Search This Blog n

01 February 2015

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது..

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
அக்னி-5 ஏவுகணை
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து உள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், 
அக்னி ஏவுகணைகள் உள்ளன.
அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரமும், அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரமும், அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி-4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்க வல்லவை.
இந்த வரிசையில் அக்னி-5 ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
5 ஆயிரம் கிலோ மீட்டர்
17.5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. 1 டன் எடையுள்ள அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது.
இந்த ஏவுகணை முதன் முதலாக 2012-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி சோதித்து பார்க்கப்பட்டது. அதன்பிறகு 2-வது முறையாக 2013-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி சோதனை நடத்தப்பட்டது.அக்னி-5 ஏவுகணை தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. சாலை மார்க்கமாக நகரும் ஏவு வாகனத்தில் இருந்து விண்ணில் செலுத்தும் வகையில் ஏவுகணை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இலக்கை தாக்கியது
இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகே உள்ள வீலர் தீவில் நகரும் ஏவு வாகனத்தில் இருந்து நேற்று காலை 8.06 மணிக்கு விண்ணை நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டது. பொத்தானை அழுத்தியதும் ஏவுகணை உலோக கூண்டிலிருந்து வெளிப்பட்டு 20 மீட்டர் உயரம் சென்றதும் 2-வது கட்டமாக அதில் உள்ள மோட்டார் இயங்கி ஏவுகணையை குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்றது.
அதன்பிறகு 3-வது கட்டமாக அதில் உள்ள சக்திவாய்ந்த ராக்கெட் மோட்டார் இயங்கியதும், 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான உயரத்துக்கு ஏவுகணை சென்றது. குறிப்பிட்ட அந்த உயரத்தை ஏவுகணை சென்று அடைந்ததும், அதில் உள்ள கம்ப்யூட்டரின் வழிகாட்டுதல்படி ஏவுகணை இலக்கை நோக்கி திரும்பியது. பூமியின் ஈர்ப்பு சக்தியும் சேர்ந்த ஏவுகணை மின்னல் வேகத்தில் சென்று இலக்கை தாக்கியது.
சோதனை வெற்றி
பூமியில் உள்ள இலக்கை நோக்கி ஏவுகணை பாயும் போது, காற்றின் உராய்விலால் ஏற்படும் வெப்பம் 4 ஆயிரம் டிகிரி செல்சியசாக இருக்கும். அந்த மிதமிஞ்சிய வெப்பத்தை தாங்கக்கூடிய அளவுக்கு ஏவுகணையின் வெளிப்புற சுவர்ப்பகுதி கார்பன் கலந்த வெப்ப தடுப்பு தகடுகளால் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் வெளிப்புற உராய்வு வெப்பம் 4 ஆயிரம் டிகிரி செல்சியசாக இருந்த போதிலும், ஏவுகணையின் உள்பகுதி வெப்பம் 50 டிகிரி செல்சியசாகவே இருக்கும்.
ஏவுகணை இலக்கை அடையும் முன் அதில் வைக்கப்பட்டுள்ள வெடிபொருள் வெடித்து விடாமல் இருப்பதற்காக, அதில் இந்த பாதுகாப்பு அம்சம் இடம்பெற்று உள்ளது. நேற்று பரிசோதனையின் போது ஏவுகணையில் மாதிரி வெடிபொருள் வைக்கப்பட்டு இருந்தது.
ஏவுகணை செலுத்தப்பட்ட போது அதன் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ரேடார் வசதிகளுடன் கடலில் 3 இடங்களில் இந்திய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கட்டத்திலும் ஏவுகணை சரியாக செயல்பட்டு இலக்கை துல்லியமாக அடைந்ததை அவை உறுதி செய்தன.இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை சென்று தாக்கியதாகவும் ஒருங்கிணைந்த ஏவுதள மையத்தின் இயக்குனர் எம்.வி.கே.வி.பிரசாத் தெரிவித்தார்.
பிரதமர் வாழ்த்து
அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அக்னி-5 ஏவுகணை நமது ராணுவத்தின் விலைமதிப்புமிக்க சொத்து என்றும், சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் ‘டுவிட்டர்’ வலைத்தள பக்கத்தில் எழுதி இருக்கிறார்.
அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்திருப்பதாக கூறி, நிதி மந்திரி அருண் ஜெட்லியும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இந்த வெற்றி வரலாற்று சாதனை என்றும், இந்தியாவின் கனவு நனவாகி இருப்பதாகவும் அக்னி-5 திட்ட இயக்குனர் ராஜேஷ் குப்தா தெரிவித்தார்.
அக்னி-5 ஏவுகணையின் சிறப்பு அம்சங்கள்
 துப்பாக்கியில் இருந்து கிளம்பும் புல்லட்டை விட வேகமாக பாய்ந்து செல்லக்கூடியது.
 1 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும்.
 இந்தியாவுக்கு கிழக்கே சீனா வரையிலும், மேற்கே அனைத்து ஐரோப்பிய நாடுகள் வரையிலும் சென்று தாக்கும் திறன் கொண்டது.சாலை மார்க்கமாக கொண்டு சென்று இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் இந்த ஏவுகணையை எதிரி இலக்கை நோக்கி ஏவ முடியும்.
 அக்னி-5 ஏவுகணையை செலுத்த கட்டுப்பாடு உள்ளது. பிரதமர் நேரடியாக உத்தரவிட்டால்தான் இந்த ஏவுகணையை செலுத்த முடியும். கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் சேர்ந்து இருக்கிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment