ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழகத்தின் அவமானமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி.
சென்னை வந்த அவர் அங்கு நாய்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளைகள் காயமடைகின்றன. கொடுமைப்படுத்தப்படுகின்றன.
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளை அடக்கும்போது காயமடைகின்றனர். சிலர் உயிரிழக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் கலாசாரம் என்று கூறி அரசியல்வாதிகள் இளைஞர்களைத் தூண்டிவிடுகின்றனர். மகர சங்கராந்தி பண்டிகைக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று, இதனை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் தெரியும்.
ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் பெருமையல்ல; அது அவமானம்தான். எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும்.
இந்திய நாய்கள் குறித்த கண்காட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்பட வேண்டும். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு நம் நாட்டில் 28 வகையான நாட்டு நாய்கள் இருந்தன. அவை அனைத்தும் தனித்தனி திறமைகளை உள்ளடக்கியவையாக இருந்தன.
ஆனால், ஆங்கிலேயர் வந்ததும் நம் நாய்களை விரட்டியடித்துவிட்டு, அவர்கள் நாட்டின் நாய்களை இறக்குமதி செய்து நம் நாட்டு நாய்களை கேவலமாக நடத்தினர். அவற்றின் விளைவாக ஒரு சில நாட்டு நாய்களின் வகைகள் அழிந்துவிட்டன. எனவே நம் மக்கள் நமது நாட்டு நாய்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் மேனகா. அதேசமயம், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்
0 கருத்துகள்:
Post a Comment