Search This Blog n

20 October 2013

பிளவுபடுத்தும் காங்கிரஸை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய


மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸை மத்திய ஆட்சியில் இருந்து தூக்கியெறிய வேண்டும் என்று பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி அதன் பின் முதன் முறையாக உத்தரப்பிரதேச்துக்கு சனிக்கிழமை வருகை

 தந்தார். நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தின் கான்பூர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்தக் கூட்டத்தில் ராமர் கோவில் விவகாரத்தை மோடி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பேசியதாவது:

மத்திய அரசுக்கு ஒரே மதம்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கே முதல் முன்னுரிமை என்பதே அது. அதற்கு ஒரே புனிதநூல்தான் இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம்தான் அது.

மதச்சார்பின்மை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. நாட்டை ஆளும் கட்சியான அதனிடம் தேர்தல்களில் வெற்றி பெறுவலதற்கு ஒரு மந்திரம், ஒரு கோஷம், ஒரு மருந்து உள்ளது. மக்களைப் பிளவுபடுத்துவதற்காக அவர்கள் மதச்சார்பின்மை மந்திரத்தை உச்சரித்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க.வோ மக்களை ஒன்றிணைக்க உறுதி பூண்டுள்ளது. எங்கள் கட்சியின் லட்சியமானது, ஹிந்துவோ, முஸ்லிமோ, சீக்கியரோ, புத்த மதத்தினரோ அவர்கள் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான்.
நாம் வாக்கு வங்கி அரசியலை ஒரேயடியாக குழிதோண்டிப் புதைக்க வேண்டும். நாம், வளர்ச்சியை நோக்கிய அரசியல் என்ற பாதையில் பயணிக்க வேண்டும்.

உ.பி.யைப் பீடித்த கிரகணம்: உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதியும் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகின்றன. இந்த மூன்று கட்சிகளும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இந்த மாநிலத்தை கிரகணம் போல் பீடித்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம், தான் இழந்த புகழை மீண்டும் பெறுவதற்காக, இந்த கிரகணத்தில் இருந்து விடுதலை பெற விரும்புகிறது. அதேபோல், இந்த மூன்று கட்சிகளையும் தில்லி அதிகாரபீடத்தில் இருந்து அகற்றுவதில் உத்தரப்பிரதேச மக்கள் முன்னணியில் நிற்க வேண்டும்.

அந்த நாளில் வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என்ற அழைப்பு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரில் (கான்பூர்) இருந்தே விடுக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால், மாநில அரசு இன்னமும் வாக்கு வங்கி அரசியலில்தான் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதான கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை விடுதலை செய்ய அகிலேஷ் யாதவ் அரசு முயற்சி எடுத்து வருகிறது.

அவர்கள் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்கள். அவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக உத்தரப்பிரதேசத்தையோ நாட்டையோ அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு, ஒற்றுமையாக இருக்கும் சகோதரர்களைப் பிரிப்பது என்பது காங்கிரஸின் மரபணுவிலும் ரத்தத்திலும் சிந்தனையிலும் இரண்டறக் கலந்துள்ளது.

மக்களை ஏமாற்றுவதில் நிபுணர்கள்: போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் நிபுணர்களாகி விட்டன. காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை புறவாசல் வழியாகக் காப்பாற்றி வருகின்றன. அவை தங்களின் தவறுகளை மறைப்பதற்காக இதைச் செய்கின்றன.

நாட்டின் நிலை இவ்வாறு இருப்பதற்கு காங்கிரஸýக்கு எவ்வெளவு பொறுப்பு உள்ளதோ அதே அளவு பொறுப்பு இந்தக் கட்சிகளுக்கும் உள்ளது. “இந்தியாதான் முதலில்’ என்ற மந்திரத்தை இளம் தலைமுறையினர் தங்கள் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் கொள்ள வேண்டும் என்றார் மோடி.
இளைஞர்களுக்கு அதிகாரம்

முன்னதாக, குஜராத் மாநிலம் காந்திநகரில், ரிலையன்ஸ் நிறுவனம் நிர்வகித்து வரும் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர்

பேசுகையில், “”பல தலைவர்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கான கருவிதான் இளைஞர்கள். ஆனால் என்னைப் பொருத்த வரை, இளைஞர்களுக்கு உரிய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். சமீபத்தில் “தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் இளம் அரசு அமையும்’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மோடி இவ்வாறு பேசியதாகக் கருதப்படுகிறது.

0 கருத்துகள்:

Post a Comment