Search This Blog n

03 July 2013

தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து; நீதி வென்றது:


சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு உள்ளிட்ட பாமகவினர் 20 பேர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் நீதி வென்றிருப்பதாக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
 இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

 மரக்காணத்தில் பாமகவைச் சேர்ந்த 2 பேர் படுகொலை செய்யப்பட்ட கலவரத்துக்கு நீதி கேட்டுப் போராடியபோது, என்னையும் (ராமதாஸ்) அன்புமணி, ஜி.கே.மணி, ஜெ.குரு உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பொய் வழக்குகளில் தமிழக அரசு கைது செய்தது.

 இதில் ஜெ.குரு உள்ளிட்ட 122 பேரை குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகிய தடுப்புக் காவல் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

 ஒருவரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் இதைக் கருத்தில் கொள்ளாமல் பழிவாங்கும் நோக்குடன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஜெ.குரு உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மேல்முறையீடு செய்தனர்.

 விசாரணையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதற்கான 11 விதிகளில் ஒன்றுகூட பாமகவினர் விவகாரத்தில் கடைப்பிடிக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.

 இதனையடுத்து 20 பேர் மீதான நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. சட்டப்படியான நடைமுறைகளுக்குப் பிறகு விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவர். இதன் மூலம் நீதி வென்றுள்ளது. தமிழக அரசின் பழிவாங்கும் போக்குக்கு விழுந்துள்ள சம்மட்டி அடியாகும் இது.

 பாமகவினர் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்று தமிழக அரசு கூறி வந்த பொய்ப் புகாரும் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

   பொதுச் சொத்துக்கு சேதம்: அரசு விசாரணைக் குழு முன்பு பாமக எம்.எல்.ஏ. குரு ஆஜர்

 பொதுப் போக்குவரத்து மற்றும் அரசு பஸ்களுக்கு சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குழு முன்பாக, பாமக எம்.எல்.ஏ., குரு செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

 சென்னை அருகே மரக்காணம் கலவரச் சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையாளர் டி.எஸ்.ஸ்ரீதரை தலைவராகக் கொண்டு தமிழக அரசு குழு அமைத்துள்ளது. சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையாளர் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போதே பாமக தரப்பில் பதிலளிக்க ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில், அரசு போக்குவரத்து பஸ்களை சேதப்படுத்தியது தொடர்பாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பாமக எம்.எல்.ஏ. குரு செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

 அப்போது, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 ஏற்கெனவே, பாமக தரப்பில் பதிலளிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், பஸ்களை சேதப்படுத்தியது குறித்தும் அந்தக் காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் டாஸ்மாக் கடைகளைச் சேதப்படுத்தியது குறித்து விசாரிக்கப்பட்டது
 

0 கருத்துகள்:

Post a Comment