'பராசக்தி’...கருணாநிதிக்கும் சிவாஜிக்கும் திரை யுலக வாசலை அகலமாகத் திறந்து வைத்த திரைப்படம். அந்தப் படம் வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை, வைர விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் ரசிகர்கள்!
மதுரையில் சிவாஜி சமுக நலப் பேரவை சார்பில் நடந்த இந்த விழாவுக்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., ஜனதா தளம் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அழைக்கப்பட்டது அரசியல்ரீதியான எதிர்பார்ப்புகளைக் கிளப்பியது. விழாவில் கருணா நிதியை மெச்சிப் பேசிய சிவாஜி ரசிகர்கள், காங் கிரஸைக் கடுமையாக விமர்சித்தனர்.
காங்கிரஸ் பிரமுகரான காந்தி, அரசியல் விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ''சிவாஜி மன்றம்தான் மதுரையில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்கு சிவாஜி ரசிகர்களின் உழைப்புதான் காரணம். மூப்பனார் காங்கிரஸ் தலைவராவதற்குப் பாடுபட்டதும் சிவாஜி ரசிகர்கள்தான்'' என்று அவர் பேச, ஆர்ப்பரித்தது ரசிகர் கூட்டம்.
காங்கிரஸ் கட்சியின் பிற்பட்டோர் நலப் பிரிவு செயலாளர் சிதம்பர பாரதி, ''ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் கலைத் துறையைச் சேர்ந்தவர்களை மதித்தனர். தான் இறப்பதற்கு முதல்நாள்கூட நேரில் சென்று, சிவாஜி கணேசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார் காமராஜர். அவருக்குப் பிறகு, யாரும் கலைத் துறையினரை மதிக்காத காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி வீழ்ந்தது. இன்னும் எழ முடியவில்லை'' என்றார்.
ஜனதா தளத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ் பேசும்போது, ''இந்தியாவிலேயே சமூகத்துக்காகவும் தேசத்துக்காகவும் நடித்த ஒரே நடிகன் சிவாஜி. சினிமாவில் நடிக்கத் தெரிந்த நம் நடிகர் திலகத்துக்கு, மக்களிடம் நடிக்கத் தெரியவில்லை. ஏழைகளைக் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கத் தெரியவில்லை. அதனால் அவர் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை'' என்று எம்ஜி.ஆரைக் குத்திக் காட்டினார்.
தி.மு.க. எம்.பி-யான திருச்சி சிவா, ''சிவாஜியின் பெயரைச் சொன்னதும், ஒரு நகரில் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்றால், தமிழகம் முழுவதும் எவ்வளவு பேர் இருப்பார்கள். இப்படிச் சிதறிக் கிடப்பவர்களை இது வரை யாரும் ஒருங்கிணைத்து பயன்படுத்தவில்லை. உங்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு உரிய இடத் தில் எடுத்துரைப்பேன்'' என்று நாடாளுமன்றத் தேர் தலை மனதில் வைத்துப் பேசினார்.
இந்தவிழாவில் அரசியல் ஓங்கி ஒலித்தது குறித்து, விழா அமைப்பாளரான சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரனிடம் கேட் டோம். ''இங்கே பேசியவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்பதால், அதை காங்கிரஸ் மீதான விமர்சனமாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. சிவா என்ன அர்த்தத்தில் பேசினார் என்று தெரிய வில்லை. எந்த இயக்கம் ஆதரவு கேட்டாலும், எங்கள் பதில் ஒன்றுதான். சிவாஜிக்கு நாங்கள் எதிர்பார்க்கும் மரியாதைகளை செய்வோம் என்று உறுதிமொழி தாருங்கள். நாங்கள் உழைக்கிறோம்'' என்றார்.
அரசியல் இருக்கட்டும்... கிடப்பில் போட்டிருக்கும் மணிமண்டபத்தைக் கட்டட்டும்!
0 கருத்துகள்:
Post a Comment