Search This Blog n

20 October 2014

கடந்த 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

 இந்தியா முழுவதும் 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1,780 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது.
 இந்த நிலையில் சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள ஸ்ரீநகர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், டெல்லி, ஆமதாபாத், கவுகாத்தி, நாக்பூர், மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கோவா, பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, கோவை, திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம், போர்ட்பிளேர் சர்வதேச விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் எடுத்துள்ளது.

அட்டாரி-வாகா எல்லை, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் முனபாவ் ரெயில் நிலையம் ஆகிய இரு சர்வதேச தரைவழி தடத்திலும் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் தொடங்கி ஆகஸ்டு வரையிலான 5 மாத காலகட்டத்தில் ரூ.470 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுங்கத்துறையினர் 1,780 வழக்குகளை தாக்கல் செய்திருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக வட்டாரங்கள் கூறுகின்றன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வழக்குகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

2013-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் தங்க கடத்தல் தொடர்பாக 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.153 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
 தங்கத்திற்கு பெருகி வரும் கிராக்கியை சமாளிக்க, கடத்தல்காரர்கள் தங்க கடத்தலில் புதிய வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடத்தல்காரர்கள் கடல் மார்க்கத்தையும் தங்க கடத்தலில் இருந்து விட்டு வைக்கவில்லை. குளிர்பான பாட்டில்களுக்கு மத்தியில் வைத்து கடத்தி வந்த தங்கம், குஜராத் துறைமுகம் ஒன்றில் கைப்பற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிற வேளையில், தங்கத்தின் தேவை பெருகி வருவது மத்திய நிதி அமைச்சகத்துக்கு கவலை அளிப்பதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment