Search This Blog n

08 April 2015

அரசியல் சட்ட பெஞ்சுக்கு சுப்ரீம் கோர்ட்டு மாற்றியது

 நீதிபதிகள் நியமன ஆணைய சட்ட வழக்கை அரசியல் சட்ட பெஞ்ச் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு மாற்றியது.
மசோதா நிறைவேறியது
நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க வகை செய்யும் அரசியல் சட்டதிருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் கொலிஜியம் முறையை ஒழித்து விட்டு நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் நீதிபதிகளை நியமிக்க அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் வகையில் இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி ஒப்புதல்
இந்த அரசியல் சட்டத்திருத்த மசோதாவுக்கு, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதியளவு மாநிலங்களின் ஒப்புதல் அவசியமாகும். இந்த மசோதாவுக்கு 29 மாநிலங்களில் 16 மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலும் இந்த சட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது,
இந்நிலையில், நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் மற்றும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரீம் கோர்ட்டு பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மூத்த வக்கீல் பாலி நாரிமன் மற்றும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அனில் திவான் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொலிஜியம் முறையே தொடர வேண்டும் என்று மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
வாதங்கள்
இந்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, மதன் பி.லோகுர் மற்றும் ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் நடைபெற்று வந்தது.
மனுதாரர்களில் ஒருவரான மூத்த வக்கீல் பாலி நாரிமன் நேரில் ஆஜராகி வாதாடினார். அதற்கு எதிராக, மத்திய அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கடந்த மாதம் 24–ந் தேதி இந்த மனுவின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்றம்
இந்நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் ‘இந்த மனுக்கள் விரிவான விசாரணைக்கு உகந்தது. எனவே ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த மனுக்களின் மீதான விசாரணை மாற்றப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த சட்டம் குறித்து நாங்கள் கருத்து எதுவும் கூறவில்லை’ என்று தெரிவித்தார்கள்.
இப்படி ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு விசாரணை மாற்றப்பட்டதால் நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்துக்கு மனுதாரர்கள் கோரியபடி தடை விதிக்க மறுக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment