Search This Blog n

08 September 2013

இலங்கையருடையதா தனுஷ்கோடிக்கு வந்த மர்ம படகு ?



தனுஷ்கோடி அரிச்சல்முனை மணல்திட்டு பகுதி வரை வந்து சென்ற மர்ம படகு குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான மத்திய உளவு துறையினரின் எச்சரிக்கையை அடுத்து ராமேஸ்வரம் தீவுப்பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி, ராமேஸ்வரம், ஓலைக்குடா டெவில்பாயின்ட், வடகாடு, தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதசுவாமி கோயில், ரத வீதிகள், பாம்பன் ரயில் மற்றும் ரோடு பாலங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

அக்னிதீர்த்த கடற்கரை மற்றும் கோயில் வாசல்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம், வந்து செல்லும் புதிய படகுகள் குறித்து மீனவர்களிடம் அவ்வப்போது புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி மாலை 3 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் முதலாவது மணல் திட்டு வரை பைபர் கிளாஸ் படகு ஒன்று விரைவாக வந்துள்ளது.

சிறிது நேரத்தில் அந்த படகு வேகமாக திரும்பி சென்றதையும் மீனவர்கள் சிலர் பார்த்துள்ளனர்.

வந்தது பைபர் கிளாஸ் படகு என்பதால் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீன்பிடி படகு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இலங்கையிலிருந்து வந்த படகாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் வடக்கு கடல் பகுதியிலிருந்து மர்மநபர்கள் சிலர் பைபர் கிளாஸ் படகு ஒன்றில் இலங்கைக்கு பொருட்களை கடத்தி சென்றதாகவும் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த 2 படகுகளும் இலங்கையை சேர்ந்தவை என்று அப்பகுதி மீனவர்கள் புலனாய்வு துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்திய மத்திய, மாநில புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment