Search This Blog n

26 June 2022

பாலின உறவு: இலங்கை நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண்

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு வந்து, இங்குள்ள தனது நண்பியுடன் சேர்ந்து வாழப் போவதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளா
இந்திய தமிழ் பெண் (24 வயது) ஒருவருக்கும், இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெண் (19) ஒருவருக்கும் இடையில் தொலைபேசி வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண், தனது நண்பியைச் சந்திப்பதற்காக கடந்த 20ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். பின்னர் அவர் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்றிலுள்ள இலங்கை நண்பியின் வீட்டுக்குச் சென்று, அவரை இந்தியா அழைத்துச் செல்லப் போவதாகவும் அவருடனேயே வாழப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கு இலங்கை நண்பியும் இணங்கியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை பெண் – ஒன்றரை வயது பெண் குழந்தையொன்றின் தாய் என்பது 
குறிப்பிடத்தக்கது.
தனது கணவருடன் இவர் வாழ்ந்து வந்த நிலையிலேயே, இந்த முடிவை எடுத்துள்ளார் என அவரின் குடும்பத்தார் 
கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த மேற்படி பெண், இலங்கை நண்பியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டதாகவும், அவ்வாறு செய்யாது விட்டால், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும், இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து அக்கரைப்பற்று காவல் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்ததாக இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெண்ணின் தோழியொருவர் இந்தியாவில் வசித்து வருகின்றார். அவர் மூலமாகவே, குன்னத்தூரைச் சேர்ந்த பெண்ணின் தொடர்பு – இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் சில காலம் தொலைபேசி, வாட்ஸ்ஆப் மூலமாகப் பேசி, நட்பு வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இந்திய பெண் – தன்னுடைய இலங்கை தோழியின் வீடு தேடி வந்து, தனது விருப்பத்தை 
வெளிப்படுத்தியுள்ளார்.
தனது கணவரின் வீட்டிலிருந்து கிளம்பி வந்து, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றிலுள்ள தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் இலங்கைப் பெண் தங்கியிருக்கிறார்.
காவல் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, குறித்த பெண்கள் இருவரையும் கடந்த புதன்கிழமை (22ஆம் திகதி) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இதன்போது சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரின் விளக்கங்களையும் கேட்ட நீதவான் ,அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்தமையினால், இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநல வைத்தியரிடம் காண்பித்து, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த அறிக்கையினை ஜூன் 27ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து குறித்த இருவரும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம் 
அறிய முடிகிறது.
இதன் பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>






0 கருத்துகள்:

Post a Comment