Search This Blog n

26 March 2015

பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படை விமானம், கடலில் விழுந்து விபத்து

  கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படை விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பெண் அதிகாரி உள்ளிட்ட 2 பேர் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
கடற்படை விமானம்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து விமானம், ‘டார்னியர்’. இந்த விமானம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு, போவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சென்று, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அந்த விமானத்தில் விமானி, கமாண்டர், ஒரு பெண் அதிகாரி என 3 பேர் இருந்தனர். திடீரென இரவு 10.02 மணிக்கு கோவாவில் உள்ள கடற்படை விமான நிலையம், இந்த விமானத்துடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும் என்ற யூகம் எழுந்தது.
கடலில் விழுந்தது
அதன்படியே, அந்த விமானம், கோவாவில் தென்மேற்கே 25 கடல் மைல் தொலைவில், இரவு 10.08 மணிக்கு கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும், ஐ.என்.எஸ். சத்புரா, பெட்வா, ஐ.என்.எஸ். சுபத்ரா நீர்மூழ்கிக்கப்பல், இந்திய கடலோர காவல் படை கப்பல் கொருவா, கொண்டல், மகர், மாதங்கா உள்ளிட்ட 12 கப்பல்கள் மற்றும் விமானங்கள், காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
2 பேர் கதி என்ன?
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கமாண்டர் நிகில் ஜோஷி என்ற அதிகாரி காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை மீனவர்கள் மீட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை, ஸ்திரமாக உள்ளதாக கடற்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் டி.கே.சர்மா, டெல்லியில் நிருபர்களிடம் கூறினார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, பெண் அதிகாரி என இருவரின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த பெண் அதிகாரியின் கணவரும் கடற்படையில் பணிபுரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண் அதிகாரி ஒருவர் பயணம் செய்த கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது இதுவே முதல் முறை.
விசாரணைக்கு உத்தரவு
நிலைமையை நேரில் ஆராய்வதற்காக கடற்படை தளபதி ஆர்.கே.தொவான், கோவா விரைந்தார். இதற்கிடையே விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம்தான், கடற்படைக்கு சொந்தமான டார்பெடோ மீட்பு கப்பல் விசாகப்பட்டினத்தில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
இதே போன்று கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மும்பை துறைமுகத்தில் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள், விமானங்கள் விபத்துக்குள்ளாவது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திஉள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment