Search This Blog n

02 July 2014

மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்!-

ச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சட்டத்திற்கு புறம்பானது, செல்லாது. எனவே, கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி உரிமை தொடர்பாக மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த வழக்கில் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கடல் எல்லை முடிந்துவிட்ட விஷயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கச்சதீவை சுற்றி இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை படித்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

அநேகமாக தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயாரித்து ஒப்புதல் அளித்து, அது தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படாமல் இருக்கலாம்.

கச்சதீவு இராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமாக இருந்ததற்கு ஆவண சான்று உள்ளது. கச்சதீவை சுற்றி மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளது. இதனை இலங்கைக்கு கொடுக்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் அந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

எனவே, கச்சதீவை மீட்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் 1991ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இந்தியாவுக்கு சொந்தமான எந்த பகுதியையும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலமாக மட்டுமே வேறு நாட்டிற்கு கொடுக்க முடியும்.

எனவே, கச்சதீவை அரசியலமைப்பு சட்டத்திருத்தம் இல்லாமல் இலங்கைக்கு கொடுத்தது சட்டத்திற்கு புறம்பானது, செல்லாது. எனவே, கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

கச்சதீவு ஒப்பந்தம் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தை தாமதமின்றி தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment