Search This Blog n

18 April 2015

பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூடு கண்ணீர் புகை வீச்சு

ஸ்ரீநகரில் பாகிஸ்தான் கொடியுடன் ஊர்வலம் நடத்திய விவகாரத்தில் காஷ்மீர் பிரிவினைவாதி மசரத் ஆலம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, காஷ்மீரில் பயங்கர வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
மசரத் ஆலம்
காஷ்மீர் பிரிவினைவாதியான மசரத் ஆலம் கடந்த 2010-ம் ஆண்டு மாநில அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன போராட்டங்கள் நடத்தினார். இதில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 120 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கு சமீபத்தில் பதவியேற்ற மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான அரசு மசரத் ஆலமை கடந்த சில வாரங்களுக்கு முன் விடுவித்தது. இதற்கு கூட்டணி கட்சியான பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இது தொடர்பாக மத்திய அரசும் கண்டனம் தெரிவித்தது.
பாகிஸ்தான் கொடிகள்
இந்த நிலையில் டெல்லியில் தங்கியிருந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையத் அலி ஷா கிலானி, கடந்த 15-ந்தேதி ஸ்ரீநகர் திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்ற ஆதரவாளர்கள், ஹைதர்போராவில் உள்ள வீட்டுக்கு ஊர்வலமாக
 அழைத்து சென்றனர்.
மசரத் ஆலம் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்து கொண்ட ஏராளமானோர், பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியவாறு சென்றனர். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பிய அவர்கள், பாதுகாப்பு படையினரின் வாகனங்களையும் கல்வீசி தாக்கினர்.
வீட்டுக்காவல்
இதைத்தொடர்ந்து மசரத் ஆலம், கிலானி மற்றும் சில பிரிவினைவாத தலைவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிரிவினைவாதிகளின் இந்த செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீநகர் பேரணி தொடர்பாக மாநில முதல்-மந்திரி முப்தி முகமது சயீத்தை தொடர்பு கொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக மசரத் ஆலம் நேற்று முன்தினம் இரவு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது வீடு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கைது
இந்நிலையில், அவர் நேற்று காலையில் திடீரென கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர் பேரணியில், அவரே பாகிஸ்தான் கொடியை ஏந்தி, பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதுடன், பொதுமக்களையும் அப்படிச் செய்ய தூண்டி விட்டது, வீடியோ ஆதாரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, அவர் கைது செய்யப்பட்டதாக காஷ்மீர் மாநில அரசு தெரிவித்தது. பின்னர், மசரத் ஆலம், சகீத்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வீட்டுக்காவல்
மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க சையத் அலி ஷா கிலானியையும் போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். ஹைதர்போராவில் உள்ள அவரது வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, காஷ்மீரில் கடந்த திங்கட்கிழமை நடந்த துப்பாக்கி சண்டையில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, தெற்கு காஷ்மீரின் திரால் பகுதியில் கண்டன பேரணி ஒன்றை நேற்று நடத்த கிலானி அழைப்பு விடுத்திருந்தார்.
அவரை வீட்டுக்காவலில் வைத்ததை தொடர்ந்து இந்த பேரணிக்கும் போலீசார் தடை விதித்தனர்.
144 தடை உத்தரவு
மேலும், திரால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதுபற்றி போலீஸ் வாகனங்களில் ‘மைக்’ மூலமாக அறிவித்தபடி போலீசார் சென்றனர். பொதுமக்கள், வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அவர்கள் கூறினர்.
திரால் நகருக்கு செல்லும் சாலைகள் அனைத்தையும் மூடி ‘சீல்’ வைத்தனர். ஆங்காங்கே சாலை தடுப்புகளையும் வைத்தனர்.
துப்பாக்கி சூடு
இதற்கிடையே, திரால் நகரில் நேற்று மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தவுடன், வெளியே வந்த நூற்றுக் கணக்கானோர், திடீரென சாலைகளில் திரண்டனர். அரசுக்கு எதிராகவும், சுதந்திரம் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
அங்கு வந்த போலீசாரை நோக்கி அவர்கள் கற்களை வீசினர்.
 அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அதற்கு கூட்டம் கட்டுப்படாததால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
கும்பலின் கல்வீச்சில் போலீசார் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.
இதுபோல், ஸ்ரீநகரிலும், பிரிவினைவாத ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில், 14 பேர் காயம் அடைந்தனர். குல்கம் மாவட்டம் குய்மோவிலும் மோதல் நடந்தது.
அதே சமயத்தில், இஸ்லாமி தன்சீம்-இ-ஆசாதி தலைவர் அப்துல் சமத் இன்குலாபி தலைமையில், திரால் நகரில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்ட காலித் முசாபர் வானியின் வீட்டுடன் பேரணி முடிவடைந்தது.
மத்திய அரசு கண்காணிப்பு
காஷ்மீரில் நடைபெற்று வரும் சமீபத்திய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘காஷ்மீர் நிலவரங்களை மத்திய அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது. அங்கு நடக்கும் நிகழ்வுகளை உள்துறை அமைச்சகமும் நேரத்துக்கு நேரம் கேட்டறிந்து, முக்கியமான வழிகாட்டுதல்களை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ‘பா.ஜனதாவை
 பொறுத்தவரை தேசியவாதம், நாட்டுப்பற்று தொடர்பாக மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரே சீரான கொள்கையையே பின்பற்றி வருகிறோம். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. எங்கள் கொள்கையில் சமரசத்துக்கே இடமில்லை. அங்கு (காஷ்மீர்) கூட்டணி அமைத்திருப்பது முழுக்க முழுக்க அரசு அமைப்பதற்காகவே’ என்றார்.
அதே சமயத்தில், தங்களது நிர்பந்தத்தால் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதை பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் மறுத்தார்.

0 கருத்துகள்:

Post a Comment