Search This Blog n

02 March 2015

நேரடி மானிய திட்டத்தால் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம்

 நேரடி மானிய திட்டத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
நேரடி மானியம்
கடந்த ஜனவரி 1–ந்தேதியில் இருந்து, நாடு முழுவதும் சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 கோடியே 30 லட்சம் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களில், 75 சதவீதம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
அவர்களுக்கு சந்தை விலையில் கியாஸ் சிலிண்டர் அளிக்கப்படுகிறது. அதற்குரிய மானியத்தொகை, அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
போலிகளை ஒழிக்கவும், சிலிண்டர்களை வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடுவதை தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிரதமர் மோடி தகவல்
இந்நிலையில், சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘நாஸ்காம்’ நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–
சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் நுட்பத்தின் பயன்பாட்டால், உண்மையான பயனாளிகளுக்கு மானியம் சென்றடைவது சாத்தியம் ஆகியுள்ளது.
இத்திட்டத்தால், வேறு பயன்பாட்டுக்கு கியாஸ் சிலிண்டர்களை திருப்பி விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனது கணக்குப்படி, 10 சதவீத முறைகேடு நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது.
நிலக்கரி சுரங்க ஏலம்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தவுடன், மூன்றே மாதங்களில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நிலக்கரி சுரங்கங்கள், ஒளிவுமறைவின்றி மின்னணு ஏல முறையில் விற்கப்படுகின்றன.
மொத்தம் உள்ள 204 சுரங்கங்களில் 19 சுரங்கங்கள் மட்டுமே இப்போதுவரை ஏலம் விடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கூறியபோது, நாங்களும் அதை அரசியலுக்காக பேசி வந்தோம். ஆனால், அந்த தொகையை எங்களால் நம்ப முடியவில்லை. ஆனால், 10 சதவீத நிலக்கரி சுரங்கங்களுக்கே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கிடைத்த பிறகுதான், எல்லா சந்தேகங்களும் தீர்ந்துள்ளது. குட்டையை மட்டுமே பார்த்தவர்களுக்கு கடலின் அளவை கற்பனை செய்ய முடியாதுதான்.
சைபர் பாதுகாப்பு
நான் சந்தித்த பெரும்பாலான உலக தலைவர்கள், கம்ப்யூட்டர் குற்றங்கள் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். எனவே, அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்திய இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மொபைல்போன் பயன்படுத்தவே எல்லோரும் அஞ்சுவார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment