Search This Blog n

24 February 2015

அவசர சட்டத்தை விவாதிப்பதற்காக மேல்–சபையில்

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை விவாதிப்பதற்காக மேல்–சபையில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய காங்கிரஸ் நோட்டீசு பட்ஜெட் தொடரில் முதல் முட்டுக்கட்டை
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முட்டுக்கட்டையாக, மேல்–சபையில் கேள்வி நேரத்தை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் கட்சி நோட்டீசு வழங்கி உள்ளது.
அவசர சட்டம்
நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டம் உள்பட 6 அவசர சட்டங்களை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பிறப்பித்தது. மேலும் இந்த அவசரச் சட்டங்களை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து, சட்டமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சி, பாராளுமன்றத்தில் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன.
விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் பிரச்சினையாக இந்த அவசரச் சட்டத்தை விவாதிக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி மேல்–சபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீசு வழங்கி உள்ளது.
சபை விதி 267–ன் கீழ் இந்த நோட்டீசை வழங்கிய மேல்–சபை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, இந்த விவகாரத்தில் கட்சி இனியும் மவுனமாக இருக்காது என கூறினார். இந்த அவசரச்சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது என்று கூறிய அவர், தேவையற்ற கையகப்படுத்துதலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை இச்சட்டம் நீக்கிவிடும் என்று தெரிவித்தார்.
அபிஷேக் சிங்வி
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று கூறியுள்ள கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, எனினும் இன்சூரன்ஸ் அவசர சட்டத்துக்கு எதிராக இத்தகைய எதிர்ப்பை காட்டமாட்டோம் என்று கூறினார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதால், வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment