Search This Blog n

16 April 2015

போலீசார் மீது கொலை வழக்கு20 தமிழர்கள் சுட்டுக்கொலை!!!

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆந்திர சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஐதராபாத் ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவித்தார்.
கோர்ட்டில் வழக்கு
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக கூறி, கடந்த 7–ந்தேதி 20 தமிழர்களை அந்த மாநில சிறப்பு அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஆனால் இது போலி என்கவுன்டர் என, கொல்லப்பட்ட தமிழர்களின் உறவினர்களும், ஆந்திர மாநில மனித உரிமை சங்கத்தினரும் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் ஆந்திர ஐகோர்ட்டில் மனித உரிமை சங்கம் பொதுநல வழக்கு தொடர்ந்தது.
கொல்லப்பட்டவரின் மனைவி
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். மேலும் துப்பாக்கிசூடு தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உரிய முறையில் புகார் அளிக்குமாறும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
அதன்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சசிகுமாரின் மனைவி முனியம்மாள், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த மனுவில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், இந்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்
முனியம்மாளின் இந்த புகார் மனுவை ஐதராபாத் ஐகோர்ட்டு தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த மனு தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி செங்குப்தா, நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆந்திர மாநில அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் டி.சீனிவாஸ் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஏதாவது புகார் வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால் அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர்.
பல்வேறு பிரிவுகள்
அதற்கு பதிலளித்த டி.சீனிவாஸ், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சசிகுமார் என்பவரின் மனைவி முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, அடையாளம் தெரியாத போலீசார் மீது பிரிவு 302 (கொலை), 364 (கொலை செய்வதற்காக வலுக்கட்டாயமாக கடத்தி செல்லுதல்), 34 (பொதுவான நோக்கத்துக்காக ஏராளமானோர் இணைந்து செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு உள்ளது என்றும் சீனிவாஸ்தெரிவித்தார்.
மறுபிரேத பரிசோதனை
இந்த விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த முனியம்மாள், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ள தனது கணவரின் உடல் உள்பட 6 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் 
எனவும், அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், கொல்லப்பட்டவர்களின் உடல்களில் ஏற்கனவே மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யுமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment