு இந்தியா நன்மையே செய்யும் என நம்புவோம்.
 

இலங்கை விடயம் தொடர்பாக மத்திய அரசுக்கு ?


தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நேற்றைய தினம் நீங்கள் மத்திய அரசு பற்றி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள்; அதற்கு மத்திய அரசிடமிருந்து ஏதாவது பதில் வந்துள்ளதா?.
பதில்:- இதுவரையில் வரவில்லை. வந்தால் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
கேள்வி:- மத்திய அரசிடம் பல நாட்களாக இந்த பிரச்சினை பற்றி சொல்லி வருகிறீர்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை அதன் நிலையை வெளிப்படையாக சொல்லவில்லையே?. அது எந்த அளவிற்கு உங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றது?.
பதில்:- அதனால் தான் நாங்களும் எதையும் வெளிப்படையாக சொல்லாமல் இருக்கிறோம்.
கேள்வி:- மத்திய அரசின் நிலைப்பாடு உங்களுக்கு எந்த அளவிற்கு வருத்தத்தை தருகிறது?.
பதில்:- மத்திய அரசு வழக்கம் போல செயல்படுகிறது.
கேள்வி:- உங்களுடைய இறுதியான எதிர்பார்ப்பு என்ன?.
பதில்:- அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி:- மத்திய அரசிடமிருந்து பதில் வருவதற்கு ஏதாவது காலக்கெடு வைத்திருக்கிறீர்களா?.
பதில்:- காலக்கெடு என்பது இது பற்றி மத்திய அரசு தருகின்ற பதில் தான். அதற்கிடையே உள்ளது தான் காலக்கெடு. அழுத்தம் கொடுத்து விட்டோம்
கேள்வி:- டெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் இந்திய அரசிடம் இருந்து எந்த விதமான பதிலும் வராமல் இருப்பதால், எத்தகைய அழுத்தத்தை கொடுக்கவிருக்கிறீர்கள்?.
பதில்:- அதனால்தான் அறிக்கை கொடுத்திருக்கிறோம். தேவையான அழுத்தம் கொடுத்து விட்டோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி தமிழ்நாட்டிலே உள்ள ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில கட்சிக்காரர்களையும், ஒரு சில ஊடகங்களையும் கடுமையான வயிற்றெரிச்சல் வாட்டிக்கொண்டிருக்கிறது. அவர்களது தவிப்பெல்லாம், தி.மு.க.வை தனிமைப்படுத்திட வேண்டும் என்பதுதான்.
இலங்கை பிரச்சினையில் கூட தி.மு.க. ஒரு மாநில அரசியல் கட்சி என்பதையே மறந்துவிட்டு, ஏதோ தி.மு.க. மிகப்பெரிய வல்லரசு என்பதை போல கற்பித்துக்கொண்டு, இலங்கையிலே நடைபெற்ற படுகொலைகளையெல்லாம் தி.மு.க. நினைத்திருந்தால் நிறுத்தியிருக்கலாம் என்பதைப் போல இன்றைக்கும் திட்டமிட்டு, வேண்டுமென்றே குறை கூறுவோர் உண்டு.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டித்து, நம்பகத் தன்மை கொண்ட, சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினை நடத்தவேண்டும் என்பதற்காக இந்திய அரசே வலுவானதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்துச்செல்ல வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி; அவ்வாறு இந்திய அரசு தீர்மானத்தை முன்மொழிவதற்கு வெளிப்படையான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத காரணத்தால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தையாவது உரிய திருத்தங்களோடு ஆதரிக்க முன் வரவேண்டுமென்று பல நாட்களாக வலியுறுத்தி, அதற்கு மத்திய அரசிடமிருந்து தமிழினத்திற்கு நிறைவு தரும் எந்த விதமான பதிலும் வராத நிலையில்; 15-3-2013 அன்று தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், தி.மு.க. இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்று அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தேன்.
கூட்டணியில் அங்கம் வகிப்பதால், எந்தவொரு முக்கியமான பிரச்சினையிலும், முதலில் கோரிக்கை வைக்கிறோம்; அடுத்து வலியுறுத்துகிறோம்; பிறகு அழுத்தம் தருகிறோம்; தொடர்ந்து இப்படி செய்ததற்கு பின்னரும், நம்பிக்கை ஒளி தோன்றவில்லையென்றால், இறுதிகட்ட உத்தியாக இத்தகைய முடிவை எடுத்து அறிவிக்கிறோம்.
இதிலே கிண்டலுக்கோ, கேலிக்கோ இடமில்லை. இப்படி முடிவெடுப்பது என்பது கூட்டணி அரசியலில் நடைபெறும் நிகழ்வுதான். தமிழ்நாட்டின் நலன்களுக்காக, தமிழர்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் உகந்த வகையிலேயே தி.மு.க. இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து அறிவிக்கின்றது.
ஆனால் மத்திய அரசிலே தி.மு.க. நீடிப்பதே உறுத்துகிறதே என்ற எண்ணத்தோடு அவலை நினைத்து உரலை இடிப்பதை போல செயல்படுவோருக்கு, தி.மு.க. எடுக்கும் முடிவுகள் விந்தையாக இருந்தாலும், தமிழக மக்கள் சரியாகவே புரிந்து கொண்டுள்ளார்கள்.
 

: மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் ,,,


இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 8-ந் திகதி லயோலா கல்லூரி மாணவர்கள் 18 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியதும் மற்ற கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் தீயாக இது பரவியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம், சாலை மறியல் என போராட்டங்கள் வெடித்தன.
இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் கலைக் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதன் பிறகும் மாணவர் போராட்டம் முடிவுக்கு வராமலேயே உள்ளது. நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் திரண்டு திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொலீஸார் அங்கு விரைந்து சென்று உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்ததையடுத்து மாணவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய பொலீஸார் முயற்சி செய்த போதும் இதற்கு மாணவர்கள் ஒத்துழைக்கவில்லை.
இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலீஸார் குண்டு கட்டாக மாணவர்களை தூக்கிச்சென்று பொலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது மாணவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். பொலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில் மெரீனாவில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் 20 மாணவர்களும் கைது செய்யப்பட்டு மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் சமூகநல கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின்போது களைப்புடன் காணப்பட்ட மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மடியில் போட்டுக்கொண்டு மற்ற மாணவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் அவருக்கு மயக்கம் தெளியவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே ராஜா அண்ணாமலைபுரத்தில் சட்டப்பல்லைக்கழக மாணவர்களின் போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த மாணவர்களில் பீமராவ், கெல்வின் புவனேஸ்வரன் ஆகியோர் 3-வது நாளிலும், மோனிஷா, நரேந்திரன், சதீஷ்ராஜா ஆகியோர் 5-வது நாளிலும் மயக்கம் அடைந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று சவுந்தராஜன், ரஞ்சித் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் தவிர 11 மாணவர்கள் இன்றும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

15 March 2013

கடவுள் துகள்: விஞ்ஞானிகள் திணறல்,,,


அணு ஆராய்ச்சி குறித்த செயல்பாடுகளில், முக்கியப் பங்கு வகிக்கும் ஐரோப்பிய நிறுவனமான லார்ஜ் ஹர்டன் கோலிடர் 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த மையத்தில், அணுவின் அடிப்படையை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் அட்லாஸ், சி.எம்.எஸ் என்ற இரு பிரிவில், விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைந்தது கடந்த 1960ம் ஆண்டில் ஸ்காட்லாண்டு நாட்டைச் சேர்ந்த இயற்பியல் வல்லுனரான பீட்டர் இகிசு எழுதிய 'நிறையின் தோற்றம்' என்ற ஆராய்ச்சி நூலாகும். இதில் அவர் அணுவின் அடிப்படையை, நிறையுடைய ஒரு அணுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கண்டுபிடிக்க அரிதான இந்தத் துகளே, ஹிக்ஸ் போசான் அல்லது கடவுளின் துகள் என்று அழைக்கப்படுகிறது.
இதுவே, அணுவின் கட்டமைப்புக்கு அடிப்படை தோற்றப் பொருளாக இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.
கடந்த 2012ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஹிக்ஸ் போசானை ஒத்த அணுத்துகளைக் கண்டறிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
இத்தாலியில் மோரியாந்த் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில், இது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டனர்.
ஆயினும், தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் அவர்களால் இதனை உறுதிப்படுத்த முடியாமல் திணறுகின்றனர்
 

13 March 2013

இலங்கை - இந்தியா - அமெரிக்கா கூட்டுச் சதி! -


ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குரல் முழக்கம் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அதே நேரத்தில், 'இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உப்புசப்​பில்லாத தீர்மானத்தால் எந்தப் பலனும் இல்லை’ என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்.
கேள்வி: அமெரிக்கா கொண்டு​வரும் தீர்மானம் தமிழர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்குமா?

பதில்:  ராஜபக்ச அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை​கள் ஆணையக் கூட்டத்தில் கடந்த ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தால் என்ன நடந்துவிட்டது? போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை​களை நிறைவேற்ற வேண்டும், போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் தண்டிக்க வேண்டும் என்பதெல்லாம் என்ன ஆனது?
இந்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகும், தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்கிறது. இளைஞர்கள் திடீர் திடீரென்று கைதுசெய்யப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. தமிழர் பகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்​பாட்டில் உள்ளது.
போர் நடைபெற்ற பகுதிகளில் புனரமைப்பு செய்ய இந்தியாவும் உலக நாடுகளும் கொடுத்த நிதியில், போரில் பலியான சிங்கள வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஊனமுற்ற சிங்கள வீரர்களுக்கு மறுவாழ்வு என்று பல பணிகள் நடக்கின்றன.
ஆனால், ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலை நாளுக்கு நாள் மோச​மாகி வருகிறது. 10 கோடி உலகத் தமிழர்களையும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்​களையும் இலங்கை - இந்தியா - அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டுசேர்ந்து ஏமாற்றி வருகிறது.

கேள்வி: அமெரிக்கத் தீர்மானத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்கிறீர்களா?

பதில்: கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்​படவில்லை என்று அமெரிக்காவே கவலை தெரிவித்துள்ளது.
ஆனால், அதே அமெரிக்காதான் மார்ச் 7-ம் திகதி அன்று, இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த ஐந்து லட்சம் அமெரிக்க டாலர் நிதிஉதவி அளித்துள்ளது. இந்திய அரசும் பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இந்தியா முன்னின்று நடத்திய ஈழத் தமிழர் இனப் படுகொலையை அமெரிக்காவும் ஐ.நா. சபையும் மௌனமாக வேடிக்கை பார்த்தது. சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கவே இலங்கைக்கு உதவுவதாக இந்தியா நாடகமாடுகிறது. இந்த சர்வதேச அரசியல் நாடகத்தை தமிழ் தேசிய சக்திகள் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று அமெரிக்கா இப்போது வலியுறுத்தியுள்ளதே?

பதில்: அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய அதிகாரிகள், கடந்த மாதம் வவுனியாவில் முகாமிட்டு இலங்கை இராணுவத்தினருக்குப் போர்ப் பயிற்சிகளை அளித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ஆட்டம் ஓய்ந்துவிட்டது. அதாவது, அமெரிக்காவின் ஈராக் பங்களிப்பு முடிந்துவிட்டது. அதனால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிக் கவனத்தைத் திருப்பியுள்ளது.
அமெரிக்காவுக்கு இந்தியா உற்ற துணையாக இருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இலங்கையைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. எனவேதான், அமெரிக்கா இப்போது கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா கூறிய திருத்தத்துடன் தாக்கல் ​செய்துள்ளது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், இலங்கையின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்துவிட முடியாது.
இலங்கைத் தமிழர்கள் மீது உண்மை​யிலேயே அமெரிக்​காவுக்கு அக்கறை இருந்தால், ஐ.நா. தலைமையில் சர்வதேசப் போர்க் குற்ற விசாரணை, இலங்​கைத் தமிழர்களுக்கு இறுதி அரசியல் தீர்வு காணும் வரை பொருளாதாரத் தடை தனித் தமிழீழம் அமையப் பொது வாக்கெடுப்பு ஆகிய தீர்மானங்களை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். இதற்கு இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும்.

