டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, நான்கு பேர் மீதான குற்றங்களும், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குற்றவாளிகள்' என, டில்லி விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நாடு
ழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, மக்கள் மத்தியில் ஆவேசத்தை உருவாக்கிய இந்த வழக்கில், ஒன்பது மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை, பலரும் வரவேற்றுள்ளனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. அனேகமாக, மரண தண்டனை வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு டிசம்பர், 16ல், டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவியும், அவரது ஆண் நண்பரும், இரவு நேரத்தில், ஒரு பஸ்சில் ஏறினர். அந்த பஸ்சில் இருந்த, ஆறு பேர் கும்பல், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு,
அவரையும், அவரின் ஆண் நண்பரையும் கடுமையாக தாக்கியது. பின், பஸ்சிலிருந்து இருவரையும் தூக்கி வீசியது.டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர நிகழ்வு, டில்லியில் பெரும், கொந்தளிப்பை
ஏற்படுத்தியது.பெண்கள், மாணவர்கள் என, ஏராளமானோர் திரண்டு வந்து, டில்லி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். "குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்' என, போராட்டங்கள் நடத்தினர்.இந்த கொடூர பலாத்கார சம்பவம் தொடர்பாக, பஸ் டிரைவர், ராம்சிங், அவனின் நண்பர்கள், வினய் சர்மா,பவன் குப்தா, அக்ஷய் சிங், முகேஷ் மற்றும் மைனர் சிறுவன் ஒருவன் என, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், மைனர் சிறுவன் மீதான வழக்கு, டில்லி சிறார் நீதி வாரியத்தில் நடந்து, அவனுக்கு, சமீபத்தில்
, மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஐந்து பேரும், திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், பஸ் டிரைவர் ராம்சிங், கடந்த மார்ச்சில், சிறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.அதனால், மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த, 3ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில், விரைவு கோர்ட்டின், கூடுதல் செசன்ஸ் நீதிபதி யோகேஷ் கன்னா, 237 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை, நேற்று வெளியிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட, வினய் சர்மா,, பவன் குப்தா, அக்ஷய் சிங் மற்றும் முகேஷ் மீது, கொலை செய்தல், கூட்டமாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் தடயங்களை அழித்தல் போன்ற
பிரிவுகளின் கீழ், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், நான்கு பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்படுகிறது. மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சிகிச்சையின் போது, நோய் தொற்று
ஏற்பட்டது போன்றவையே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான, மருத்துவ மாணவியின் மரணத்திற்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், முன்வைக்கப்பட்டவாதத்தை ஏற்க முடியாது; அதை தள்ளுபடி செய்கிறேன். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களாக நடைபெற்றது. விசாரணையின் போது, 100 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், 18 பேர் சாட்சியம் அளித்தனர். இருப்பினும், பலாத்காரத்தில் பலியான, மருத்துவ மாணவியோடு, பஸ்சில் சென்றவரும், ஆறு பேர் கும்பலால் பலமாக தாக்கப்பட்டவருமான, மாணவியின் ஆண் நண்பர், சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதால், அவரது சாட்சியம்,
வழக்கில் முக்கியமானதாக கருதப்பட்டது. அது மட்டுமின்றி, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது, உயிருக்கு போராடும் நிலையில், மாணவி அளித்த மரண வாக்குமூலமும், போலீசாருக்கு வழக்கை விரைவாக முடிக்க, பெரும் உதவியாக இருந்தது.நாடு முழுவதும் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும், பரபரப்பாக பேசப்பட்ட, இந்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று தீர்ப்பு வெளியாக இருந்ததால், டில்லி சாகேத் கோர்ட்டில், தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாது, சர்வதேச ஊடகங்களும், அணிவகுத்து நின்றன. கோர்ட் முழுவதும், பெரிய அளவில், கூட்டம் காணப்பட்டது. நேற்றே தண்டனை அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தண்டனை விவரம், இன்று வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்ட நான்கு பேருக்கும், மரண தண்டனை விதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு பேருக்கும் மரண தண்டனை- மாணவியின் பெற்றோர் கோரிக்கை: "எங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்படவில்லை எனில், அது சரியானநீதியாகாது' என, மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:எங்கள் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்பது மாதங்களாக, நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் மகளிடம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட, நான்கு பேரும் தூக்கிலிடப்பட வேண்டும்.இந்த வழக்கைப் பற்றியே, கடந்த சில மாதங்களாக, நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். என்ன நிகழுமோ என்ற
எதிர்பார்ப்பில் இருக்கிறோம். சிறார் நீதி வாரியத்தில், மைனர் சிறுவனுக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, எங்களை நிலை குலையச் செய்தது.தற்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனையை விட, குறைவான தண்டனை வழங்குவதை, நாங்கள் விரும்பவில்லை. இந்த வழக்கில், வழங்கப்படும் தீர்ப்பு, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். இதுபோன்ற கொடூர செயல்களில், இனி யாரும் ஈடுபடக்கூடாது.இவ்வாறு, மாணவியின் பெற்றோர் கூறினர்.
இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தால் தான், இதைப் பார்த்து, இது போன்று குற்றம் செய்ய நினைப்பவர்களும் அஞ்சுவர். நாட்டிற்கே இந்த தண்டனை முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.