Search This Blog n

11 January 2013

சுடிதாருக்கு மேல் அணியும் மேல்கோட் கொடுக்க அரசு மறுப்பு.

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவியருக்கு ஓவர் கோட் அளிக்கும் விவகாரத்திலிருந்து கல்வித்துறையினர் பின்வாங்கியுள்ளனர். புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவியரின் சீருடையில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒட்டுமொத்த மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், கல்வியமைச்சர் தி.தியாகராஜன் தலைமையில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில், அனைத்து அரசுப் பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்றனர். இதில், பள்ளியின் முன்பு காலை, மாலை நேரத்தில் போலீஸாரை நிறுத்த வேண்டும். மாணவியருக்கு எனத் தனி பஸ் இயக்க வேண்டும். சீருடையில் மாற்றம் கொண்டு வந்து, மாணவியருக்கு ஓவர் கோட் அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் ஆலோசனை தெரிவித்தனர். இதையடுத்து, அரையாண்டுத் தேர்வு முடிந்து மாணவியர் பள்ளிக்குத் திரும்பும்போது மாணவியருக்கு எனத் தனியே பஸ் இயக்கப்படும். மாணவ, மாணவிருக்கு அடுத்த ஆண்டு முதல் சீருடையில் மாற்றம் கொண்டுவர ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆசிரியர்களின் கருத்துபடி, மாணவிகளுக்கு ஓவர் கோட் அளிக்கப்படும் என அமைச்சர் தியாகராஜன் அறிவித்தார். இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். ஒரு சில மாணவர் அமைப்புகள், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், திடீரென ஓவர் கோட் அளிக்கும் முடிவிலிருந்து அரசு பின்வாங்கியிருக்கிறது. இதுதொடர்பாக, கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியார் பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளி மாணவியருக்கு சுடிதாரின் மேல் அணியக்கூடிய வகையில், கையில்லாத அரைச்சட்டை வழங்குவது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ளன. இத்தகைய சூழலில் மாணவியரின் சீருடையின் வடிவத்தில் எவ்வித மாற்றமும் செய்யும் உத்தேசம் அரசுக்கு இல்லை. மாணவியருக்குக் கடந்த ஆண்டைப்போலவே சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

Post a Comment