Search This Blog n

25 February 2015

ரெயில் நிலையங்களை சூரிய மின்சக்தியில் இயக்க திட்டம்


 நாளை தாக்கல் ஆகும் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
முக்கிய ரெயில் நிலையங்களை சூரிய மின்சக்தியில் இயக்குவதற்குரிய திட்டம் குறித்து நாளை தாக்கல் செய்யப்படும் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில்வே பட்ஜெட்
பாராளுமன்றத்தில் நாளை(வியாழக்கிழமை) தனது முதல் ரெயில்வே பட்ஜெட்டை மந்திரி சுரேஷ்பிரபு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் ரெயில்வே இலாகாவை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ரெயில்களை இயக்குவதற்கு தேவையான மாற்று எரிபொருள் சக்தி குறித்த சிந்தனை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம் காணப்படுகிறது.
எனவே அது குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சூரிய மின்சக்தி நிலையங்கள்
ரெயில் பெட்டிகள், ரெயில் நிலைய கட்டிடங்கள், நடைமேடைகள் ஆகியவற்றில் மின்சாரத் தேவைக்காக சூரியஒளி மின்சக்தி உற்பத்தி நிலையங்களை நிறுவிடவும் ரெயில்வே இலாகா திட்டமிட்டு இருக்கிறது.

இதேபோல் ரெயில் பெட்டி உற்பத்தி பிரிவுகள், ரெயில் பணிமனைகளிலும் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
நாடு முழுவதிலும் ரெயில் பயணிகளால் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் குவிகின்றன. இந்த கழிவுகளைக் கொண்டு மின் உற்பத்தியை பெறுவது குறித்த அறிவிப்பும் ரெயில்வே பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் சேமிப்பு
நீர் சேமிப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்றும் ரெயில்வே அமைச்சக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான முக்கிய ரெயில் நிலையங்களில் கோடைகாலத்தின்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்த தட்டுப்பாட்டை போக்கும் விதமாக 
நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி முறையில் நீரை தயாரிக்கும் நிலையங்களை ரெயில் பெட்டிகள் நிறுத்தும் கூடங்கள், ரெயில்வே பணிமனைகள், ரெயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோல் நீர் நிர்வாக மேலாண்மையை கையாளுவதற்கும் ரெயில்வே இலாகா திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தேவைப்படும் நீரை அதிக அளவில் சேமிக்க முடியும் என்றும் ரெயில்வே இலாகா கருதுகிறது.
தரத்துக்கு சான்று
அனைத்து முக்கிய ரெயில் பணிமனைகள் மற்றும் ரெயில் பெட்டி தயாரிப்பு பிரிவுகள் ஆகிய இடங்களில் ரெயில் பெட்டிகளின் தரம், சுகாதார மேம்பாடு, பயணிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பான சான்றிதழ் அளிப்பதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் ஒன்றையும் மந்திரி சுரேஷ் பிரபு வெளியிடுவார் என்ற 
எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதேபோல், ரெயில் என்ஜின்களில் இருந்து வெளிப்படும் ஒலியின் அளவை குறைக்க அவற்றின் வடிவமைப்பை அமெரிக்க தரத்துக்கு இணையாக மாற்றுவது குறித்து திட்டமும் ரெயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment