Search This Blog n

16 December 2013

அசுர வேகத்தில் அதிகரிக்கும் கற்பழிப்பு வழக்குகள்

டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அதிகபட்ச கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தேதி ஓடும் பஸ்சில் துணை மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் பயணம் செய்தபோது, 5 காமுகர்களைக் கொண்ட கும்பல் ஒன்றினால் கற்பழிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சையின் பலனின்றி மரணமடைந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பிறகு கற்பழிப்பு வழக்கில் சிக்கிவர்களுக்கு தண்டனையை கடுமையாக்கி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
அதன்பின்னர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.

டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அதிகபட்ச கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்துக்கு பின்னர் இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்பட்டுள்ளது.

முன்பு கற்பழிப்பு சம்பவங்கள் வெளியே வராது. இப்போது பெண்கள் துணிச்சலுடன் பொலிஸ் நிலையம் வந்து புகார் செய்கின்றனர். அதனால்தான் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை பெருகி உள்ளது என்று டெல்லி பொலிஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் டெல்லி பொலிஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில்,
கடந்த நவம்பர் 30ம் திகதி வரை 11 மாதங்களில் அங்கு 1,493 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. 2012-ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை விட இது இரு மடங்குக்கும் அதிகமாகும்.
2010-ம் ஆண்டு 507, 2011-ம் ஆண்டு 572, 2012-ம் ஆண்டு 706 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.

பாலியல் தொல்லை குற்ற வழக்குகள் இந்த ஆண்டு 5 மடங்குகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, நவம்பர் 30ம் திகதி வரை 11 மாத காலத்தில் 625 வழக்குகள் பதிவாகின. இந்த ஆண்டு இந்த வழக்குகளின் எண்ணிக்கை 3,237 ஆக உயர்ந்துள்ளது.

பெண்களை மானபங்கப்படுத்துதல், கேலி கிண்டல் செய்தல், பின்தொடர்ந்து செல்லுதல் உள்ளிட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 165 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 852 என எகிறி உள்ளது.

டெல்லியில் கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். கூடுதலான பெண்கள் இப்போது பாலியல் பலாத்காரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் பொலிஸ் நிலையம் வந்து புகார் செய்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment