Search This Blog n

13 May 2013

முதல் மந்திரியாக இன்று பதவி ஏற்கவுள்ளார்


கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
கர்நாடகத்தில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மைசூர் மாவட்டம் பிரியபட்டணா தொகுதி நீங்கலாக இதர 223 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா 40 தொகுதிகளிலும், கர்நாடக ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் பரத்வாஜை, சித்தராமையா கவர்னர் மாளிகையில் சந்தித்து, ஆட்சி அமைக்க தனக்கு அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கவர்னர் பரத்வாஜ், ஆட்சி அமைக்கும்படி சித்தராமையாவுக்கு அனுமதி அளித்து அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்கிறார். பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான விழாவில் இன்று காலை 11.50 மணிக்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் கர்நாடகம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என்று பல்லாயிரக் கணக்கானவர்கள் பெங்களூர் வருகிறார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விழா நடைபெறும் கண்டீரவா விளையாட்டு மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும், நகரின் முக்கிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கும் சித்தராமையா, கர்நாடகத்தின் 28-வது முதல்-மந்திரி ஆவார். இன்று சித்தராமையா மட்டும் பதவி ஏற்று கொள்கிறார். மந்திரிகள் யாரும் இன்று பதவி ஏற்க மாட்டார்கள்.
மந்திரிகளாக யார்-யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தி பட்டியலை காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்புவார். மேலிட தலைவர்கள் மந்திரிகள் பட்டியலை பரிசீலித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் அனுமதிக்காக அனுப்பி வைப்பார்கள்.
சோனியா காந்தியின் ஒப்புதலுக்கு பிறகு புதிய மந்திரிகள் பதவி ஏற்பார்கள்
 

0 கருத்துகள்:

Post a Comment