Search This Blog n

09 September 2013

விநாயகர் சதுர்த்தி: இந்திய பிரதமர், தமிழக முதல்வர் வாழ்த்து


விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

"சுதந்திரப் போராட்டத்தின் வேராக இந்தப் பாரம்பரியப் பண்டிகை விளங்குகிறது. சகோதரத்துவம், ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகியவற்றை இந்தப் பண்டிகை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தேசக் கட்டுமானத்திற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்கு விநாயகர் சதுர்த்தி ஊக்கமளிக்கிறது. இந்தப் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, வளமை, அமைதி ஆகியவற்றைக் கொண்டுவரட்டும்' என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
விநாயகரின் கருணையால் மக்களின் வாழ்வில் இன்பங்கள் பெருகி, அனைத்து வளமும் பெற்று நோய்நொடி இல்லா பெருவாழ்வு வாழ வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும் மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் மூதாட்டியான ஒளவையார், தும்பிக்கையுடன் கூடிய திருமேனி கொண்ட விநாயகரை வணங்கி அவர் திருவடி சரண் அடைபவர்களுக்கு நல்ல சொல் வளம், பொருள் வளம், மன வளம், உடல் நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும் என கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று மக்கள் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ, அரளி மலர் மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றைப் படைத்து பயபக்தியுடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.

வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று நோய்நொடி இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment