Search This Blog n

26 April 2013

மகளின் முகபுத்தக சுயவிபரத்தை நீக்க நீதிமன்றம்


அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் மரணமடைய நேரிட்ட 24 வயதுப் பெண் ஒருவரின் சுய விபரமிட்ட பக்கத்தை முகபுத்தகத்திலிருந்து உடனடியாக நீக்குமாறு பிரேசில் நாட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரேசிலின் மத்தியப் பகுதியில் உள்ள காம்போ கிராண்டே என்ற இடத்தில் 24 வயதான ஜூலியானோ ரிபைரோ காம்போஸ் என்ற பெண், பத்திரிகையாளராகப் பணி புரிந்து வந்தார்.
அவர், கடந்த வருடம் மே மாதம் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் உயிரிழந்தார். அதற்கு முன்னர் அவர் சமூக இணையதளமான முகபுத்தகத்தில் தனக்கென சுயவிபரமிட்ட பக்கத்தைத் தொடங்கிருந்திருக்கிறார்.
இதில் அவரது நண்பர்களும், உறவினர்களும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவரைப் பற்றிய செய்திகள், அவருக்கான பாடல்கள் போன்றவற்றை அனுப்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இது தனக்கு மிகவும் துன்பத்தைத் தருவதால் அந்தப் பக்கத்தை நீக்கும் படி முகபுத்தக நிறுவனத்திடம் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் அவரது தாயார் டோலோரெஸ் பெரைரா குடின்கோ(50) கூறியுள்ளார்.
ஆனால் அந்நிறுவனம் இறந்தவரின் நினைவுப் பக்கமாக அதனைத் தொடர்ந்துள்ளது. ஏழு மாதங்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் முடியாமல் போனதால் அந்தத் தாய் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.
நீதிபதி வனியா டி பவுலா ஆரண்டீஸ், மார்ச் மாதம் 19ம் திகதி ஒருமுறையும், ஏப்ரல் 10ம் திகதி ஒருமுறையும் ஜூலியா யானோவின் சுயவிபரப்பக்கத்தை மூடும்படி முகபுத்தக நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மீண்டும் இந்த வாரம் 48 மணி நேரத்திற்குள் அந்தப்பக்கத்தை மூடாவிட்டால், சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று உத்தரவு பிறப்பித்த பின்னரே ஜூலியானோவின் பக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், அவரது நண்பர்களுக்கு மட்டும் அந்தப்பகுதி நினைவுப் பகுதியாகத் தொடர்ந்திருக்கும்படி அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
 

0 கருத்துகள்:

Post a Comment