ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
ராணுவத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 மாடிகள் கொண்ட ஆதர்ஷ் கட்டடத்தில் தனது பினாமிகளுக்கு வீடுகளைப் பெற்றுத் தந்தார் ஷிண்டே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சமூக சேவகர் பிரவீண் வடேகோவன்கர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் மறைந்த மேஜர் என்.கே. கான்கோஜை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஷிண்டே வலியுறுத்தினார். வீடு பெற தகுதியுள்ளவர்களாக 71 பேரின் பட்டியல் அளிக்கப்பட்டபோது, அதில் 51 பேர் குறித்து மறுஆய்வு செய்யுமாறு முதல்வராக இருந்த ஷிண்டே உத்தரவிட்டிருந்தார். இதுவே வீடுகளின் ஒதுக்கீடுகளை பினாமிகள் பெற வழி வகுத்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சிபிஐ இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், 'இந்த வழக்கில் ஷிண்டே மீது குற்றம்சாட்டி, சட்டப்படி விசாரணை நடத்துவது தேவையில்லை என கருதுகிறோம். நாங்கள் நடத்திய விசாரணையில் கன்கோஜுக்கும், ஷிண்டேவுக்கும் எந்தவிதமான தொடர்பும்
இருப்பதாகத் தெரியவில்லை. இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக விசாரணை ஆணையத்தின் முன் கித்வானி என்பவர் தெரிவித்த சாட்சியத்துக்கு ஆதாரமில்லை. ஷிண்டே தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்பதற்கும் போதிய ஆதாரமில்லை' என்று சிபிஐ தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.ஹரிதாஸ், பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
0 கருத்துகள்:
Post a Comment