Search This Blog n

24 October 2012

வடகொரியாவின் மிரட்டலுக்கு பணிந்தது தென்கொரியா

புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012,By.Rajah.வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்களை பறக்கவிட தென்கொரியா தடை விதித்துள்ளதால், பதற்றம் சற்று தணிந்துள்ளது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி வடகொரிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவில் இருந்து சென்று தென்கொரிய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள், எங்களுக்கு எதிராக பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து வெளியேறி விடவேண்டும். இல்லாவிட்டால் எவ்வித இரக்கமும் இன்றி இராணுவ தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
மேலும் அக்டோபர் 22ஆம் திகதி முதல் தென்கொரியாவின் பஜு நகரின் அருகே எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் வடகொரியா மிரட்டல் விடுத்திருந்தது.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க பலூன்களை பறக்கவிட தடை விதித்து தென்கொரியா நேற்று உத்தரவிட்டது.
இத்துடன் எல்லைப் பகுதியில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டனர். சாலைகளை மூடி நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
இதுபற்றி போராட்டக்காரர் பார்க் சாங்-ஹேக் கூறுகையில், இது வடகொரியா மிரட்டலுக்கு பயந்து சரணடைந்ததற்குச் சமம். நாங்கள் வேறு பகுதியில் இருந்து பலூன்களைப் பறக்கவிட முயற்சி செய்வோம் என்றார்.
இதற்கிடையே வடகொரியா தாக்குதல் நடத்த இராணுவத்தை குவித்துள்ளதாக வந்த தகவலை தென்கொரியா இராணுவ அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment