Search This Blog n

05 March 2014

விஜயகாந்த் கேப்டன் என்ற பதவிப் பெயரை பயன்படுத்தக் கூடாது

கேப்டன் என்ற பதவிப் பெயரை பயன்படுத்தும் நடிகர் விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர் கே.தண்டபானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகளுக்கு மேலாக, மருத்துவத் துறையில் சுகாதார ஆய்வாளராக நான் பணிபுரிந்தேன். கடந்த 1992-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.
கேப்டன் என்பது இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு உயர்ந்த பதவி ஆகும். ஆனால், கேப்டன் பதவிப் பெயரை பயன்படுத்தும் நடிகர் விஜயகாந்த் ராணுவத்தில் பணியாற்றியதாக எனக்கு தெரியவில்லை. இது சட்டவிரோதமானது, ராணுவத்தின் மரியாதையை அவமதிப்பதாகவும் உள்ளது. அவர் ஒரு நடிகர் தான், ராணுவ அதிகாரி இல்லை. அதனால், கேப்டன் என்ற பதவிப் பெயரை அவர் பயன்படுத்த முடியாது.

கடந்த 14-ஆம் தேதி விஜயகாந்த்க்கு எதிராக சாலிகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் அந்தப் புகாரை அனுப்பி வைத்தேன். ஆனால், என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கேப்டன் என்ற பதவிப் பெயரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும். அதன் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் மனுதாரர் புதிதாக புகார் அளிக்க வேண்டும். அதில், குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து, ஒரு வாரத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். மனுதாரர் புகார் அளிக்கவில்லை என்றால் அது குறித்து அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து மார்ச் 11-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

Post a Comment