Search This Blog n

02 September 2013

''எங்கேயோ தவறு நடந்து இருக்கிறது!''


தி.மு.க-வின் 'மாஸ்டர் பிளான்’ ச‌ட்டத் தாக்குதல்களாலும், கடைசி நேரத்தில் 'கை’கூடிய அரசியல் விளையாட்டுகளாலும், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கே திசைமாறிவிட்டது.
கடந்த 17 ஆண்டுகளாக நடைபெறும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் விசாரணை என அனைத்தும் முடிந்து, ஜெ. தரப்பின் இறுதி விவாதமும் கடந்த வாரம் ஒருவழியாக முடிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 24 மற்றும் 26-ம் தேதிகளில் அரசு வக்கீல் பவானி சிங்கும் இறுதி வாதத்தைத் தொடங்கினார். 'இன்னும் தீர்ப்பு மட்டும்தான் மிச்சம் இருக்கிறது’ என சொல்லப்பட்டு வந்த நிலையில், அரசு வக்கீலையே திடீரென திரும்பப்பெற்றிருக்கிறது கர்நாடக அரசு. 'அடுத்து என்ன நடக்குமோ?’ என ஒட்டுமொத்த அரசியல் பார்வையாளர்களின் கண்களும் பெங்களூரு பக்கம் திரும்பியிருக்கிறது.
நல்ல பிள்ளையானார்கள்!
17 ஆண்டுகளாக விடாப்பிடியாக வழக்கை இழுத்தடித்த ஜெயலலிதா தரப்பு, கடந்த ஐந்து மாதங்களாக திடீரென நல்ல பிள்ளையாக மாறி, பெங்களூருவிலேயே தங்கி வழக்கை முடிக்க திட்டமிட்டு இருந்தனர். மாதா மாதம் ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் மனு மேல் மனு போட்டு, அப்பீலுக்கு மேல் அப்பீல் போய் வழக்கை இழுத்தடித்தவர்கள், நீதிபதி பாலகிருஷ்ணாவும் அரசுத் தரப்பு வக்கீலாக பவானி சிங்கும் பதவியேற்றப் பின், புதிய மனு போடுவதையே நிறுத்திக்கொண்டனர். அதோடு, சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரிகளிடமும் அரசுத் தரப்பு வக்கீலிடமும் அளவுக்கு மீறி நட்பு பாராட்டினர். இது தி.மு.க. தரப்புக்கு பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது.
புகுந்து விளையாடிய தி.மு.க.!‌
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் ஜெ. வழக்கின் போக்கை வேடிக்கை பார்க்கத்தான் முதலில் தி.மு.க. வந்தது. ஜெ. தரப்பு வக்கீல்கள் செய்த சிறுசிறு பிழைகள்தான், வழக்கின் குடுமியையே தி.மு.க-விடம் சிக்கவைத்தது. கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் 'வழக்கு தொடர்பான ஆவணங்கள் வேண்டும்’ என மனு போட்ட தி.மு.க., 2-ம் வாரத்தில் 'எங்களையும் வழக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள். அரசு வக்கீலுக்கு உதவிசெய்கிறோம்’ என  புதிய மனு போட்டது. இதனை சற்றும் எதிர்பாராத ஜெ. தரப்பு அதிர்ந்தது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள் 3-வது வாரம், 'அரசு வக்கீலின் போக்கே சரியில்லை. ஜெயலலிதா தரப்புக்கு உடந்தையாக இருக்கிறார். அதனால், அவர் வழக்கை நடத்தக் கூடாது’ என ஸ்பெஷல் கோர்ட்டில் புதிய வெடிகுண்டு போட்டது. அமைதி திரும்பும் முன், கடந்த 24-ம் தேதி கர்நாடக ஹை கோர்ட்டில், 'அரசு வக்கீல் பவானி சிங்கை உடனடியாக மாற்ற வேண்டும். அவர் எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார்’ என புதிய ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. அது, கடந்த 26-ம் தேதி கர்நாடக ஹை கோர்ட்டில் நீதிபதி போப்பண்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் நாகேஷ்குமார் ஆஜராகி, ''என்ன காரணத்துக்காக ஜெயலலிதாவின் வழக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்ற‌ப்பட்டதோ, அது இப்போது நிறைவேறவில்லை. அரசுத் தரப்பு வக்கீல் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அதனால் உடனடியாக அவரை மாற்ற வேண்டும்'' என சூடாகவே வாதிட்டார். இவர்களின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு கர்நாடக மாநில தலைமைச் செயலர் எஸ்.வி.ரங்கநாத்துக்கும் அரசு வக்கீல் பவானி சிங்குக்கும் நீதிபதி போப்பண்ணா உத்தரவிட்டார். 'இதுவே நம‌க்கு கிடைத்த மாபெரும் துருப்புச் சீட்டு. மிஸ் பண்ணிவிடக் கூடாது’ என கோர்ட் வளாகத்தில் இருந்தவாறே தர்மபுரி தி.மு.க. எம்.பி-யான தாமரைச்செல்வன் கட்சி மேலிடத்துக்குத் தகவல் கொடுத்தார். அடுத்த நிமிடமே அறிவாலயத்தில் இருந்து டெல்லிக்குக் கோரிக்கைப் போய் இருக்கிறது. உடனடியாக காய்கள் நகர்த்தப்பட்டு பவானி சிங் மாற்றப்பட்டார்.
கோபத்தின் உச்சியில் பவானி சிங்!
பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில், 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வழக்கம்போல அரசுத் தரப்பு இறுதி வாதத்தை முன்வைக்க பவானி சிங் எழுந்தார். அப்போது கோர்ட் உதவியாளர் சந்திரசேகர் குறுக்கிட்டு, பாவனி சிங் அரசு வக்கீல் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கான ஆர்டரை நீதிபதி பாலகிருஷ்ணாவிடம் வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத பவானி சிங் தனது இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து பெருங்கோபத்துடன் கோர்ட்டில் இருந்து வெளியேறினார். ஸ்பெஷல் கோர்ட்டில் இருந்து நேராக ஹை கோர்ட்டுக்குச் சென்ற பவானி சிங், 'தான் நீக்கப்பட்டது சட்டப்படித் தவறு’ என கர்நாடக அரசுக்கு எதிராக புதிய ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு நீதிபதி போப்பண்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வக்கீல் பவானி சிங், ''எனது மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்'' என விரக்தியுடன் சொல்லிவிட்டு கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார்.
கோபத்தின் உச்சியில் இருந்தவரை மடக்கி பேசினோம். ''ஜெயலலிதாவின் வழக்கில் இருந்து என்னை திடீரென நீக்கியது சட்டப்படி தவறு. எங்கேயோ தவறு நடந்து இருக்கிறது. அதனால்தான் ஹைகோர்ட்டில் மனு போட்டேன். இங்கு எனக்கு நீதி கிடைக்காது என்பதால், மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன். இதே மனுவை சுப்ரீம் கோர்ட்டில் போடுவேன். அங்கே நிச்சயம் வெற்றிபெறுவேன். என்னை நீக்கியவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்'' என சீற்றமாக சொன்னவரிடம், ''அரசு வக்கீல் பொறுப்பில் இருந்து உங்களை நீக்கியதன் பின்னணியில் அரசியல் இருக்கும்  என நம்புகிறீர்களா?'' என கேள்வி கேட்டோம். ''அதை நீங்கள் (மீடியா)தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்'' என சொல்லிவிட்டு காரில் ஏறி பறந்தார்.
''இன்னும் நிறைய இருக்கு...!'' ‌
27-ம் தேதி காலை அரசு வக்கீல் பவானி சிங் ஸ்பெஷல் கோர்ட்டில் இருந்து வெளியேறிய அடுத்த கணமே, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் தர்மபுரி தி.மு.க. எம்.பி-யான தாமரைச்செல்வன் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், ''ஜெயலலிதாவின் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தியபோது கைப்பற்றப்பட்ட வெள்ளி, தங்க, வைர நகைகள், பொருட்கள், விலை மதிப்புமிக்க அலங்கார பொருட்கள் அனைத்தும் சென்னை ரிசர்வ் வங்கியில் வருமானவரித் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இப்போது தமிழகத்தில்  ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்வதால், அதிலும் அநீதி நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அந்தப் பொருட்களை எல்லாம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்'' என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பாலகிருஷ்ணா அந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். கோர்ட் முடிந்து வெளியே வந்த தி.மு.க. தலைகளிடம் பேச்சு கொடுத்தபோது, ''இப்போதானே ஆரம்பிச்சு இருக்கோம். இனி போக போக நிறைய இருக்கு'' என அழுத்திச் சொன்னார்கள்.
ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹைகோர்ட்டிலும் ஜெயலலிதாவுக்கு எதிராக எல்லா அஸ்திரங்களையும் கையில் எடுத்திருக்கும் தி.மு.க., அடுத்து இன்னொன்றையும் கையில் எடுத்திருக்கிறது. அது என்னவென்றால், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த முன்னாள் அரசு தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யாவையே மீண்டும் களமிறக்க 'லாபி’ செய்துவருகிறார்கள். ஆச்சார்யாவே மீண்டும் சிறப்பு அரசு வக்கீலாக ஜெயலலிதா வழக்கில் வாதாடினால், நிச்சயம் அனல் பறக்கும் எனகிறார்கள். இப்போது ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாக இருக்கும் பாலகிருஷ்ணாவின் பதவிக் காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவதால், அடுத்த நீதிபதியின் மூலமாகவே வழக்கு முடியும்.
மொத்தத்தில் ஜெயலலிதாவின் நிம்மதி பறிபோயிருக்கிறது

0 கருத்துகள்:

Post a Comment