Search This Blog n

25 September 2013

ரூ.58 ஆயிரம் கோடி செலவு செய்துள்ள இந்தியா :


 இலங்கையின் மறு சீரமைப்பு பணிக்காக இந்தியா ரூ.58 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய தொழில் வர்த்தக துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:

தோல் கழிவுநீரினால் ஏற்படும் பாதிப்புகளை தீர்ப்பதற்காக மத்திய அரசின் மூலம் திண்டுக்கல் உள்பட 6 இடங்களில் ரூ.100 கோடி மதிப்பில், கழிவுநீரை சுத்தப்படுத்தி மறு சுழற்சி மூலம் மீண்டும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாத வண்ணம் தடுக்கப்படும்.

இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர் கட்சி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ராஜீவ்காந்தி– ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அரசு சரியாக செயல்படுத்தவில்லை. சம உரிமை, ஆட்சி மொழி அந்தஸ்து ஆகியவை தரப்படவில்லை. இப்போது தேர்தல் நடத்தப்பட்டு 80 சதவீதம் தமிழ் மக்களின் வாக்குகளில் 70 சதவீத மக்களின் வாக்குகளை வாங்கி தமிழ் தேச கூட்டமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது. இப்போதுதான் ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையும்.

இந்த புதிய அரசுக்கு 37அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். முக்கியமாக காவல்துறை கொடுக்கப்படவேண்டும். சிங்களர்கள் அல்லாத தமிழ் போலீஸ்காரர்கள் நியமிக்கப்படவேண்டும். 2½ லட்சம் அகதிகளுக்கு வீடுகள், நிலங்கள் கொடுக்கப்பட வேண்டும். இந்திய அரசு இதற்கு துணை நிற்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கையில் தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசுக்கு ஆதரவு தர வேண்டும். இதன் மூலம் அரசை வலிமைப்படுத்த வேண்டும். இலங்கை அரசோடு பேச்சு நடத்த துணை நிற்கவேண்டும்.

இலங்கையில் மறு சீரமைப்புக்காக இந்திய மக்களின் பணம் சுமார் ரூ.58ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இலங்கையில் ரெயில் தண்டவாளம், சாலைகள் அமைக்கும் பணிகளை நமது அரசே செயல்படுத்தியது. வீடுகள் ஆரம்பத்தில் நமது ஒப்பந்ததாரர்களை வைத்து கட்டி கொடுக்கப்பட்டது. இப்போது தனி தனி வீடுகளை அவர்களே கட்டி கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள், மீனவர் வலைகள், 75 பள்ளிகூடம், 11 புதிய மருத்துவமனைகள் என பல வகை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறையே நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவை போல இவர்தான் பிரதமர் என முன் கூட்டியே அறிவித்து வாக்கு கேட்கும் முறை நமது நாட்டில் இல்லை. மீனவர் பிரச்சினை பேசி தீர்க்கப்பட வேண்டும். ராணிப்பேட்டையில் 25 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட ரசாயன தொழிற்சாலையில் உள்ள குரோமியக் கழிவு விஷத்தை கலக்கிறது. இதை அகற்ற மாநில அரசு

நடவடிக்கை எடுத்தால் மத்திய அரசு துணை நிற்கும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விவரம் கேட்கப்பட்டுள்ளது. சிப்காட்டில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறக்க மாநில அரசுடன் மத்திய அரசும் துணை நிற்கும். கழிவுநீரால் பாதிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் பயன்படுத்தும்வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்

0 கருத்துகள்:

Post a Comment