சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராகிமின் உறவினருமான மியான்தத்துக்கு விசா கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தன் இந்திய பயணத்தை அவர் ரத்து செய்தார். |
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 200 பேர்
கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகீம், பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார். இவரது மகளை பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர், ஜாவேத் மியான்தத்தின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மியான்தத், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரியாக பதவி வகிக்கிறார். இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் சர்வதேச ஒருநாள் போட்டி நாளை டெல்லியில் நடக்கவுள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்காக மியான்தத்துக்கு மத்திய அரசு விசா அளித்திருந்தது. இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பியான ஜெகதாம்பிகா பாலும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது: மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாவூத்தின் உறவினரான மியான்தத்துக்கு விசா அளித்திருப்பது நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல் ஆகும். மேலும் அனைத்து தரப்பிலும் மியானுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தன் இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்வதாக அவர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது |
0 கருத்துகள்:
Post a Comment