Search This Blog n

28 September 2015

சுழற்பந்து வீச்சை சமாளிப்போம்” தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் டொமிங்கோ பேட்டி

இந்தியாவின் சுழற்பந்து வீச்சு அச்சுறுத்தலை சமாளிப்போம் என்று தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் டொமிங்கா கூறியுள்ளார்.

வந்தது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டி இமாலச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான தர்மசாலாவில் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. 

இதையொட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து புறப்பட்ட பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க 20 ஓவர் அணியினர் நேற்று பிற்பகல் டெல்லிக்கு வந்தடைந்தனர். 

தென்ஆப்பிரிக்க அணியினர் இந்திய மண்ணில் மொத்தம் 12 நகரங்களுக்கு சென்று விளையாட இருக்கிறார்கள். இதில் மூன்று வடிவிலான போட்டிக்கான அணியிலும் அம்லா, டிவில்லியர்ஸ், பிளிஸ்சிஸ், டுமினி, இம்ரான் தார், ரபடா ஆகியோர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பயிற்சியாளர் பேட்டி

இந்தியாவுக்கு கிளம்புவதற்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இது தான் எனது முதல் இந்திய சுற்றுப்பயணம். தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இது எனக்கு புதிய சவாலாகும். தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஒரு சுற்றுப்பயணம் என்றால் வழக்கமாக நாங்கள் 42 அல்லது 43 நாட்கள் விளையாடுவோம். ஆனால் இது 72 நாட்கள் சுற்றுப்பயணம். இதற்கு முன்பு இத்தகைய நீண்ட தொடரில் நாங்கள் விளையாடியது கிடையாது.

அடுத்தடுத்த வாரங்களில் இந்தியாவின் நிறைய சுழல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே, அதன் பிறகு அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று கருதுகிறேன். எனவே அவர்களின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை துவம்சம் செய்து விட்டோம் என்றால், அதன் பிறகு சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஆட முடியும். அதே நேரத்தில் எங்களது மிடில்வரிசை பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சில் தடுமாறினால் நெருக்கடி ஏற்பட்டு விடும் என்பதையும் உணர்ந்துள்ளோம்.

வேகத்திலும்...

சுழற்பந்து வீச்சு மட்டுமின்றி தற்போது இந்திய அணியில் உமேஷ் யாதவ், மொகித் ஷர்மா போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர்கள் எங்களை விட அதிகமான ஷாட்பிட்ச் பந்துகளை வீசியதை பார்க்க முடிந்தது. ஆக்ரோஷமாகவும் செயல்பட்டனர்.
இந்த சுற்றுப்பயணத்தில் தொடக்கம் மிகவும் முக்கியம். ஏனெனில் தொடக்கம் சரியாக மையாவிட்டால், எப்போது தொடர் முடியும் என்ற நினைப்பு வந்து விடும்.
இவ்வாறு டொமிங்கோ கூறினார்.
தென்ஆப்பிரிக்க அணி நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக 20 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment