Search This Blog n

14 September 2013

வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்:



 தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தனது சொத்து, தனிப்பட்ட விவரங்கள், குற்றப் பின்னணி போன்ற விவரங்களைக் குறிப்பிடாமல் மறைத்தால், அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இது தொடர்பாக "ரிசர்ஜன்ஸ் இந்தியா' என்ற அரசு சாரா அமைப்பு 2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

  "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் வேட்பு மனுவில் தங்கள் பின்னணி, சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி பற்றி முழுமையாகக் குறிப்பிடுவதில்லை அல்லது அந்த பகுதியை நிரப்பாமல் விட்டுவிடுகின்றனர். இதனால், வாக்காளர்களுக்கு வேட்பாளரின் உண்மை நிலை மறைக்கப்படுகிறது.

  அந்த மனுக்கள் ஏற்கப்படுவதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறவும் செய்கின்றனர். இதன் மூலம் வாக்காளர்களுக்கு உண்மை மறைக்கப்படுகிறது. தவிர, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முந்தைய காலங்களில் வழங்கிய வழிகாட்டுதல் நெறிகளும் மீறப்படுகின்றன' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
 இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக பதில் அளித்த தேர்தல் ஆணையமும் "முழு விவரத்தையும் குறிப்பிடாத வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்யலாம்' என்று கருத்துத் தெரிவித்திருந்தது.
  
உத்தரவு: இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ரஞ்சன் கோகோய் இடம்பெற்ற அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
  
"தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது கல்வி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட சில பகுதிகளை பூர்த்தி செய்யாதபோதும், அதைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்வது குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதற்கு ஒப்பாகும். அவ்வாறு தகவல் தெரிவிக்காத வேட்பாளர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 125-ஏ பிரிவின்படி நடவடிக்க எடுக்கலாம்.

  எனவே, நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளரைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது குடிமக்களின் உரிமை. அரசியமைலமைப்புச் சட்டத்தின் 19(1) பிரிவு அதற்கான உரிமையை குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. எனவே, குறிப்பிட்ட பகுதியை

வேட்பாளர் பூர்த்தி செய்யாமல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தால் அதை சரிபார்த்து, பூர்த்தி செய்த பிறகே ஏற்க முடியும் என்பதை தெளிவுபடுத்துவது தேர்தல் அதிகாரியின் கடமை. அதையும் மீறி தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்.

  அதே போல, வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு முழுமையான தகவல் அளிக்காததால் அந்த வேட்பாளரைத் தண்டிப்பது தேவையற்றது என நீதிமன்றம் கருதுகிறது' என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
 

0 கருத்துகள்:

Post a Comment