கேள்வி: விடுதலைப் புலிகள்தான் தங்கள் எதிரி, ஈழத் தமிழர்கள் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறதே?

பதில்: ஈழத் தமிழர்கள் மீது மட்டுமல்ல... இந்தியாவில் வாழும் தமிழர்கள் மீதே அவர்​களுக்கு அக்கறை இல்லை. இதுவரை 650-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. அதைக் கேட்க நாதியில்லை.

 பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைபற்றி, நாடாளு​மன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் கொதித்தெழுந்தன. ஆனால், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மௌனமாகவே இருந்தார்.
இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸுக்கு உண்மை​யிலேயே அக்கறை இருந்தால், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழியட்டும்.
2011-ல் தெற்கு சூடான் பிறந்ததுபோல, ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்கட்டும். இவ்வாறு  காங்கிரஸுக்கு சவால்விடுகிறார் வேல்முருகன்.

12 March 2013

இனப்படுகொலையை கண்டித்து முழு அடைப்பு ?


டெசோ அமைப்பு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இலங்கை அரசின் தமிழ் இன படுகொலை தொடர்பாக ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இதையொட்டி காலை 6 மணி முதல் தனியார் பேருந்துகள் புதுவையில் இயங்கவில்லை. இம்மாநிலத்தை பொருத்தவரை தனியார் பேருந்துகளே அதிகம் என்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
அதேவேளையில் புதுவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்துகள் இயங்கின. நகரின் முக்கிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அதிகாலையில் திறக்கப்படும் டீக்கடைகள் கூட திறக்கவில்லை. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லிதோப்பு மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளும் இயங்கவில்லை. டெம்போக்கள் முற்றிலுமாக ஓடவில்லை. அதேவேளையில் ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் அரசு பள்ளி, கல்லூரிகளில் மாணவர் வருகை குறைவாக இருந்தது.
மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இயங்கின. தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது
 

11 March 2013

கறுப்பு நிறமுடைய ஒரு அமெரிக்க இந்தியர் ஒமாபா பதவிக்கு???


அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு நான் நிற்கப்போகிறேன் என்று அமெரிக்க இந்தியர் பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியரும், லூசியானா கவர்னருமான பாபி ஜிண்டாலின்(வயது 41) சமயோசித புத்தியைப் ஒபாமா புகழ்ந்துள்ளார்.
எதிர் வரும் 2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளாராக இரண்டாவது முறையாக கவர்னராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாபி ஜிண்டால் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பாபி ஜிண்டாலும் பேசினர்.
அப்போது பாபி ஜிண்டால், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நிற்க ஒரு மெலிந்த கருப்பு நிறத்திலானா ஒருவர் வந்துகொண்டிருக்கிறார் என்று கூறினார். இந்த பேச்சை கேட்ட அதிபர் ஒபாமா மனமுவந்து சிரித்தார். மேலும் வரும் மார்ச் மாதம் முதல் நிதிக்குறைப்பு செய்யவுள்ளதையும் நக்கலடித்து பாபி ஜிண்டால் பேசினார்.
இதுகுறித்து ஒபாமா கூறியதாவது: நான் ஒன்று சொல்லியாக வேண்டும். பாபி ஜிண்டால் ஒரு பயங்கரமான ஆளாக இருந்தார் என்று நான் நினைத்தேன்.
இன்று மாலை, பாபி ஜிண்டால் உண்மையிலேயே ஒரு நகைச்சுவையாளராகவும் நையாண்டிக்காரராகவும் இருக்கிறார் என்பது புலனாகிறது என்றார்.
 

09 March 2013

மாணவிக்கு வீரமங்கை விருது வழங்கிய அமெரிக்கா?

