Search This Blog n

02 September 2013

இந்திய ராணுவ வீரரின் உடல் 45 வருடங்களின்பின் இமயமலையில்


கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் ஏற்பட்ட ராணுவ விமான விபத்து ஒன்றில் இறந்த ராணுவவீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
இறந்தவருக்கு ராணுவத்தின் இறுதி மரியாதையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மோசமான வானிலை காரணமாக அவரது சடலத்தைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ராணுவத்தின் தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜக்மாயில் சிங் என்று அறியப்பட்ட அந்த வீரர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மொத்தம் 102 பேர் சண்டிகரின் மூடுபனியால் சூழப்பட்ட விமானதளத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் இமயமலையில் உள்ள லே நகரத்திற்கு பயணமானார்கள். 13,050அடி உயரத்தில் ரோதங் கணவாய் அருகே பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்திலிருந்து கடைசியாக செய்தி வந்துள்ளது. அதன்பின்னர், அந்த விமானம் மறைந்துபோனது.
கடந்த 2003-ம் ஆண்டில் இமயமலையில் மலையேறும் குழுவினர் விமானத்தின் சிதிலங்களைக் காண நேரிட்டது. அதனருகில் ராணுவ வீரர் ஒருவரின் உறைந்த உடலின் பகுதி ஒன்றையும் அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர், இந்திய அரசு மூன்று தேடுதல் குழுவினை இதற்காக நியமித்தது. 2009-ம் ஆண்டு வரை தேடியதில், இவர்கள் மேலும் நான்கு சடலங்களை மீட்டனர்.
தற்போது ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் மீண்டும் ஒரு குழுவினர் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் இருந்த பதிவுக்கருவியையும் இவர்கள் தேடி வகின்றனர். இது கிடைத்தால் விபத்துக்கான காரணத்தை அறியமுடியும் என்று கூறப்படுகின்றது. ஜக்மாயில் சிங்கின் சடலமும் அவரது ராணுவ சீருடையாலும், அவரது பையில் இருந்த ஆவணங்களாலும் கண்டறியப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடமிருந்து வந்த ஒரு கடிதமும், காப்புறுதி குறித்த கடிதம் ஒன்றும் அவரது பையில் காணப்பட்டது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் 18,000அடி உயரத்தில் உள்ள டாக்கா பனிச்சிகரத்தின் அருகில் இந்த சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
இமயமலை மீது பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கி இறக்க நேரிட்டால் அது ஒரு பனி நிறைந்த இடுகாடாகவே இருந்து வருகின்றது.1924-ம் ஆண்டு இம்மலையின் உயரமான சிகரத்திற்கு ஏற முனைந்த ஜார்ஜ் மல்லாரி என்ற பிரிட்டிஷ் நாட்டவரின் சடலம் 1999-ம் ஆண்டு மலையேறிய குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது. இதுபோல் இன்னும் கண்டெடுக்கப்படாத மரணங்கள் எத்தனையோ அம்மலையின் பனிப்பாறைகளுக்குள் புதைந்திருக்கக் கூடும்

0 கருத்துகள்:

Post a Comment