Search This Blog n

01 November 2013

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: புதிய..


தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 2004-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவின் பணிக் காலம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.பி.முடிகெüடர் கூடுதல் பொறுப்பாக சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதால், நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் பரிசீலிக்குமாறு கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக நீடிக்க பாலகிருஷ்ணா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹாவை நியமித்து கர்நாடக உயர்நீதிமன்றப் பதிவாளர் (பொறுப்பு) கே.பி.சங்கப்பா அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பச்சாபுரே, மனோலி, ஆன்டின், மல்லிகார்ஜுனையா, சோமராஜு, பாலகிருஷ்ணா, முடிகெüடர் ஆகியோர் விசாரித்துள்ளனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் 8-ஆவது நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதியான இவர், கர்நாடக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.
அடுத்த வாரத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment