Search This Blog n

25 September 2012

இணுவில் அண்ணா தொழிலகம்

25.092012.By.Rajah.கடுமையான உழைப்பாலும் நேர்த்தியான தயாரிப்புக்களாலும் கடந்த 53 வருடங்களாக மக்கள் மனதில் நின்று வரும் ஒரு தொழில் அதிபர்தான் பொ.நடராசா. இவர் இந்த வாரம் ஒன்லைன் உதயனுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில சுவையான பகுதிகள். கேள்வி: "அண்ணா" உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால்.....? பதில்: பெயர் பொ.நடராசா. வயது 73. பிறப்பிடம் இணுவில். கற்றது 11ம் வகுப்பு வரை. ஆறு சகோதரிகளுடன் பத்து அங்கத்தவர்களை கொண்ட சாதாரண விவசாய குடும்பம். சொந்தம் என்று சொன்னால் வறுமைதான். இதுவே எனது கல்விக்கும் தடை போட்டது. ஆயினும் பிற் காலத்தில் நான் ஒரு தொழில் அதிபராக மாறுவதற்கும் உந்து சக்தியாக அமைந்தது. கேள்வி: "அண்ணா" தொழிலை தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது? பதில்: 16 - 17 வயதிலேயே தொழில் தேடி கொழும்பு வரை சென்றேன். அங்கே இங்கே என்று பல தொழில்களையும் செய்து பார்த்தேன். ஆனால் அவையேதும் எனது குடும்ப வறுமையை போக்க போதுமான வருமானத்தைப் பெற்றுத் தரவில்லை. இந்த நேரத்தில்தான் ஒரு நாள் (1959) எனது வீட்டாருக்கு மருந்து வாங்க அண்ணாமலை பரிகாரியிடம் சென்றேன். அவர் ஏதேட்சையாக என்னிடம் நலம் விசாரித்த போது எமது வறுமை மற்றும் தொழில் திருப்தி இன்மை என்று எல்லாவற்றையும் சொன்னேன். அவற்றை கேட்ட அந்த சித்த வைத்தியர், மூலிகை பற்பொடி தயாரிக்கலாமே என்ற யோசனையை சொன்னார். அவர் சொல்லித் தந்த வழி முறைகளை கையாண்டு மூலிகை பற் பொடியினை வீட்டிலேயே தயாரித்தோம். அதற்கு "அண்ணாமலை ஆயுள்வேதப் பற்பொடி" என அந்த சித்தரின் பெயருடன் சந்தைப்படுத்தினோம். பின் நாட்களில் இதுவே "அண்ணா பற்பொடி" என குடாநாட்டு சந்தைகளில் பிரபலமடைந்தது. கேள்வி: "அண்ணா" தொழில் பல்கிப் பெருகியது எப்படி? பதில்:ஆரம்பத்தில் இருந்தே மில்க் வைற் சோப் முதலாளி கனகராஜாவுடன் ஒரு நல்லவிதமான பழக்கம் ஏற்பட்டிருந்தது. அவர் எனது வறுமை நிலையினை நன்கு உணர்ந்து பல வகையிலும் உதவினார். கோப்பி தயாரிப்பதற்கான எண்ணத்தினை அவரே எனக்கு ஊட்டியதுடன் கோப்பி தயாரிக்கும் வழிமுறைகளையும் கற்றுத் தந்தார். பற்பொடியுடன் அண்ணா கோப்பியையும் வீட்டிலேயே தயாரித்து மிதி வண்டியில் கொண்டு திரிந்து விற்பேன். இதற்காக வடமராட்சி தென்மராட்சி என்று தூர பிரதேசங்களுக்கும் மிதி வண்டியிலேயே செல்ல வேண்டி இருந்தது. எனினும் இரவு பகலாக எமது வீட்டில் இடம்பெற்ற குடும்ப உழைப்பு வீணாகவில்லை. அண்ணா தயாரிப்புக்களிற்கு மக்கள் அதிகமாக கேள்வி ஏற்படுத்தினர். எனவே தொழிலை விரிவு படுத்த சிறிய அரைக்கும் இயந்திரத்தினை கொள்வனவு செய்தோம். அத்துடன் தொழில் தொடங்கி ஒரு வருடத்தில் ஒரு மோட்டார் வண்டியையும் வாங்கினோம். இதன் மூலம் குடாநாட்டின் எல்லா பகுதிகளிற்கும் அண்ணா தயாரிப்புக்களை சந்தைப்படுத்தினோம். அண்ணா உற்பத்திகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து அண்ணா அரிசி, மா,மிளகாய், சரக்குத் தூள், ஜீவாகாரம், நீல பவுடர், சாம்பிராணி, விபூதி, இனிப்பு வகைகள் என "அண்ணா" என்ற வர்த்தக நாமத்தில் பலவகை பண்டங்களையும் தயாரித்தோம். இவற்றுக்கான மூலப் பொருட்களை உள்ளூரிலேயே பெற்றதோடு பல நூறு பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை வழங்கினோம். அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் சொந்தமாக ஆலையை நிறுவி ஊழியர்களையும் வேலைக்கமர்த்தி ஓர் ஒழுங்கு படுத்தப்பட்ட அண்ணா தொழிலகத்தினை ஆரம்பித்தோம். இதற்காக வாகன தளபாடங்களையும் கொள்வனவு செய்து பயன்படுத்தினோம். இதனால் தொழில் ஆரம்பித்து ஐந்து வருடங்களிற்குள்ளேயே குடாநாடு - கொழும்பு - மலையகம் - தென்னிலங்கை என எமது சந்தைப்படுத்லை விரிவுபடுத்த முடிந்தது. கேள்வி: நீங்கள் எதிர் கொண்ட சவால்களில் மிக முக்கியமானது என்று எதைச் சொல்வீர்கள்? பதில்: உள்நாட்டு யுத்தமும் அதன் வழி வந்த இடப்பெயர்வுகளும்தான். 