Search This Blog n

09 May 2013

இந்திய ஜ.டி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா


அமெரிக்க குடியேற்ற சீர்திருத்த மசோதாவை எட்டு அமெரிக்க செனட்டர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த மசோதாவில் மிகப் பெரிய இந்திய நிறுவனங்களின் நலன்களுக்கு எதிராக முக்கியமான எட்டு அம்சங்கள் உள்ளன.
இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தீங்காக அமையும். “எட்டு பேர் கும்பல்" என அறியப்படும் இந்த செனட்டர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா அதிபர் கையெழுத்தின் மூலம் சட்டமாக மாறும் பொழுது, இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் தொழில் நலன்களை கண்டிப்பாக பாதிக்கும்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் உயர்மட்ட அமெரிக்க செனட்டர்களின் கூட்டத்தில், இந்திய நிறுவனங்களின் சார்பில் உத்தேச குடியேற்ற சீர்திருத்த மசோதா பற்றிய தனது கவலைகளை தெரிவித்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி, உயர் திறமையான குடியேற்றம் தொடர்பான தனது ஆதரவை வெளியிட்ட செனட்டர் ராபர்ட் மென்ட்ஸுக்கு ராவ் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அமெரிக்க இந்திய வர்த்தகத்தில் இந்த மசோதா ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் எம். ஸ்ரீதரன் ஏப்ரல் 24ம் திகதி வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
விசாலமான குடியேற்ற சீர்திருத்த மசோதாவின் படி, ஹெச்-1பி ஊழியர்கள், கிளையன்ட் தளத்தில் வேலை பார்க்க தடை விதிக்கும் வாய்ப்பு உள்ளது. இது கண்டிப்பாக இந்திய நிறுவனங்களின் நலன்களை பாதிக்கும். இந்த மசோதாவின் படி ஹெச்-1பி ஊழியர்களை சார்ந்திருக்கும் ஒரு நிறுவனம் (15 சதவீதத்திற்கும் அதிகமான ஹெச்-1பி ஊழியர்களை கொண்டிருக்கும் நிறுவனம்), தனது கிளையன்ட் தளத்தில் ஹெச்-1பி ஊழியர்களை வேலைக்கு வைப்பது ஒரேயடியாக தடை செய்யப்படும்.
இரண்டாவதாக, இந்த மசோதா கிளையன்ட் தளத்தில் உள்ள எல்-1 தொழிலாளர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை முன்மொழிகிறது. இதன் விளைவாக இந்திய நிறுவனங்கள் எல்-1 தொழிலாளர்களை (சிறப்பான தகுதி பெற்ற அல்லது நிர்வாகம் சம்பத்தப்பட்ட) அமெரிக்காவிற்கு அனுப்புவது மிகவும் சிக்கலாகிவிடும். இந்த மசோதாவின் படி வேலைக்கு அனுப்பும் எல்-1 தொழிலாளர்களை இந்திய நிறுவனங்கள் மேற்பார்வையிடுவதோடு கட்டுப்படுத்த வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கான அமெரிக்க நிறுவனம் 90 நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவில் அதே பகுதியில் உள்ள எந்த ஒரு பணியாளர்களையும் ஆட்குறைப்பு செய்யவில்லை என உறுதி அளிக்க வேண்டும்.
மூன்றாவது, இந்த மசோதா ஹெச்-1பி மற்றும் எல்-1 தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கிறது. இந்த குடியேற்ற மசோதாவின் கீழ் அமெரிக்க நிறுவனத்தில் மொத்தமாக உள்ள ஹெச்-1பி மற்றும் எல்-1 தொழிலாளர்களின் சதவீதத்திற்கு ஒரு எல்லையை நிர்ணயிக்கலாம்.
மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள இந்த மசோதா, அக்டோபர் 1, 2014 முதல் செப்டம்பர் 30, 2015 வரையிலான காலகட்டங்களில் ஹெச்-1பி மற்றும் எல்-1 தொழிலாளர்களின் அதிகபட்ச விகிதம் 75 சதவீதமாகவும், அக்டோபர் 1, 2015ல் இருந்து செப்டம்பர் 30, 2016 வரை 65 சதவீதமாகவும், அக்டோபர் 1, 2016க்கு பிறகு 50 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது.
இந்திய அமெரிக்க தொழில் வர்த்தக கவுன்சில் மற்றும் கூட்டமைப்பு ஏற்கனவே இத்தகைய நடவடிக்கையை எதிர்த்துள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
 

0 கருத்துகள்:

Post a Comment