தமிழகத்தில் சுற்றுலாத் துறையை வளர்க்கவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் பச்சமலை, முத்துப்பேட்டை ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா நேரடி வேலை வாய்ப்பினை உருவாக்குவதோடு, அதன் மறைமுக தாக்கமாக உள்ளுர் மக்களின் மேம்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. நாட்டின்
ஒருமைப்பாட்டினை வளர்ப்பதிலும், மாணவ, மாணவியரிடையே சிந்தனை கிளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், அறிவுப் புரட்சியை தோற்றுவிப்பதிலும், சுற்றுலா முக்கிய பங்காற்றுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது
. தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, புதிய சுற்றுலா மையங்களை தெரிவு செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சமலை பகுதியினை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டுகளிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுலாத் தலமாக உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பச்சமலை 527.61 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 160 முதல் 1,072 மீட்டர் உயரம் உள்ளது. இம்மலைப்பகுதியில் 35 காப்பு காடுகள் 19,075 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ளன. இம்மலைப் பகுதியிலிருந்து இயற்கை எழில் மிகுந்த கொல்லிமலையை ஒரு புறமும், துறையூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளை மற்ற இரு பகுதிகளிலும் கண்டு களிக்கலாம்.
இப்பகுதியில் 154 விதமான பறவையினங்கள் வாழ்கின்றன. 135 விதமான பட்டாம்பூச்சி வகைகளும் உள்ளன. இங்கு உள்ள 3 மான்கள் வாழிடத்தில் சுமார் 50 மான்கள் வாழ்கின்றன. இதற்கு அருகே உள்ள சோலைமதி காப்புக் காட்டில் இந்திய சாம்பல் அணில்கள் காணப்படுகின்றன. மேலும் காட்டுப்பூனை, மரநாய், மலைப்பல்லி, மயில், குரங்கு, பறவைகளைக் கொல்லும் சிலந்தி, கண்ணாடி விரியன் பாம்பு ஆகிய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.
இந்த மலையில் மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் பெரியபக்களம், கோரையாறு அருவிகள் உள்ளன. இம்மலையில் ஏறுவதற்கு கணபாடி-கன்னிமார்சோலை பாதை, கணபாடி-ராமநாதபுரம் பாதை ஆகிய இரு பாதைகள் உள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பச்சமலைப் பகுதியை அதிக அளவு பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்படுத்திட 2 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் கோரையாறு மற்றும் பெரியபக்களம் அருவிகளை மேம்பாடு அடையச் செய்வது, காட்சி கோபுரங்கள் அமைத்தல், மலையேற்றப் பாதை மேம்பாடு, பாரம்பரிய மூலிகைப் பண்ணை மேம்பாடு, சுற்றுச் சூழல் சிறுவர் பூங்கா அமைத்தல், செங்காட்டுப்பட்டி பகுதியில் மரஉச்சி வீடுகள், மலையேற்றப் பகுதியில் நிலச்சீரமைப்பு, துயில்கூடம் கட்டுதல்,
சமையலறை, உணவகம் கட்டுதல், உணவகத்திற்கான உபகரணங்கள் வாங்குதல், செங்காட்டுப்பட்டி வன ஓய்வு இல்லத்தில் கூடுதல் அறைகள் கட்டுதல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய விருந்தினர்
மாளிகையை புனரமைத்தல் போன்ற மேம்பாட்டுப் பணிகளும், தெரு கூத்து மேம்பாடு, மாட்டு வண்டிகள் வாங்குதல், குதிரை வண்டிகள் வாங்குதல், மலைவாழ் சுற்றுச்சூழல் குழுக்களுக்கு ஆதரவு அளித்தல், விளம்பரம், அறிவுப் பலகைகள் அமைத்தல், சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்காக
ணையதளத்தில் வலைதளம், வழிகாட்டிகள் பயிற்சி, சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு தேவையான பைனாகுலர், மலையேற்றப் பைகள் போன்றவை வாங்குதல், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான அறைகலன்கள், படுக்கைகள் வாங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கழிமுகப்பகுதியினை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மாங்குரோவ் சதுப்புநிலக் காடு முத்துப்பேட்டை. இது 11,885 ஹெக்டேர் நிலப்பரப்பில்
அமைந்துள்ளது; முத்துப்பேட்டை கழிமுகத்தில் மாங்குரோவ் காடுகள், சிற்றோடைகள், கடற்கரைக் காயல், மணல்மேடுகள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இப்பகுதியில் வாழ்வதற்கென நூற்றுக்கணக்கான விதவிதமான வெளிநாட்டு நீர்ப் பறவைகள் வருகின்றன. அவற்றில் கிரே பெலிக்கன் (பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளமிங்கோ (பூநாரை), டார்டர்
(பாம்புத் தாரா), பின்டெயில் டக் (ஊசி வால் வாத்து) பெயின்டட் ஸ்டாக் (செங்கால் நாரை) ஆகியவை முத்துப்பேட்டையில் காணப்படும் முக்கிய பறவை இனங்களாகும். குள்ளநரி, பழந்தின்னி வெளவால் ஆகிய பாலூட்டிகள் இங்கு வாழ்கின்றன. முத்துப்பேட்டை கழிமுகத்தில் உள்ள முள்ளிப்பாலம்
காயல் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை காயல் ஆகும். இது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. காவேரி ஆற்றின் கிளை நதிகளான நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு, மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஒதுக்கீட்டின் மூலம்
கண்ணாடி இழைப் படகுகள் வாங்குதல், மர வீடுகள் அமைத்தல், வரவேற்பு மையம் கட்டுதல், காட்சி கோபுரம் அமைத்தல், மரப்பாலம், அணுகுசாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பச்சமலைப் பகுதி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment