Search This Blog n

18 December 2013

அதிகாரிகளை விசாரிக்க சிபிஐக்கு அரசு அனுமதி தேவையில்லை:

 உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் வழக்குகளில் அரசு அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.

 இந்த வழக்கில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “இணை இயக்குநர் பொறுப்பு வகிப்பவர்களும், அதற்கு மேற் பொறுப்பில் உள்ளவர்களிடமும் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹனவதி, சிபிஐயின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

“உயர் பொறுப்புகளில் இருப்பவர்களை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்த

தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்’ என்று வாஹனவதி கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்பதாகக் கூறி பிறப்பித்த உத்தரவின் விவரம்:

உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் வழக்குகளின் நிலையை விசாரணை அமைப்பு அவ்வப்போது நீதிமன்றத்தில் தெரிவித்து வருகிறது. பொதுநலனை கருத்தில் கொண்டே முக்கிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
இதுபோன்ற வழக்குகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் முன் அனுமதியை சிபிஐ பெறத் தேவையில்லை.

அரசு பதவிகளை சுயலாபத்துக்காக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த ஊழலுக்கு எதிரான சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment