Search This Blog n

13 March 2015

குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடி திருவிழா ஆட்டு கிடா?????

  ரத்தத்தை உறிஞ்சி குடித்து மருளாளி அருள் வாக்கு கூறினார்
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடி திருவிழா நேற்று நடந்தது. ஆட்டு கிடா ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.
குழுமாயி கோவில் திருவிழா
திருச்சி புத்தூர் ஆறுகண் பாலம் அருகில் அமைந்து உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சோழ மன்னர்கள் காலத்தில் இருந்து 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திருவிழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி அன்றைய தினம் இரவு அம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர்.
திரண்டு நின்ற பக்தர்கள்
மறு நாள் புதன் கிழமை சுத்த பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து அம்மன் தேரில் வீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்தும், மாவிளக்கு சாத்தியும் வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நேற்று 
நடைபெற்றது. இதற்காக புத்தூர் மந்தையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்றனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். கண்காணிப்பு கோபுரம் மூலமும் கண்காணிப்பு பணிகளை செய்தனர்.
மருளாளி வந்தார்
இந்நிலையில் காலை 10.30 மணி அளவில் அம்மனின் அருள் பெற்ற மருளாளி சிவகுமார் புத்தூர் சாலைப்பிள்ளையார் கோவில் அருகில் இருந்து தலையில் கிரீடம் மற்றும் மாலைகள் அணிந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். புத்தூர் மந்தைக்கு வந்ததும் மருளாளிக்கு கிளி பொம்மையுடன் கூடிய பெரிய மாலை அணிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குட்டி குடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. மருளாளியை நான்கைந்து பேர் சேர்ந்து தோளில் தூக்கி வைத்து மந்தையை சுற்றி வந்தனர்.
குட்டி குடித்தார்
ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் வழக்கத்தில் இருந்து வருவதின் அடிப்படையில் மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் முதல் ஆட்டு கிடாகுட்டி கழுத்தில் வெட்டப்பட்டு பீறிட்டு வந்த ரத்தத்தை கிண்ணத்தில் பிடித்து மருளாளியிடம் கொடுத்தனர். அதனை அவர் அப்படியே உறிஞ்சி குடித்தார். இதனை தொடர்ந்து உறையூர் போலீஸ் நிலையம் சார்பில் கொடுக்கப்பட்ட ஆட்டு கிடா வெட்டப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்திருந்த ஆட்டுக்கிடா குட்டிகளை கழுத்தில் வெட்டி மருளாளியிடம் தூக்கி கொடுத்தனர். கழுத்தில் வாய் வைத்து மருளாளி ரத்தத்தை உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். நூற்றுக்கணக்கான ஆடுகள் இப்படி பலியிடப்பட்டன.
அன்னதானம்
இதனை தொடர்ந்து வடக்கு முத்து ராஜா தெரு, தெற்கு முத்துராஜா தெரு உள்பட முக்கிய தெருக்களுக்கு மருளாளி சென்று வீடுகளின் முன்பாக பக்தர்கள் பலியிட்ட ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தையும் குடித்தார். காலையில் தொடங்கிய விழா இரவு வரை நடந்தது
. விழாவையொட்டி புத்தூர் நால்ரோடு முதல் உறையூர்
 வரை நேற்று திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. விளையாட்டு பொருட்கள், மற்றும் தின் பண்டங்கள் விற்பனை செய்யும் ஏராளமான தரைக்கடைகளும் போடப்பட்டு இருந்தன. பல்வேறு சங்கங்கள், சமுதாய அமைப்புகள் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்பட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. மஞ்சள் நீராட்டு விழா முடிந்ததும் மருளாளியை விழாக்குழுவினர் அவரது சொந்த ஊரான சீராத்தோப்பிற்கு மாலை மரியாதையுடன் அழைத்துச்சென்று வீட்டில் விட்டு விட்டு வருவார்கள். நாளை அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment