Search This Blog n

24 November 2014

சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிக்கு திருமணம்:

புழல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிக்கு நாகூரில் திருமணம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூர் யூசூப் நைனா தெருவை சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மகன் முகைதீன் அப்துல்காதர் என்ற உமர்பாரூக் (வயது35). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு, ரெயில்வேயில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி திருச்சி உறையூர் அண்ணாமலை நகரை சேர்ந்த டாக்டர் ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உமர்பாரூக்குக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த உமர்பாரூக்குக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். எனவே திருமணத்துக்காக உமர்பாரூக்கை 2 மாதம் பரோல் விடுப்பில் வெளியே விட வேண்டும் என்று, அவரது தந்தை அப்துல்லா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், உமர்பாரூக்கிற்கு நவம்பர் 22-ந் தேதி முதல் டிசம்பர் 2-ந் தேதி வரை 10 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் விடுப்பில் வெளியில் வரும் அவருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், திருமணம் மற்றும் அதை தொடர்ந்து நடைபெறும் வைபவங்களின்போது போலீசார் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சிறையில் இருந்த உமர்பாரூக் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான நாகூருக்கு வந்தார். நேற்று அவருக்கும் நாகூரை சேர்ந்த ஜாகிராபானு என்பவருக்கும் நாகூரில் திருமணம் நடைபெற்றது. அப்போது உளவு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment