Search This Blog n

09 December 2013

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருக்கோவில் கால்நடை வளர்ப்பாளர்கள்!


திருக்கோவில் பிரதேசத்தில் வட்டமடு மேய்ச்சல் தரைக்கு சொந்தமான நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு ஒரு தலைப்பட்சமாக விவசாயிகளுக்கு வனபரிபாலன சபை அனுமதி வழங்கியதற்கு கால்நடையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலையில் இருந்து சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக 1976 ம் ஆண்டு அரசாங்கத்தினால் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு பிரதேசத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மேய்ச்சல்தரைக்காக ஒதுக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு கால்நடையாளர்கள் அதனுள் கால்நடைகளை வளர்த்து வந்தனர்.
 
பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்ததினால் கால்நடையாளர்கள் அங்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இதனை பயன்படுத்தி காணிச் சட்டத்திற்கு முரணாக போலி தற்காலிக காணிப்பத்திரத்தை பெற்று விவசாயிகள் அத்துமீறி வேளாண்மை செய்துவந்துள்ளனர. இதன் பின் ஏற்பட்ட சமாதான சூழலில் கால்நடையாளர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டு சென்றபோது அதன்

நிலப்பரப்பை அத்துமீறி விவசாயிகள் வேளாண்மை செய்து வந்தனர். இதனையடுத்து, கடந்த மாதம் 19 ம் திகதி திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக அமைச்சர் சுனில் பிரேமஜெயந்த தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் அமைச்சர்களான அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள, பிரதேச செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது இங்கு விசேடமாக அம்பாறை வட்டமடு மேய்ச்சல்தரை பிரச்சினை

கலந்துரையாடப்பட்டது. இதில் அமைச்சர் சுனில் பிரேம் ஜெயந்த இது ஒரு கலந்துரையாடல் எனுவும் இதற்கான தீர்வு இங்க வழங்கப்படமாட்டாது எனவும் வட்டமடு மேய்ச்சல் தரை தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு களநிலவரங்களை பார்வையிட்டு அதன் பின்னர் அம்பாறை கச்சேரியில் கலந்துரையாடல் நடைபெற்று பின்னர் தீர்வு காணப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பின்னர் வட்டமடு மேச்சல் தரை பிரதேசத்தில் உள்ள 4 கண்டங்கள் உள்ளிட்ட 1380 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அனுமதி வழங்குமாறு வனபரிபாலன சபையின் தலைவருக்கு பணிக்கபட்டு அனுமதி

வழங்கப்பட்டுள்ளது. இவ் அனுமதியானது ஒருதலைப்பட்சமானது என கண்டித்து ஆலைடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச கால்நடை வளர்ப்பு சங்கங்கத்தினர் இதனை மீள்பரீசிலனை செய்ய வேண்டும் எனவும் இல்லாவிடில் 40 ஆயிரம் கால்நடைகளை அரசு பெறுப்பேற்று கால்நடையாளர்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என இதற்கான தீர்வு கிடைக்கும்வரை சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ் உண்ணாவிரத போராட்டத்தில் மஹிந்த சிந்தனையில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டபோதும், இத் தீர்மானத்துக்கு மாறாக அம்பாறை மாவட்டத்தில் பால் உற்பத்தி மழுங்கடிக்கப்படுகின்றது. வட்டமடு மேச்சல் தரையில் நீதி நித்திரை கொள்கின்றதா, போன்ற

சுலோகங்கள் தாங்கியவாறு 50 மேற்பட்டோர் இன்று காலை 6.00 மணியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை இவ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆரம்பமான நிலையில் கால்நடையாளர்களுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் தலைமையில் விவசாயிகள் கால்நடையாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில் கால்நடையாளர்கள் 500 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதித்து அவ் இடங்களை சென்று பார்வையிட்டு தீர்மானிப்பதற்காக வட்டமடு பிரதேசத்துக்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் இருபகுதியினரும் தீர்மானம் எதுவும் எட்டப்படாததையடுத்து உண்ணாவிரதம் இடம்பெறவில்லை. அதேவேளை விவசாயிகள் வேளாண்மை செய்வதற்கு

வனபரிபாலனசபை அனுமதி வழங்கியுள்ள நிலையில் கால்நடையாளர்கள் தங்களை வேளாண்மை செய்ய விடாது தடுத்து வருவதாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். இன்று பிற்பகல்வரை உண்ணாவிரதம் தொடர்கிறது.



 
 

0 கருத்துகள்:

Post a Comment