Search This Blog n

08 October 2013

ஏவுகணை பிருத்வி-2 வெற்றிகரமாக பரிசோதனை


ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் இருந்து அணு ஆயுதமேந்திச் செல்லும் திறன் கொண்ட பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக திங்கள்கிழமை சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஏவுகணை சோதனை தளத்தின் இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் கூறுகையில், "இந்த ஏவுகணை 100 சதவீதம் துல்லியத்துடன் 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழித்தது'' என்றார்.
இதுதொடர்பாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் மேலும் கூறியது:

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணையை சோதனை செய்ய டிஆர்டிஓ முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட ஏராளமான ஏவுகணைகளில் இருந்து சோதனை முறையில் ஒரு ஏவுகணை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த ஏவுகணை, சண்டிப்பூர் ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.14 மணியளவில் விண்ணில் ஏவி சோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம், எதிரியின் இலக்கை தேடிச் சென்று அழிக்கும் வல்லமை படைத்தது. மொத்தம் 500 முதல் 1000 கிலோ அணு ஆயுதங்களை சுமந்துச் செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை செலுத்தப்பட்டவுடன் அதன் பாதை ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டது. சில நிமிடங்களிலேயே வங்காள விரிகுடாவில் நிலைநிறுத்தப்பட்ட இலக்கைத் தாக்கி அழித்தது.

கப்பல்களில் இருந்தவாறு, ஏவுகணை எப்படி இலக்கை தாக்குகிறது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்க வல்ல இந்த ஏவுகணை, இந்திய ராணுவத்தின் பலத்தைப் பறைசாற்றும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன், இந்த ஏவுகணை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

Post a Comment