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்க அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவும் வழங்கினார்கள்.
மாணவியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் வீர மங்கை விருதினை பெற்றுக் கொண்டார். டெல்லி மாணவியை தைரியமான பெண் என குறிப்பிட்ட ஜான் கெர்ரி, அவர் உயிர்வாழ விரும்பியதையும், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததையும் வெகுவாக பாராட்டினார்

08 March 2013

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ?



ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியான 17 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தீவிரவாதம், மாவோயிஸ்ட் தாக்குதல்களால் கொல்லப்படும் நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் சட்ட முன்வடிவிற்கும் அமைச்சரவை அனுமதி அளித்ததோடு மேற்குறிப்பிட்ட தாக்குதல்களினால் நிரந்தர ஊனமுற்றவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் அருணா தெரிவித்தார்.
ஐதராபாத் சம்பவத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதையும் அமைச்சர் கூறினார்.
குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். இக்கோரிக்கையை ஏற்ற பிரதமர், அரசு வேலை வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் கிரண் குமார் ரெட்டியிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் சட்டம் இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்
 

07 March 2013

மாலிப்போரில் நான்காவது பிரெஞ்சு வீரர் மரணம்


மாலியின் இசுலாமியவாதிகளை அகற்றும் போரில் அந்நாட்டு ராணுவத்துக்கு துணையாக இருக்கும் பிரெஞ்சு ராணுவத்தில் ஒரு வீரர் நேற்று வீரமரணம் அடைந்துள்ளார்.
பிரான்சு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வால்போன்(Valbonne) என்ற இடத்தில் முகாமிட்டிருந்த ராணுவப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் கிழக்குமாலியில் காஓ நகருக்கு 100 கிலோ மீற்றர் தொலைவில் நடந்த போரில் உயிரழந்தார் என்பதைத் தெரிவித்துள்ளது.
வீரமரணம் அடைந்தவரின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஜனாதிபதி ஹோலாண்ட் தலைவணங்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாலியில் நடந்த போரில் இதுவரை பிரெஞ்சு வீரர்கள் நான்கு பேர் தம் இன்னுயிர் ஈந்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று வடக்குமாலியில் உள்ள இஃபோகாஸ்(Ifoghas) மலையிலிருந்து வந்த தீவிரவாதிகளால் ஒரு பிரெஞ்சு வீரர் கொல்லப்பட்டார்.
இதை தொடர்ந்து பாரசூட் படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொருவர் பெப்ரவரி மாதம் 19ம் திகதி அன்று நடந்த கடுமையான மோதலில் உயிரிழந்துள்ளார். மேலும் இம்மோதல் தொடங்கியவுடனேயே ஹெலிகொப்டர் ஓட்டுநர் கொல்லப்பட்டுள்ளார்.
தற்பொழுது நான்காவதாக நேற்று ஒருவர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளார்.
பிரெஞ்சுப்படைகள் வடக்கு மாலியின் முக்கிய நகரங்களிலிருந்து இசுலாமியவாதிகளை விரட்டியடிக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாகப் போர் நடத்தி வருகின்றனர்.

மேலும் மலைப்பகுதிகளில் மறைந்துவாழும் போராளிகளை வேட்டையாடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
 

கதிர் வீச்சு ஏற்பட வில்லை: இலங்கைக்கு ???


கூடங்குளம் அணு உலையில் கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்களில் வெளியான செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலையில் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள இந்தியா தூதரகம் மறுத்துள்ளது.
கூடங்குளம் அணு உலை அதி நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பரிசோதனைகள் அனைத்தும் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பரிசோதனை முடிவுகளை அணுசக்தி ஒழுங்கு முறை வாரிய குழு தினமும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விடயங்களில் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அறிவுறுத்தியுள்ள படியே அடுத்தகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணு பிளவு பணிகளும், மின் உற்பத்தியும் தொடங்கப்படாத நிலையில், கதிர் வீச்சுக்கு வாய்ப்புகளே இல்லை என்றும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய உறவு கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற தகவல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கூறியுள்ளது
 

06 March 2013

விஐபிக்களின் தொலைபேசி உரையாடல்கள்

அரசியல் மற்றும் சமூகவிரோத செயல்களைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதிலும் 9600 விஐபிக்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அவர்களது பேச்சுக்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல 1100 இமெயில் கணக்குகளும் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜித் சேத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினர் நாடு முழுவதும் 9600 விஐபிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு பதிவு செய்துள்ளனர். இதற்காக 8 ஏஜென்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 1100 இமெயில் கணக்குகள், இணையதளங்களின் நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பரில் மொத்தம் 10,490 விஐபிக்களின் தொலைபேசிகள் பதிவு செய்யயப்பட்டன. இது டிசம்பரில் 9600 ஆக குறைந்துள்ளது.
மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி) இதற்கான பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்பட வேண்டியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.யின் நேரடி கண்காணிப்பில் தற்போது 5,300 தொலைபேசிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

05 March 2013

மறைந்த டெல்லி மாணவிக்கு அமெரிக்க,.,


டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா வீரமங்கை விருது வழங்க உள்ளது.
சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் திகதி இந்த விருதை, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் வழங்க உள்ளனர்.
உயிரிழந்த மாணவி, தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தைரியமாக போராடியதாகவும், காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் குற்றவாளிகள் ஆறு பேருக்கும் உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியதையும் அமெரிக்கா பாராட்டியுள்ளது.
மேலும், நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், மாணவியின் குடும்பத்தினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தையும் அமெரிக்க அரசு வெகுவாகப் புகழ்ந்துள்ளது.
மாணவியின் உயிரிழப்பு, இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விருது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக தைரியமாக போராடிய பெண்களுக்கு அமெரிக்க அரசு வீரமங்கை விருதினை வழங்கி வருகிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது இதுவரை 45 நாடுகளைச் சேர்ந்த 67 பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 பெண்கள் இந்த விருதினை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

04 March 2013

பிரிவினர் மீது நடந்த குண்டுத் தாக்குதலில்


பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் நேற்று நடந்த பயங்கர குண்டு வீச்சு தாக்குதலில் 48 பேர் பலியாகியதோடு 140க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானில் வசிக்கும் ஷியா பிரிவினரை குறிவைத்து சமீப காலமாக கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஷியா பிரிவினர் மீது அவ்வப்போது போராளிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதம், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டதை தொடர்து இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க மறுத்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தாக்குதல்களை முறியடித்து ஷியா மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதல்களில் பல்வேறு போராளி முகாம்கள் அழிக்கப்பட்டன.

03 March 2013

பிரெஞ்சு படைகள்: முக்கிய ஜிகாதி சுட்டுகொலை



மாலி நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் அந்நாட்டின் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக பெரும் கலகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் மாலி அரசுக்கு ஆதரவாக பிரெஞ்சு படைகள் களமிறங்கியது.
இந்நிலையில் சாட் ராணுவம் நேற்று இபோகஸ் மலையிலுள்ள அல்கொய்தா ஜிகாதிகளின் முக்கிய இடமான அட்ரார் பகுதியைத் தாக்கியபொழுது இதில் அவர்களின் கொமாண்டர் மொக்டார் பெல்மொக்டார் உள்ளிட்ட பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று சாட் ராணுவம் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
இவர் உலக அளவில் தேடப்பட்டு வந்த முக்கிய ஜிகாதி என்றும் இவரின் இறப்பு அல்கொய்தாவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் மாலியில் உள்ள பிரெஞ்சு படைகளுக்கு உதவ மேற்கு ஆப்ரிக்க நாடுகளும், சாட் நாடும் இணைந்து 1000 போர் வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது

01 March 2013

இன்று தளபதிக்கு பிறந்தநாள் ,,,,


திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது 60 வது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார்.
இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள YMCA மைதானத்திற்கு தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்த அவர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கை வெட்டினார்.
அதனைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார்.
தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மகளிர் அணி மற்றும் இளைஞர் அணியையை சார்ந்த தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அன்பளிப்புகளையும் அளித்து வருகின்றனர்.
 

இந்தியாவின் புதிய பட்ஜெட் வாசிக்கையில்,,,


நாட்டின் புதிய பட்ஜெட் வெரும் கண்துடைப்பு என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்ற நிலையில் சில சுவாரஸ்யமான சம்பங்களும் அவையில் அரங்கேறியுள்ளன.
மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலியல் வன்கொடுமைக்கு பலியான டெல்லி மாணவியை நினைவுபடுத்தும் வகையில் நிர்பயா நிதியம் தொடங்குவதாக அறிவித்தபோது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி பெண் எம்.பி.கள் தங்களது வரவேற்பை தெரிவித்தனர்.
பெண்களுக்கென தனி வங்கிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் கைத்தட்டி ஆதரவைத் தெரிவித்தனர். நிதியமைச்சர் சிதம்பரம், தனது உரையின்போது முக்கிய தலைவர்களின் கருத்துகளை எடுத்துக் கூறினார்.
குறிப்பாக ஒரு நாட்டின் மிகப்பெரிய வளம், அந்நாட்டின் மக்கள்தான் என்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் ஜொசப் ஸ்டிக்லிட்ஸ்-ன் கூற்றை உதாரணப்படுத்தி பேசினார். மேலும் பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பு, திருக்குறளை வாசித்தார்.
‘‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்‘‘ இந்தக் குறளைச் சொல்லி ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.
தெளிவுடன் செய்யத் துணிந்ததைக் காலம் நீட்டாமல், தளர்வின்றிச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.
உரையின் இறுதியாக, நீங்கள் விரும்பும் வலிமையும், உத்வேகமும் உங்களுக்குள்தான் இருக்கிறது, ஆகவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தையும் எடுத்துக்கூறினார் சிதம்பரம்.
ஒரு மணி நேரம் 47 நிமிடங்களுக்கு சிதம்பரம் பட்ஜெட் உரையாற்றிய போது அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மாடத்தில் இருந்து பார்வையிட்டனர். இதேவேளையில் பட்ஜெட் தாக்கலின்போது லல்லு பிரசாத் யாதவ் கொட்டாவி விட சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் தூங்கியே விட்டார்

தேடப்பட்டுவரும் 109 தீவிரவாதிகளின் பெயர்களை``

  
உலகில் வன்முறை நடக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தான் அரசு, லஷ்கர் இ ஜங்க்வி, தெஹ்ரீ இ தலிபான், ஜெய்ஸ் இ முகமது மற்றும் ஷியா முஸ்லிம் இயக்கங்களான தெஹ்ரீ இ ஜாப்ரியா, ஷிபா இ முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களில் உள்ள 109 தீவிரவாதிகளின் பெயர்களை தேடப்படும் குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளது.
அதில், 2002-ம் ஆண்டு கராச்சி ஷெராட்டன் ஹோட்டலில் தங்கியிருந்த 11 பிரெஞ்ச் என்ஜினியர்கள் கொல்லப்பட்ட வழக்கிலும், 2004-ம் ஆண்டு பிரதமராக இருந்த சௌகத் அசிஸ் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலிலும் ஈடுபட்ட லஷ்கர் இ ஜங்க்வி தீவிரவாதி, மதி உர் ரகுமான் இந்த பட்டியலில் முக்கிய குற்றவாளியாக பெயரிடப்பட்டு இவன் தலைக்கு பாகிஸ்தான் அரசு 1கோடி ரூபாய் சன்மானமும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2003-ம் ஆண்டு முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு எதிராக நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தீவிரவாதி சோட்ட இப்ராஹிம் என்றழைக்கப்படும் மன்சூர் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இவனது தலைக்கு அங்கு 50 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் குவெட்டா நகரில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். அதில் தொடர்புடைய லஷ்கர் இ ஜங்க்வி அமைப்பினர் 28 பேரும் அந்த அதிகம் தேடப்படுவோர் பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர்