Search This Blog n

21 September 2013

தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் ஐதராபாத்தில் அமைக்க


 ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், பிரம்மாண்டமான, தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மண்டலத்தில், 2.20 லட்சம் கோடி ரூபாய் வரை, முதலீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 
தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம்:
 
  பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை கூட்டம், நேற்று டில்லியில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில், ஐதராபாத்தில், பிரமாண்டமான தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் அமைக்க, ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த முதலீட்டு மண்டலத்திற்கு தேவையான வசதிகள் குறித்து, மத்திய சாலை போக்குவரத்து, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ரயில்வே அமைச்சகங்கள், தீவிர ஆய்வு செய்து, பணிகளை மேற்கொள்ளும்.

தனியார் பங்களிப்புடன், இந்த முதலீட்டு மண்டலம் அமைய உள்ளது. மத்திய அரசு சார்பில், மூன்று முக்கிய சாலைகள் மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து நீட்டிப்பு போன்றவை செய்து தரப்படும். இதற்காக, 3,275 கோடி ரூபாய் செலவிடப்படும்.தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தில், 2.20 லட்சம் கோடி ரூபாய் வரை, முதலீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 15 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 56 லட்சம் பேருக்கு, மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டம், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.

இலக்கு நிர்ணயம்:

இந்த திட்டத்திற்காக, 202 சதுர மீட்டர் நிலம், கையகப்படுத்தப் பட்டுள்ளது. பணிகள், விரைவில் ஆரம்பிக்கப்படும். வரும், 2018ம் ஆண்டிற்குள், இந்த திட்டத்தின் முதல் கட்டம், நிறைவேற்றி முடிக்கப்படும்.இவ்வாறு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில், எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள் விவரம்:

வரும், 2016-17ம் ஆண்டிற்குள், 25 லட்சம் டன் அளவுக்கு கூடுதலாக, உணவு தானிய உற்பத்தி இருக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் டன் அரிசி, எட்டு லட்சம் டன் கோதுமை, நான்கு லட்சம் டன் பருப்பு வகைகள், மூன்று லட்சம் டன் சிறு தானியங்கள் என, நிர்ணயிக்கப்பட்டுள்ள, இந்த இலக்குகளுக்காக, 12 ஆயிரத்து 350 கோடி ரூபாய் செலவிடப்படும்.
 

0 கருத்துகள்:

Post a Comment