04 April 2017
இனி டீசல் - பெட்ரோல் தேவையில்லை மாட்டுசாண எரிவாயு பஸ் வந்தாச்சு!
இந்தியாவில் முதல் முறையாக மாட்டு சாணத்தால் தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு கொண்டு இயங்கும் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக டிக்கெட் விலை விண்ணைத் தொட்டுவிடும் அளவுக்கு உயர்ந்துவருகிறது. ஆனால், இதுகுறித்து
இனி கவலைப்படவே தேவையில்லை. மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தயாரித்து
சாதனை படைத்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு' நிறுவனம் மாட்டு சானத்தின் மூலம் தயாரிக்கப்படும் ‘பயோ-கியாஸ்' எனப்படும் இயற்கை எரிவாயுவை கொண்டு இயங்கும் பேருந்தை தயாரித்துள்ளது.
இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்த பேருந்தை, 17 கி.மீ-க்கு இயக்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கூட்டிச்செல்கிறது. மற்ற எந்த வாகனங்களைக் காட்டிலும் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனமாக இந்த பேருந்து இருக்கப்போகிறது.
இதற்காக இந்த நிறுவனம் ‘அசோக் லேலாண்ட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சாண எரிவாயுவில் ஓடுவதற்காக பிரத்யேக பஸ்ஸை தயாரித்தது. இந்த பஸ்ஸின் விலை சுமார் 13 லட்ச ரூபாய் ஆகும்.
கொல்கத்தாவின் உல்டாடங்கா பகுதியில் இருந்து காரியா பகுதி வரை முதல்முறையாக சான எரிவாயுவினால் இந்த பஸ் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
மாட்டின் சாணம், காய்கறி, செடி ஆகிய கழிவுகள் கொண்டு பயோ-கியாஸ் தயாரிக்கப்படுகிறது. இதில், மீதேன் எனப்படும் வாயுவே மூலப்பொருளாக உள்ளது. இது மாசு இல்லாத, மனம் அற்ற வாயுவாகும். இதனை உபயோகப்படுத்தி வாகனங்களை இயக்குவதோடு மின்சாரமும் தயாரிக்கலாம். இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு
விளைவிக்காத எரிபொருளாகும்.
இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் ஜோதி பிரகாஷ் தாஸ் கூறுகையில், "மேற்குவங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் இருந்து சான எரிவாயுவை தயாரிக்கிறோம்.இந்த வாயு ஒரு கிலோ தயாரிக்க எங்களுக்கு ரூ. 20 செலவாகிறது. ஒரு கிலோ எரிவாயு மூலம் 5 கி.மீ. வரை பஸ்ஸை இயக்கலாம். கொல்கத்தாவில் டீசலில் 17 கி.மீ.க்கு பஸ்ஸை இயக்க ரூ.12 செலவாகிறது. நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயு மூலம் பஸ்ஸை 17 கி.மீக்கு இயக்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும்" என்றார்.
"நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயுவை வர்த்தக ரீதியாக விற்பனை செய்ய 100 விற்பனை நிலையங்கள் அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளை சான எரிவாயு மூலம் இயக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்"
"15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை சாலையில் ஓட்டத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வாகனங்களை வைத்து இருக்கும் உரிமையாளர்கள் டீசல் எஞ்சினை மாற்றிவிட்டு பயோ-கியாஸ் மூலம் இயங்கும் எஞ்சினை பொருத்தலாம்" என அவர் மேலும் கூறினார்.
இந்த பேருந்தில் உள்ள எரிபொருள் கலனில் 80 கிலோ பயோ-கியாஸை நிரப்பலாம். இதனைக் கொண்டு 1,600 கிமீ தூரத்தை கடக்கலாம். இயற்கை எரிவாயுவால் இயங்குவதால் அது பேருந்தின் ஆயுளையும் அதிகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிக விலை கொண்ட பெட்ரோல், டீசலுக்காக வெளிநாடுகளின் தயவை எதிர்பார்க்காமல், வீணாகும் மாட்டு சாணம் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த, மிக மலிவான இந்த இயற்கை எரிவாயுவை அதிகம் உற்பத்தி செய்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கும் என்பதே அனைவரின் விருப்பம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Subscribe to:
Posts (Atom)