1995 ஐப்பசி மாதமன்று ஒரு நாள் "இன்னும் 24 மணி நேரத்தினுள் அனைவருமே குடாநாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்!" என்ற ஓர் அறிவிப்பு பேரிடியாக வந்தது. அந்த நாட்களில் எல்லாம் விவசாயப்ப பண்ணை, தானியக் களஞ்சிய அறை, கைத்தொழிலகம், விற்பனை நிலையம், இயந்திர வாகன தளபட வசதிகள் என்று பெருமளவு வளங்களை குடாநாட்டில் கொண்டிருந்தோம். அவை அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு ஏதோ முடிந்ததை எடுத்துக்கொண்டு மீசாலை நோக்கி நகர்ந்தோம். பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி - வவுனிக் குளம் - ஜெயபுரம் - யாழ்ப்பாணம் என இடம்பெயர நேரிட்டது. இத்தகைய இடப்பெயர்வு நாம் வைத்திருந்த மனித பௌதீக நிதி வளங்களையும், சந்தை வாய்ப்புக்களையும் சீர் குலைத்தது. அத்துடன் எமது நம்பிக்கை எதிர்பார்ப்பு என்று அனைத்தையும் நாம் எங்கே ஆரம்பித்தோமோ (1959) அந்த இடத்திற்கே கொண்டு சென்றது. கேள்வி: இதில் இருந்து எப்படி மீண்டெழுந்தீர்கள்? பதில்: கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையினை எமது குடும்பத்திடம் இருந்து எந்த சக்தியாலும் முழுமையாக பறிக்க முடியவில்லை. நான் குடும்பம் என்று குறிப்பிடுவது எனது குடும்ப அங்கத்தவரோடு எப்போதுமே எம்மோடு இருக்கும் திறமையான ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளையும்தான். மீசாலைக்கு இடம்பெயர்ந்து நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பக் கூடிய ஒரு சூழல் தென்பட்டது. அப்போது எனது தம்பி விவேகானந்தன் ஒரு பகுதி வளங்களுடன் இணுவிலுக்கு மீண்டான். நான் ஒரு பகுதி வளங்களுடன் வன்னி நோக்கி இடம்பெயர்தேன். 2002ல் ஏ ஒன்பது வீதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயபுரத்தில் இருந்து பாரிய இழப்புக்களுடன் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். வங்கியாளர்களின் கடன் உதவியுடனும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனும் முன்பு இருந்த முன்னேற்றகரமான நிலையினை நோக்கி படிப்படியாக எழுந்து வருகின்றோம். கேள்வி: இப்போது நீங்கள் அடைந்துள்ள நிலையினை சுருக்கமாகச் சொன்னால்.......? பதில்:மாவகை, தூள் வகை, ஊதுபத்தி வகைகள், பண்ணை விற்பனைப் பொருட்கள், கால்நடை தீவினம், இனிப்பு வகைகள் போன்ற பண்டங்களை தற்போது தயாரித்து வருகின்றோம். இவற்றை தயாரிக்கவும் சந்தைப்படுத்தவும் என உரும்பிராய் விவசாய பண்ணை, இணுவில் கைத்தொழிலகம், யாழ்ப்பாணம் மற்றும் இணுவில் மொத்த சில்லறை விற்பனை நிலையம் போன்றவை செயற்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 100 பேர் வரையில் நேரடியாகவும் பல நூறு பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அத்துடன் அண்ணா தயாரிப்புக்களிற்கு உதவியாக அச்சக வேலைகள் மற்றும் சர்வதேச வர்த்தக தொடர்புகளிற்காக "அண்ணா இன்ரநஷனல் பிரைவேட் லிமிடெட்" கொழும்பை தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. 1990 ல் வவுனியா பூந்தோட்டத்தில் அரசாங்கம் வழங்கிய தொழிற்பேட்டையிலும் உணவு பதனிடல் சார்ந்த தொழிற்சாலை ஒன்று "NTK இம்பக்ஸ்" எனும் பெயரில் இயங்கி வருகின்றது. இதே போல கந்தானையிலும் அண்ணா தயாரிப்புக்கள் இடம்பெறுவதோடு அவை நாடு பூராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் இங்கும் பல்லினம் சார்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment