Search This Blog n

14 May 2013

பெண் குழந்தையை திருடி விற்ற பெண் ஊழியர் ,.


ஈரோடு மரப்பாலம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ஹக்கீம் (வயது 34). இவரது மனைவி மும்தாஜ் (29). இந்த தம்பதியினருக்கு அப்துல்ரசீத் (6) என்ற ஒரு மகன் உள்ளான்.
இதற்கிடையே மும்தாஜ் மீண்டும் கர்ப்பிணி ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மும்தாஜ் கடந்த 9-ந்தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
10-ந்தேதி ஆஸ்பத்திரியில் மும்தாஜிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் 'இன்குபேட்டர்' வார்டில் குழந்தை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. குழந்தையின் தாய் மும்தாஜ் 3-வது மாடியில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது தாயார் பீபிஜான் மட்டும் குழந்தை அருகில் உட்கார்ந்து கவனித்து வந்தார்.
இதற்கிடையே நேற்று மாலை 3.30 மணிக்கு இன்குபேட்டரில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை தாய் சிகிச்சை பெறும் 3-வது மாடியில் உள்ள வார்டுக்கு கொண்டு வரப்பட்டது. குழந்தையை தாய் மும்தாஜ் கொஞ்சி மகிழ்ந்து கவனித்து வந்தார்.
மாலை 4 மணி அளவில் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் போல் வெள்ளை நிற சேலை ஊதா கலர் ஜாக்கெட் அணிந்த ஒரு பெண் அங்கு வந்தார். 'குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் கொண்டு வாருங்கள்' என்று கூறினார்.
மும்தாஜ் நடந்து செல்ல முடியாததால் அவரது தாயார் பீபிஜான் குழந்தையை எடுத்து கொண்டு தடுப்பூசி போடும் இடத்துக்கு சென்றார்.
வயதான அவராலும் நடக்க முடியாததால் அந்த பெண், 'குழந்தையை என்னிடம் கொடுங்கள் இவ்வளவு மெதுவாக நடந்து வந்தால் எப்படி... கொடுங்கள்' என்று கேட்க அவரும் குழந்தையை கொடுத்து உள்ளார்.
குழந்தையை வாங்கி கொண்டு வேகம்... வேகமாக சென்ற பெண் திடீரென மாயமாகி விட்டார். பின்னால் மெதுவாக நடந்து சென்ற பீபிஜான் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரும் உறவினர்களும் ஆஸ்பத்திரி முழுவதும் தேடி பார்த்து விட்டனர். குழந்தையுடன் சென்ற பெண்ணை காணவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் பட்டப்பகலில் நூதனமாக பச்சிளம் குழந்தையை திருடி சென்ற சம்பவம் ஆஸ்பத்திரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துணிகர சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணையை முடுக்கி விட்டனர். குழந்தையை பராமரித்து வந்த பீபிஜான் அந்த பெண் பற்றிய தகவல் குறித்தும் அவர் பேசிய விதம் குறித்தும் அவரது உருவ அமைப்பு குறித்தும் சொன்ன தகவலையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியராக பணிபுரியும் ஜெகதாம்பாள் என்ற பெண்தான் குழந்தையை திருடி சென்றது தெரிய வந்தது. ஜெகதாம்பாள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 10 ஆண்டாக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆகும்.
அதே பகுதியை சேர்ந்த பாங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மேலாளர் ஒருவர் 'தனது மகனுக்கு திருமணமாகி பல வருசம் ஆகியும் குழந்தை கிடையாது. இதனால் பிறந்த குழந்தை ஒன்றை தத்தெடுத்து கொடுங்கள். பெற்றோர்களின் ஒப்புதலின் பேரில் குழந்தையை பெற்று கொடுங்கள்' என்று கூறி உள்ளார். அதற்கு ஜெகதாம்பாளும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில்தான் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை ஜெகதாம்பாள் திருடி கவுந்தப்பாடியில் உள்ள ஓய்வு பெற்ற பாங்கி மேலாளரிடம் கொடுத்து உள்ளார். இதற்காக அவரிடம் பேரம் பேசி ரூ.4 லட்சம் வாங்கி உள்ளார். இந்த சம்பவம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் கவுந்தப்பாடியில் இருந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஜெகதாம்பாளிடமிருந்து ரூ.4 லட்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. குழந்தையை திருடி விற்ற ஆஸ்பத்திரி பெண் ஊழியர் ஜெகதாம்பாளை ஈரோடு மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குனர் குணசேகரன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்
 

0 கருத்துகள்:

Post a Comment